உடல்நலக் குறைவால் மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் உடல் சென்னை எம்ஆர்சி நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சோ உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் இதுதான் ஊடகங்களில் ‘சிறப்பான இடத்தை’ப் பிடித்தது. தினத்தந்தியின் முதல் பக்கத்தில் முதல் படமாக சசிகலாவின் படம் இடம்பெற்றது.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் கதிர்வேல் ‘என்ன அவசரம்?’ என்ற தலைப்பில் எழுதிய முகநூல் பதிவு இங்கே…

திமுக பொருளாளர், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியெல்லாம் கிடக்கட்டும். தொடர்ந்து பல ஆண்டுகளாக தினமும் இதே பத்திரிகையில் தவறாமல் இடம் பிடித்தவர் ஸ்டாலின். அவரை ஓரமாக தள்ளி விட்டது.

போகட்டும்.

தமிழகம் மட்டுமல்ல, சர்வதேச புகழ் பெற்ற இந்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவருக்கும் முதலிடம் இல்லை.

போகட்டும்.

திமுக எம்.பி. கனிமொழி. கடைசி இடம் என்றாலும் அவர் பொருட்படுத்த போவதில்லை.

போகட்டும்.

மாதத்தின் 30 நாட்களில் 29 நாள் உங்கள் முதல் பக்க தலைப்பு செய்தியை அலங்கரித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வழங்கி வருமானம் கொழிக்க வைத்த அம்மா.

அவர் படத்தையே கீழே தள்ளிவிட்டு அவரது உருவத்துக்கு மேலே அலங்காரமாக வைத்து பிரசுரித்து இருக்கிறது கட்சியிலோ ஆட்சியிலோ எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவரின் படத்தை.

அரசு முறை துக்கம் அறிவிக்கப்பட்டுள்ள அந்த 7 நாட்கள் முடியும் வரையிலாவது தந்தி காத்திருக்க முடியாதா என்பதுதான் வாசகனின் ஆதங்கம்”.