காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பு நம்பிக்கை அளிப்பதாக‌ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 1991 இல் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் பிப்ரவரி 2007 ல் இறுதித் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பின் படி கர்நாடக மாநிலம் ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். மழைப்பொழிவு குறைந்து நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து கொள்ள வேண்டும். காவிரி நதிநீர் பங்கீட்டு முறை செயலாக்கத்திற்காக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்து நிர்வாகப் பொறுப்புகளை அவைகளிடம் ஒப்படைக்க வேண்டும் என இறுதி தீர்ப்பில் நடுவர் மன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியிருந்தது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது, கேரளம் மற்றும் புதுச்சேரி அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. இவைகள் விசாரணையில் இருந்த நிலையில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்படி பிப்ரவரி 2013 ல் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. இதன்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்குமாறு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. நடப்புநீராண்டில் கர்நாடக அணைகளில் முழுக் கொள்ளளவு தண்ணீரை தேக்கிவைத்துக் கொண்ட கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்துவிட்டது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை வழங்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 2016 ல் அணுகியது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் அக்கோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம், நீர்ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்குமாறு செப்டம்பர் 20 மற்றும் 30 தேதிகளில் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

வழக்கு விசாரணையின் போது ஏற்றுக் கொண்ட மத்திய அரசு. அக்டோபர் 3 ஆம் தேதி இரவு திடீரென மத்திய அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்ற நிலை எடுத்து, எதிர்மறைப் போக்கில் செயல்பட்டு, தமிழ்நாட்டின் நலனை புறக்கணித்தது. இந்த நிலையினை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது என இன்று (09.12.2016) தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கைக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. அத்துடன் முந்தைய தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு தினசரி வினாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறந்து விடவும் உத்தரவிட்டிருக்கிறது. இப்போதாவது மத்திய அரசு தமிழ்நாட்டின் நீராதாத்தை பாதுகாக்க, காவிரி மேலாண்மை வாரியம், நீர்ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை தாமதமின்றி அமைத்து, தமிழ்நாட்டின் சட்டபூர்வ தண்ணீர் பெறும் உரிமையை உறுதிசெய்யுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.