சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன்

த்ரிஷ்யம் படத்தில் போலீஸ் உயரதிகாரியாய் வரும் ஆஷா சரத் ஒரு வசனம் சொல்வார். “எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் இந்த பெர்பக்‌ஷன்தான் எங்கேயோ உதைக்கிறது” என்பார். உண்மைதான் அது என்பதை நேற்று உணர்ந்திருப்பீர்கள். அப்போலாவின் சங்கீதா ரெட்டி க்ரேவ் சிட்டுவேஷன் என்று ட்வீட் செய்தார். அதற்கடுத்து ரிச்சர்ட் பீலே அறிக்கை அதை உறுதி செய்தது. மறுபடி சங்கீதா ரெட்டி மிக மிகக் கவலைக்கிடம் என்றார். இடையில் மரணமடைந்ததாக அறிவிப்பு வந்தது. அது திரும்பப் பெறப்பட்டது. அப்போலா சார்பில் அறிக்கை வெளியானது. இரவு 11.30 மணிக்குத்தான் இறந்ததாக அந்த அறிக்கை தெளிவுபடுத்தியது.

அதற்கு முன்னர் வெங்கையா நாயுடு வந்துவிட்டுச் சென்றார். அவர் சென்னையிலேயே இருப்பதாகச் சொன்னார்கள். வெங்கையா நாயுடுவிற்கு முன்பாகவே கவர்னர் வந்தார். இரவு உடல் போயஸ் கார்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் இறுதிச் சடங்கு செய்வார் என்று தகவல் பரப்பப்பட்டது. அப்போலாவில் அனுமதிக்கப்படாத உறவினர் தீபா ராஜாஜி பவனில் அனுமதிக்கப்பட்டார். வந்த பிரமுகர்கள் அனைவரும் சசிகலாவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். திமுக மட்டுமே மாறாக முதலைமைச்சர் ஓபியை முன்னிறுத்தியது. அதிமுக கட்சிக் கொடிக்குப் பதிலாக தேசியக் கொடி போர்த்தப்பட்டது. வழக்கமாக அதை ரத்த வாரிசுகளிடம் கொடுப்பார்கள். பதமாக அதை மடித்து சசிகலாவிடம் கொடுத்தார்கள். இறுதிச் சடங்கை சசிகலாவே செய்தார். ரத்த வாரிசை எக்ஸ்ட்ர்டா லக்கேஜாக பின்னே தொற்றிக் கொள்ள வைத்தார்கள். ஓபிஎஸ்ஸிற்கும் பால் ஊற்ற வாய்ப்புக் கிடைத்தது. சந்தடி சாக்கில் இறுதி மரியாதையை சசிகலா நடராஜன் செய்தார். இந்த ஸ்க்ரிப்பிட்டில் ஒரு பக்கா த்ரிஷ்யம் பாணி திரைக்கதை ஒளிந்திருக்கிறது. இந்த இடத்தில் இந்தக் கதையில் ஒரு தப்பு இருக்கிறது என்று யாராவது சுட்டிக் காட்ட முடியுமா?

அதற்குப் பின்னால் யார் இருந்தார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடுத்த ஆறுமாதங்களில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வருகிறது. அதற்கு எம் எல் ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ராஜ்ய சபாவில் எம்பிக்களின் ஆதரவு பிஜேபி அரசாங்கத்திற்குத் தேவையாக இருக்கிறது. அதிமுக ஆளும் அரசாக இருப்பதால் உடைப்பிற்கு அதுவும் தயாராக இருக்காது. பதவி சுக போகங்களை உடைத்துக் கொண்டு வெளியேற யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். திமுகவோ கெட்ட பெயர் வாங்கி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.

இப்போதைக்கு பிஜேபி அரசு எந்தவித எக்ஸ்ட்ரா கைங்கர்யத்திலும் இறங்கத் தயாராக இல்லை. மாநிலத்தில் தேவையில்லை. மத்தியில் பயன்படுத்திக் கொள்கிற மனநிலைக்கு அது வந்துவிட்டதாகவே தெரிகிறது. இப்போதைக்கு அது லக்கானை ஏற்கனவே அதைக் கையில் வைத்திருந்தவர்களிடமே கொடுத்து விட்டது. ஆக அப்பம் அந்தக் கைகளிடம் இருக்கிறது. அதைப் பங்கிட்டுக் கொள்வதில் வரும் சிக்கல்களை அடுத்தே அடுத்த கட்ட அரசியல் ஆட்டங்கள் ஆரம்பமாகும். இந்தத் திரைக்கதையில் அவர்கள் வில்லனாக இருக்கப் போகிறார்களா? ஹீரோவாக இருக்கப் போகிறார்களா? என்பது விரைவில் தெரிந்து விடும். உண்மைத் தொண்டர்கள் ஜெயலலிதா புதைக்கப்பட்ட இடத்தில் மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் நகம் கடித்தபடியே அடுத்த அரசியல் ஆட்டத்தைக் கணித்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் சொல்கிறேன். “எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் இந்த பெர்பக்‌ஷன்தான் எங்கேயோ உதைக்கிறது”.

சரவணன் சந்திரன் எழுத்தாளர். ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை இவருடைய சமீபத்தில் வெளியான நாவல்கள். அடுத்த ‘அஜ்வா’ என்ற நாவல் வரவிருக்கிறது.