முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்வதற்காக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபிறகு முதலமைச்சர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இந்தநிலையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனையின்படி முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டனிலிருந்து அவர் தரும் ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவர்கள் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அப்போலோ மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டியின் மகளும், நிர்வாக இயக்குநருமான சங்கீதா ரெட்டி தெரிவித்துள்ளார்.சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் விடுப்பில் உள்ள காவலர்கள்‌ உள்பட அனைத்து காவலர்களும் பணிக்கு திரும்புமாறு, தமிழக டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

முழுமையான சீருடையில் இன்று காலை 7 மணிக்கு அனைத்து காவலர்களும் ஆஜராகுமாறு டி.ஜி.பி அலுவலக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்தந்த மாவட்ட எஸ்.பி, மாநகர காவல் ஆணையர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்தில், டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் தலைமையில் உயர் காவல் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் விடிய விடிய நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி திரிபாதி, உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே, சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் இரவு காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போலோ மருத்துவமனையை சுற்றி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், அங்கு நிலவும் சூழ்நிலையை கையாள்வது குறித்து ஆலோசித்ததாக தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசாரும், 500 கமாண்டோ வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.