அருண் நெஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்

ஜெயா அம்மையாரின் மரணத்திற்குப் பிந்தைய சூழலில், தமிழ்நாட்டில் “அரசியல் வெற்றிடம்” பற்றின விவாதம் மேலெழும்பி வருகிறது.விவாதத்தின் குவிமையாக முறையே அதிமுக கட்சியின் அரசியல் எதிர்காலம், தமிழக அரசியிலில் பசகவின் தலையீடு என்ற பிரச்சனை விவாதிக்கப்படுகின்றன.

முதல் பிரச்சனையில் கட்சியின் அதிகார மையம் என்ற கேள்வியில் சசிகலா குடும்பம், பன்னீர்செல்வம், மற்றும் பிற திரை மறை கோஷ்டிகளுக்கு இடையே ஆன இணை/பகை முரண்பாடுகள் ஒருபக்கம். இரண்டாம் பிரச்சனையில், மைய அரசின் கொள்கை முடிவுகளை தமிழகத்தில் அமுலாக்கல், தமிழக அரசியலில் அதிமுகவை முன்வைத்து அரசியல் ஆதாயம் பெறுவது என்ற அளவில் பசகவிற்கும் புதிய அதிமுக அதிகார மையத்திற்குமான இணை/பகை முரண்பாடுகள் தொழில்படுகின்றன. ஆக, இப்பிரச்சனையின் பிரதான முரண்பாடு என்ன?பாட்டாளி வர்க்க அரசியல் போரட்டத்தில், அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சற்று நெருங்கிப் பார்ப்போம்.

பகுதி -1

“அரசியல் வெற்றிட” கோஷம் எந்த வர்க்கத்திற்கானது?

“அரசியல் வெற்றிடம்”என்ற கருத்தமைவை முன்வைக்கிற நமது அறிவுஜீவிகள், நிலவுகிற முதலாளித்துவ பாராளுமன்ற அரசியல் சட்டகத்திற்கு உட்பட்ட சமூக ஜனநாயக சீர்திருத்தல் அரசியல் நலனின் பாற்பட்ட ஆளும்வர்க்க அரசியலின் “அரசியல் வெற்றிடமா” அல்லது வர்க்கப் போராட்டத்தில்,பாட்டாளி வர்க்க அரசியல் நலன் பாற்பட்ட “அரசியல் வெற்றிடமா” என்ற கேள்விக்குள் செல்வதை வசதியாக தவிர்த்துவருகிறார்கள்.இதன் மூலமாக இவர்கள் பேசுகிற “அரசியல் வெற்றிடம்” என்ற கருத்தமைவானது நேரடியாக பாராளுமன்ற சமூக சீர்திருத்தல்வாத அரசியல் நலனுக்கு ஆதரவான கருத்தாக,ஆளும்வர்க்கத்திற்கு நேரடியாக சேவை செய்கிற கருத்தாக அமைகிறது.

நிலவுகிற முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு நலனுக்கு சேவை செய்கிற அரசியல் கட்சிகளின் பண்புகளை பொதுமைப்படுத்துவதென்றால்,பெரும் மக்கள் திரளை வோட்டு வங்கி அரசியலுக்கு திரட்டுவது,அதிகாரத்தை தக்க வைப்பதற்க்கான செயலுக்திகளை வகுப்பது,நடைமுறைப்படுத்துவது,நிலவுகிற அமைப்பின் சட்ட வரம்பிற்குட்பட்ட சீர்திருத்தல் அரசியலை சமூக முரண்பாடுகளுக்கு இறுதியான தீர்வாகப் பேசுவது,பெரு முதலாளிகளுக்கு சேவை செய்வது என்பது பொதுப் பண்புகளாக உள்ளன.

காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய, இந்திய ஒன்றிய அரசியல் அமைப்பு முறையும் அதன் அங்கங்களான அரசியல் கட்சிகளும் என்றைக்குமே பாட்டாளி வர்க்க நலனுக்கான,உழைக்கும் வர்க்கத்திற்கான ஜனநாயக அரசியலை முன்னெடுத்தது இல்லை. இந்த அமைப்பும் அதன் அங்கங்களும் முதலாளித்துவ ஜனநாயகமாகவே தொழில்பட்டு வருகின்றன.

இந்த அமைப்பை உருவாக்கிய ,தழுவி ஏற்றுக்கொண்ட,நிலவுகிற அமைப்பிற்குள்ளாக தீர்வு பேசுகிற அரசியல் கட்சிகளான காங்கிரஸ்,பசக,சிபிஐ,சிபிஐ(எம்)திமுக,அதிமுக போன்ற கட்சிகள் அனைத்தும் இதில் அடக்கம்.
தமிழக அரசியலில், முதலில் காங்கிரசும் பின்னர் திமுக, அதிமுகவும் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் நலன் பாற்பட்ட அரசியல் கட்சிகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்துள்ளன. குறிப்பாக கடந்த அரை நூற்றாண்டு காலம் முழுவதும் திராவிட அரசியல் கட்சிகளின் செல்வாக்கு மட்டத்தில் இருந்துவருகின்றன.இந்திய ஒன்றிய அரசின் முதலாளிய நலனின் பாற்பட்ட அரசியல்-பொருளியில் கொள்கை முடிவுகள், சுய நிர்ணய உரிமை அற்ற தேசிய இன அரசுகள் என எந்தவொரு அரசியல் பொருளியில் சுயேச்சை அதிகாரம் அற்ற அரசுகளாகவே நிலவுகிற முதலாளித்துவ ஜனநாயக அமைப்பின் தொங்கு சதைகளாக மாநில அரசியல் ஆட்சி இருந்துவருகின்றன.

மைய அரசின் சுரண்டல் கொள்கை முடிவுகளை அமுலாக்குவது என்ற அர்த்தத்திலேயே பாட்டாளிவர்க்கம், விவசாயி வர்க்கம்,இடைத்தட்டு உழைக்கும் வர்க்க நலன் பறிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும், தமிழகத்திலும் 90 களுக்குப் பிந்தைய தாராளமய பொருளியில் கொள்கை அமுலாகத்திற்குப் பிந்தைய சூழலில், புதிதாக நகரங்களில் குவிக்கப்பட்ட முதலீடுகள்,(சேவைத் துறை) இடைத்தர வர்க்கப் பிரிவினருக்கு சில தற்காலிக நலன்களை வழங்கியதைத் தவிர பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயிகளையும்,தொழிலாளர்கள் நலனையும் சூறையாடியது. வேர்க்கால் மட்டத்தில் முரண்பாடுகளைக் களையத் திராணியற்ற மாநில அரசுகளான திமுகவும், அதிமுகவும் இலவச அறிவுப்புகள் போன்ற கவர்ச்சிவாத திட்டங்களின் ஊடாக அதிகாரத்தை தக்கவைப்பதற்கும், வோட்டு வங்கி அரசியல் நலனை உறுதிப்படுத்துவதற்குமான பாபுலிச அரசியலை மேற்கொண்டு வருகின்றன.சாதிய ஒடுக்குமுறை, வர்க்க நலன் பறிப்பு, உபரியைப் பெருக்க டாஸ்மாக் சாராய விற்பனை,ஜனநாயக போராட்டத்தை நசுக்குதல், இயற்கை வளத்தை சூறையாடல், பெரு முதலாளிகளுக்கு சேவை செய்து சொத்தைப் பெருக்குதல் என தாராளமய கட்டத்தில் அரசியல் தலைமைக்கு வருகிற தமிழகத்தின் பிராந்தியக் கட்சிகள் பெரும் செல்வக்குவிப்பை மேற்கொள்கிற பொருளாதர சுரண்டல் நிறுவனங்களாக திரட்சிப் பெற்று சமூக முரண்பாடுகளை இலவசத் திட்டங்களாலும், அமைப்பு சட்டகத்திற்கு உட்பட்ட சீர்திருத்தல்வாத திட்டங்களின் ஊடாகவும் நீர்த்துபோகச் செய்ய முயல்கின்றன.

தற்போது தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பிலும், முதல்வராக இருந்து ஜெயா அம்மையாரின் மறைவானது, இந்தப் புள்ளியில் எந்த அரசியல் வெற்றிடத்தை பற்றியதாக உள்ளது?

குறிப்பாக சொல்வதென்றால் கடந்த அறுபது ஆண்டுகளாக, நிலவுகிற பாராளுமன்ற அரசியல் அமைப்பு சட்டகத்திற்கு உட்பட்ட முதலாளிய ஜனநாயக சீர்திருத்தல்வாத கட்சிகளானது, பாட்டாளி வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும் எந்த நலனையும் அரசியல்-பொருளியில் வழி இட்டு நிரப்பாத சூழலில், இந்த அமைப்பின் அரசியல் கட்சிகளின் வீழ்ச்சியும், தலைமை மறைவும்,மாநில அதிகார மையத்தின் கைமாற்றமும்,பாராளுமன்ற அரசியல் நலனைத் தேர்ந்துகொள்கிற முதலாளிய ஜனநாயகத்தின் பாற்ப்பட்ட உயிர்பற்ற “அரசியல் வெற்றிடமே”அன்றி பாட்டாளி வர்க்கம், உழைக்கும் வர்க்கம் நலன் சார்ந்த வர்க்கப் போராட்ட அரசியலின் அரசியல் வெற்றிடதை குறிப்பதாக இருக்கவில்லை.

மாறாக அதிமுக எனும் முதலாளியக் கட்சித் தலைவரின் மரணம்,பாட்டாளி வர்க்கப் போராட்ட அரசியலில் என்ன விளைவை,தாக்கத்தை நிகழ்த்தும் என்ற அளவிலேயே நமது ஆய்வை மேற்கொள்ளவேண்டும்.அவ்வகையில்,அதிமுக கட்சிக்குள் நிலவுகிற அதிகாரப் போட்டியானது,அக்கட்சியின் மற்றொரு சுரண்டல் முகாமிற்கோ அல்லது பிற முதாளித்துவ சுரண்டல் கட்சிகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சேவை செய்கிற வாய்ப்பை வழங்குவது வெள்ளிடைமலையாக தெரிகிறது. குறிப்பாக மத்திய பாசக அரசு, தனது மையப்படுத்தப்பட்ட அதிகார ஒன்றுகுவிப்பிற்கும்,கொள்கை அமுலாக்கத்திற்கும் (இணை/பகை) முரண்பட்டு நிற்கின்ற அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கரைப்பதற்கு வழிசெய்கிறது. பெயரளவில் மாநில மக்களின் நலனைப் பிரதிநிதிப்படுதுகிற மாநில அரசுகளின் அதிகாரத்தை சுத்தமாக பறித்து, மக்களை சுரண்டுவதற்கு அடித்தளம் அமைக்கிறது.

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.