அறிவழகன் கைவல்யம்

திராவிட அரசியல் இயக்கத்தின் அடிநாதமான சமூக நீதியை ஒருபோதும் அவர் தவறாகப் புரிந்து கொண்டதாக எனக்கு நினைவில்லை, அ.தி.மு.க என்கிற மிகப்பெரிய அரசியல் இயக்கத்தை கட்டுக்குலையாமல் ஆளுமை செய்த அவருடைய தீவிர உழைப்பு ஒருவகையில் காவிக் கோட்பாட்டை தமிழகத்தின் சமூக அரங்குகளில் உள்நுழைய விடாமல் மறைமுகமாகவேணும் தடுத்தது.

இவற்றை எல்லாம் தாண்டி, ஆண்களின் தனிப்பெரும் கோட்டையாக இருந்த அரசியல் களத்தில் ஒரு பிடரி சிலிர்க்கும் ஒரு ஆவேசப் பெண்ணாக, தான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை (அகந்தையை) முதல் குறியீடாகக் கொண்டிருந்தார், ஒருபோதும் அரசியலில் அவர் சந்தித்த பின்னடைவுகளையும், அவமானங்களையும் “பெண்” என்கிற அடைப்புக்குள் அவர் கொண்டு சென்றதில்லை.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தாக்கம் தமிழ்ச் சமூகப் பெண்களிடம் அரசியலைத் தாண்டி வெகு ஆழமாக உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறது, சக மனிதர்களின் துயரம் விலை மதிப்பற்றது, நேற்று இரவில் இருந்தே துணைவியார் அழுது கொண்டிருக்கிறார், அம்மாவைப் பார்த்து நிறைமொழியும் அழுததாகச் சொன்னார்கள்.

என்னோடு வாழும் இந்த சக மானுடர்களின் கண்ணீரில் பொதிந்திருக்கும் நுட்பமான அன்பையும், அளவற்ற துயரத்தையும் சக மனிதனாக என்னால் உணர முடிகிறது. அதற்காகவே உங்கள் மரணம் சொல்லமுடியாத ஒரு துயர மனநிலையை உருவாக்குகிறது. தமிழகம் என்றில்லை, நான் வாழும் கர்நாடக மாநிலத்தின் பெண்களில் பலர், மாணவர்களில் பலர் முதல்வர் ஜெயலலிதா குறித்த ஒரு பிரம்மாண்ட வரைபடத்தைத் தங்கள் இதயங்களில் வரைந்து வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் சில காலங்களுக்கு முன்பு வரை தலைவர் கலைஞரை அவர் ஒருமையில் கருணாநிதி என்று மேடைகளில் அழைப்பது நெருடலாகவும், வெறுப்பைக் கூட்டுவதாகவும் இருந்தது, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மேடைகளில் இருந்து திரு.கருணாநிதி என்று அழைக்கத் துவங்கினார். மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருந்தது.

“சகிப்புத்தன்மையைப் பழகும் ஒரு பயிற்சியில், உங்கள் எதிரியே உங்கள் ஆகப்பெரிய ஆசிரியன்” என்று சொல்வார் “தலாய் லாமா”, அப்படித்தான் ஜெயலலிதா ஒரு மதிப்புக்குரிய எதிரி எங்களுக்கு…

உங்களைப் பிரிந்து இந்த இரவில் தமிழ்ச் சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் கதறிக் கொண்டிருக்கும் எண்ணற்ற உழைக்கும் எளிய மக்கள் எமது மக்கள், அந்த எளிய மக்களின் அன்புக்கும், துயருக்குமான அடையாளமாய் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினனாய் கண்ணீர் அஞ்சலி.
முதன் முறையாக எந்தக் குறியீடுகளும், அடைமொழிகளும் இல்லாமல் அந்த ஒற்றைச் சொல்லை எழுதுகிறேன்,

“அம்மா”…..சென்று வாருங்கள், அமைதியுறுங்கள்.

அறிவழகன் கைவல்யம், பதிவர்; சமூக-அரசியல் விமர்சகர்.