சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணி அளவில் காலமானார். ஜெயலலிதா உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதா கிருஷ்ணன், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவேகவுடா, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், மாநில முதல்வர்களான பினராயி விஜயன், சித்தராமையா, சந்திரபாபு நாயுடு, மமதா பானர்ஜி, நவீன் பட்நாயக், அரவிந்த் கெஜ்ரிவால், பட்னாவிஸ், சவுகான், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி. ராஜா, தா. பாண்டியன்,இரா. முத்தரசன், சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், திமுக பொருளார் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், கிருஷ்ணசாமி, விசிக தலைவர் தொல் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே. வாசன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விஜய டி .ராஜேந்தர் மற்றும் சினிமா பிரபலங்களான இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சிவாஜி குடும்பத்தினர், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் விஜய், ராதாரவி, கார்த்தி, விமல், சிம்பு, மன்சூர் அலிகான், நயந்தாரா, கவுதமி, சுஹாசினி, சரோஜா தேவி, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அஞ்சலிக்குப் பிறகு, மாலை 5 மணிவாக்கில் ராஜாஜி இல்லத்திலிருந்து ஜெயலலிதா உடல் மெரினா கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடலைக் கொண்டு சென்ற வாகனத்தில் முதலமைச்சர் பன்னீர் செல்வமும் சசிகலாவும் சென்றனர்.

ஜெயலலிதாவின் பூத உடல் மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா உடலுக்கு இறுதிச் சடங்குகளை சசிகலா செய்தார். அத்துடன் ஜெயலலிதா உடலைப் போர்த்தியிருந்த தேசியக் கொடியையும் சசிகலா பெற்றுக் கொண்டார். சம்பிரதாய இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு அவரது உடல் சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய, மாநில அமைச்சர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.