சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து 6-ஆம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் காலைநேர கூட்டத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. மாணவ-மாணவிகள் அவரவர் விருப்பமான முறைப்படி அஞ்சலி செலுத்தலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் பள்ளியில், அவருக்கு மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.