சந்திரமோகன்

தோழர்.கணேசன்/பி.வி.எஸ் என்று தமிழக நக்சல்பாரி இயக்கத்தில் நன்கு அறியப்பட்ட தோழர்.பி.வி.சீனிவாசன் அவர்கள், நோய்வாய்ப் பட்டிருந்த நிலையில், இன்று டிசம்பர் 6 அதிகாலை சுமார் 3.30 மணியளவில், டில்லியில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவருக்கு வயது 79.

டில்லியில் உள்ள CPIML Liberation கட்சி அலுவலகத்தில் தோழரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதி மரியாதைக்குப் பிறகு எரியூட்டப்படவுள்ளது.

செவ்வணக்கம்!

நக்சல்பாரி இயக்கத்தின் ஆளுமை : புரட்சிகர இலட்சியங்களை நெஞ்சில் ஏந்திய, களத்தில் இறங்கிய தலைவர் பி.வி.எஸ்

60 களில், வறுமையின் காரணமாக பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு குடியேறி, தாசப் பிரகாஸில் ஒரு ஓட்டல் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவங்கி, சென்னைத் தொழிற்சங்க இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். CPIM கட்சியில் குறுகிய காலம் செயல்பட்டார். நெருக்கடிமிக்க 1965 காலகட்டத்தில் CPIM கட்சியை கட்டி அமைக்க தலைமறைவாக பணியாற்றினார். சிறந்தப் பேச்சாளர். தமிழ் மொழிப்பற்று மிக்கவர்.

இந்தி எதிர்ப்பு போராட்ட காலகட்டத்தில், இந்தி திணிப்புக்கு எதிராக பிரசுரம் வெளியிட்டு பிரச்சாரம் செய்ததாலும், தேசிய இனப் பிரச்சினை தொடர்பான வேறுபாடுகளாலும் சிபிஎம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தோழர்கள் அப்பு, கோவை ஈஸ்வரன், ஏஎம்கே, குசேலர்,புலவர் கலியபெருமாள் மற்றும் சிலத் தோழர்களும் இணைந்து தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கத்தை கட்டியபொழுது முக்கியமான பங்கு வகித்தவர்.

விவசாயப் புரட்சி என்ற இலட்சியத்தை மனதிலே ஏந்தி, 1970-1990 இடையே சுமார் இருபதாண்டு காலம், தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் புரட்சிகரமான நடவடிக்கைகள் மற்றும் கட்சியைக் கட்டும் பணிகளில் ஈடுபட்டார். தென் மாவட்டங்களில், தஞ்சை பிராந்தியத்தில் பல்வேறு கிராமப் பகுதிகளில் தங்கியிருந்து வேலை செய்தார். பழனி அருகில் நடைபெற்ற அழித்தொழிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.

44 தலித் விவசாயத் தொழிலாளர்களை உயிரோடு எரித்துக் கொன்ற கீழவெண்மணி படுகொலைக்கு காரணமான கொடூரமான நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடுவை நீதிமன்றம் ‘குற்றம் அற்றவர்’ என விடுதலை செய்த போது, 80 களில், மக்கள் மன்றத்தில் அவனை தண்டிப்பதற்கு திட்டம் தீட்டி வழிநடத்தியவர்.

தென் மாவட்டங்களில், தலித் ஒடுக்குமுறைக்கு எதிரான உறுதியானச் செயல்பாடுகளுக்கு கட்சியை ஈடுபடுத்தினார்.

தொழிலாளராகத் துவங்கி கட்சியின் உயர்தலைவராக….

CPIML Liberation மாநில செயலாளராகவும், மத்திய கமிட்டி அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். 80 களின் துவக்கத்தில், கட்சி நான்காவது காங்கிரஸில் தேசிய செயலாளராகவும் கூட தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமறைவு காலம் துவங்கி, மக்கள் இயக்கமாக நக்சல்பாரி இயக்கத்தை உருவாக்கும் காலம் வரை, தமிழக மா.லெ இயக்கத்தின் முக்கியமான ஆளுமையாக திகழ்ந்தார்.

தொழிற்சங்க இயக்கம், மாணவர் இயக்கம் மத்தியில் இருந்து மா.லெ கட்சிக்கு வந்து உயர்ந்துள்ள தலைவர்கள் பலரும் அவரால் ஈர்க்கப்பட்டவர்கள் ஆவார்.

இன்றைய CPIML Liberation கட்சியின் தூண்களை கட்டி எழுப்பியவர் என்றால் மிகையாகாது!

தலைமையகத்தில்…

90 களின் துவக்கத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

விடுதலை ஆன பிறகு, சுமார் 25 ஆண்டு காலம், டில்லியில் கட்சித் தலைமையகத்தில் இருந்து செயல்பட்டார். கட்சியின் வெளிவிவகாரத் துறை பொறுப்பு, தத்துவ பணிகளில் பங்கேற்பு எனப் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டார். 5ம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, தொழிலாளியாக மாறி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் போராளியாக மாறி, தலைவராக வளர்ந்து ஆங்கிலம், இந்தி ஆகியவற்றை கற்றுத் தேர்ந்து அறிவாளியாகவும் உயர்ந்து நின்றார். தமிழகத்தில் இருந்த இடதுசாரி அறிவாளிகள் பலரோடும் (மக்கள் கவிஞர் இன்குலாப் உட்பட) நெருக்கமான உறவு கொண்டிருந்தார்.

தோழரோடு இணைந்த எனது பயணம்!

நான், இளம் கட்சி செயல்வீரராக கிராமப்புற புரட்சிகர வேலைகளில் பணியாற்றிய பொழுது, 80 களின் பிற்பாதியில், தஞ்சை பிராந்தியத்தில் அவரது தலைமையில் பணியாற்றினேன். நான் நாகை—கீழ் வெண்மணிக்குச் சென்று பணியாற்ற வேண்டும் என விரும்பினார்.அதை ஏற்று, கட்சி முடிவாக சிறிது காலம் அங்கு சென்று பணியாற்றினேன்.

அவரது நக்சல்பாரி கனவுகள் அப்போதும் மாறாமல் கற்பனையில் இருந்தது. நாகை விவசாயத் தொழிலாளர்களின் புரட்சிகரமான ஆற்றல் குறித்து அளப்பரிய நம்பிக்கையை அவர் கொண்டு இருந்தார். அங்கிருந்து உருவாக்கப்படும் புரட்சிகரமான அணிவரிசை முக்கியப் பங்கு வகிக்கும் என நம்பினார். சூழ்நிலைமைகள் மாறிவிட்ட போதும் கூட, நக்சல்பாரி இயக்கத்தின் வழிமரபான கிராமப்புற புரட்சிகர இயக்கம் என்பதை எப்போதுமே உயர்த்திப் பிடித்தார்.

தோழருக்கு செவ்வணக்கம்!

அவரது எளிமை,கம்யூனிஸ்ட் பற்று உறுதி, கடினமான உழைப்பு, அர்ப்பணிப்பு, கட்சியையே வாழ்க்கையை வாழ்ந்தது….
நக்சல்பாரியின் கனவுகள்.. நமக்கு வழிகாட்டும் பண்புகள் ஆகும்.

தோழர்.கணேசன் /பிவிஎஸ் (PVS) அவர்களுக்கு செவ் வணக்கம்!