ஜி. கார்ல் மார்க்ஸ்

நேற்று மதியம் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு கிளம்பினேன். மேல்மருவத்தூரைக் கடக்கும்போது, சாலையில் பதட்டத்தை உணர்ந்தேன். வாகனங்கள் தறிகெட்ட வேகத்தில் செல்லத்தொடங்கின. அப்போதுதான், ஜெயலலிதா இறந்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்தி ஒலிபரப்பப் படுவதாக வீட்டிலிருந்து தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள்.

சென்னையை நோக்கி வந்த வாகனங்கள், சென்னையில் இருந்து வெளியேறிய வாகனங்கள் எல்லாமே அதீத அச்சத்தில் சென்றுகொண்டிருந்ததை உணரமுடிந்தது. நிறைய பேருந்துகள் உடனே நிறுத்தப்பட்டிருந்தன. மக்கள் சாலையின் இருபுறமும் மூட்டை முடிச்சுகளுடன் நடந்து செல்வதையும் காண முடிந்தது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஆனாலும் தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசலுக்கு மட்டும் எந்த குறையுமில்லை.

தாம்பரத்தைக் கடந்து சென்னைக்குள் நுழைந்தால் அது சென்னை போலவே இல்லை. சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. ஏழு மணி தான் இருக்கும். அப்போது தான், தொலைகாட்சிகளில் ஒலிபரப்பப்பட்ட செய்தி தவறு என்றும், அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது என்றும் அப்பல்லோ மறுப்புச் செய்தி வெளியிட்டிருப்பதாக மீண்டும் வீட்டிலிருந்து சொன்னார்கள். என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. செய்தி என்னவோ உண்மைதான்; நள்ளிரவில் அறிவிப்பதற்காக இப்போது மறுத்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

செல்லும் வழியெங்கும், சென்னையின் பல தெருக்களில் வாசல்களில் மக்கள் நின்று பேசிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. வன்முறையின் சுவடுகள் இல்லாமல் இருந்தது ஆசுவாசமாக இருந்தது. சென்னையை நெருங்கும்போது இருந்த பதட்டம் சென்னையின் உள்ளே இல்லை. மூன்று மணி நேரத்துக்கு முன்பே மக்களிடம் இந்த செய்தி பரவியதால், எல்லாரும் வீட்டை அடைந்துவிட்டிருந்தார்கள். வன்முறை எதுவும் இல்லையே ஒழிய அது குறித்த அச்சம் பரவியிருந்ததை நண்பர்களின் குரலில் அறிய முடிந்தது. மீடியாக்கள் மிகவும் பொறுப்பற்ற முறையில் இந்த செய்தியைப் பரப்பியிருந்தன.

போயஸ் கார்டன் வழியாக இரவு எட்டு மணியளவில் மைலாப்பூர் சென்றபோது அந்த சாலை முகப்பில் வழக்கத்தை விட கூடுதலான போலிஸ் குவிக்கப்பட்டிருந்தது. அது சொன்ன செய்தி மிகத் தெளிவானது. அப்பல்லோவின் மறுப்பு என்பது நிர்வாக ரீதியான ஏற்பாடுகளை செய்வதற்கான அரசு எடுத்துக்கொள்ளும் அவகாசம்.
காலை ஐந்து மணிக்கு எழுந்ததில் இருந்து அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதை தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கும் கட்சித் தொண்டர்களின் கண்ணீரால் நிறைகிறது ஓமாந்தூரார் தோட்டம். ஆனால் அந்தக் கண்ணீர் எட்ட முடியாத உயரத்தில் அவர் வைக்கப்பட்டிருக்கிறார். எல்லா காலத்திலும் அவர் அவ்வாறு தான் இருந்தார்.

அழுது அழுது மயங்குகிறார்கள் பெண்கள். படிக்கட்டுகளில் வரிசை மாறாமல் அமர்ந்திருக்கிறார்கள் மந்திரிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும். சசிகலா நீண்ட நேரமாக அருகில் நின்று கொண்டிருக்கிறார். அவரைச் சுற்றி அவரது உறவினர்கள். எப்போதும் ஜெவை சுற்றி அவர்கள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் இருப்பார்கள்.

வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு வெள்ளமென பாய்கிறார்கள். இந்த மூர்க்கமான அன்புதான் தனது அரசியல் வாழ்வில் ஜெயலலிதா சம்பாதித்த மிகப்பெரும் சொத்து. அவர் மீதான எல்லா விமர்சனங்களையும் மீறி அவர் பெரும் மக்கள் திரள் ஒன்றால் மிகத் தீவிரமாக நேசிக்கப்பட்டார். எப்போதும் நேசிக்கப்படுவார்.

அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்!