மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில்,

“சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் உடலுக்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து இன்று இறுதி அஞ்சலி செலுத்தினேன். பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது, “தமிழக முதலமைச்சர் மாண்புமிகு அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. அவரை இழந்து வாடிக் கொண்டிருக்கக் கூடிய அதிமுக தோழர்களுக்கும், தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தலைவர் கலைஞர் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடக்கத்தில் சத்துணவு உயர் மட்டக் குழு உறுப்பினராக , ராஜ்ய சபை உறுப்பினராக, அதிமுகவின் பொதுச் செயலாளராக குறிப்பாக தமிழக முதலமைச்சராக பல்வேறு பொறுப்புகளை ஏற்று பணியாற்றிய போது தன்னுடைய ஒவ்வொரு பொறுப்பிலும் தனி முத்திரை பதித்தவர் அம்மையார் ஜெயலலிதா என்பது பாராட்டுக்குரியது மட்டுமின்றி சிறப்புக்குறியதாகவும் அமைந்திருக்கிறது. அம்மையார் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது நான் துணை முதலமைச்சராக இருந்து பணியாற்றியிருக்கிறேன். அண்மையில் அவர் மீண்டும் முதலமைச்சராக தேர்வு பெற்று, தமிழக முதல்வராக இருந்த நேரத்தில் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். ஆகவே எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதில் விடாப்பிடியாக இருந்து, அதனை நிறைவேற்றுவதில் தன் உணர்வை எந்த அளவிற்கு தொடர்ந்து அழுத்தமாக வெளியிட்டிருக்கிறார் என்பதை எண்ணி நாம் உள்ளபடியே அவருக்கு பாராட்டுதலை தெரிவித்தாக வேண்டும். ஆகவே அவரை இழந்து இன்றைக்கு தமிழக மக்களும், அவரது கட்சியைச் சார்ந்தவர்களும் எந்த அளவிற்கு வேதனையில் இருப்பார்கள் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அந்த வேதனையில், துயரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் குறிப்பாக நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களும் தங்களுடைய உணர்வை வெளிப்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொண்டேன்” என எழுதியிருக்கிறார்.