அ. குமரேசன்

அ. குமரேசன்
அ. குமரேசன்

கடந்த நான்கு நாட்களின் பரபரப்புகளில் நழுவிவிட்ட இந்தச் செய்தி இன்றுதான் கண்ணில் பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை ‘தண்ணீர் தினம்’ என்று அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

“நாட்டின் அரசமைப்பு சாசனத்தை உருவாக்கியதில் மையமான பங்காற்றிய அம்பேத்கர், நீராதாரங்கள் நிர்வாகம் குறித்த ஒரு திட்டவட்டமான அகில இந்தியக் கொள்கையையும் முன்வைத்தவர். இதனை மக்கள் அறியச்செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது,” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி தெரிவிக்கிறது.

“சுதந்திர இந்தியாவின் பன்னோக்கு அணைத்திட்டங்கள் பலவற்றை உருவாக்கியதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் அம்பேத்கர். தாமோதர் பள்ளத்தாக்கு அணை, ஹிராகுட் அணை உள்ளிட்ட பல திட்டங்களின் உந்துசக்தியாக இருந்தவர் அவர்,” என்று மத்திய நீர் ஆணையம் இவ்வாண்டு அம்பேத்கர் பிறந்தநாள் (ஏப்ரல் 14) கெண்டாட்டத்தையொட்டி வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருக்கிறது.

உலக அளவிலேயே நீர் ஒரு முக்கிய நெருக்கடியாக, இந்தியாவில் மாநிலங்களுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் பிரச்சனையாக மாறிவரும் நிலையில், நீராதார நிர்வாகத்தில் அம்பேத்கரின் தொலைநோக்கு சிறப்பானதொரு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. அதற்கேற்ற, இன்றைய அறிவியல் புரிதல்களோடு கூடிய அணுகுமுறைகளும், அவற்றைச் செயல்படுத்துவதில் அரசியல் நேர்மையும் தேவைப்படுகின்றன.

அரசமைப்பு சாசனச் சிற்பி என்பதாக மட்டுமே இது வரையில் அம்பேத்கரைக் காட்டி வந்திருக்கிறார்கள். அம்பேத்கரின் மையமான, தலையாய போராட்டமும் வாழ்க்கை அர்ப்பணிப்பும் எதற்காக என்பதை மறைத்து வந்திருக்கிறார்கள்.

இப்போது நீராதார நிர்வாகம் தொடர்பான அவரது, பேசப்படாத இன்னொரு பங்களிப்பை மக்களுக்குத் தெரியப்படுத்துவது வரவேற்கப்பட வேண்டியதுதான். இனி ஆண்டுதோறும் ஏப்ரல் 14 தண்ணீர் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சியில் அறிவித்திருக்கிறார். அம்பேத்கரின் மையமான, தலையாய போராட்டமும் வாழ்க்கை அர்ப்பணிப்பும் எதற்காக என்பதை மறைக்கிற இன்னொரு உத்தியாகிவிடக்கூடாது… உத்தியாக விடக்கூடாது.

பிறப்பால் மனிதர்களைப் பாகுடுத்துகிற சமுதாய இழிவின் அடிவாரமான சாதியம் தகர்க்கப்படுகிற வரையில், சமத்துவம் ஊன்றப்படுகிற வரையில் நடைபெற வேண்டிய போராட்டத்தை அவர் தொடங்கினார். நாம் தொடர்வோம். போராட்டத்தின் முதல் கட்டமாகச் சட்டப்படி சாத்தியமாகியிருக்கிறது, ஆனால் சமூக நடப்பில் நெடுங்கனவாகவே நீடிக்கிறது சாதி ஒழிப்பு. அதை நனவாக்கிய புதிய வரலாறு எழுதப்படும் வரையில் அம்பேத்கரின் போராட்ட நெருப்பில் தண்ணீரைக் கொட்ட அனுமதியோம்.

அ. குமரேசன், தீக்கதிர் பத்திரிகையின் பொறுப்பாசிரியர்.