கர்நாடகம் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் 192 டிஎம்சி தண்ணீர் போதாது எனக் கூறி தமிழகம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகாவும் மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது இந்த மனுக்களை விசாரிப்பதற்கான முகாந்திரம் உள்ளதா? என விவாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் தமிழகம், கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றம் விசாரிக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவும், மத்திய அரசும் உச்சநீதிமன்றம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு வரும் வரை கர்நாடகா தமிழகத்திற்கு 2000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.