அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்

இந்துதேசியவாதத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டம்.

நிலவுகிற முதலாளித்துவ அரசியல் அமைப்பிற்கு சேவை செய்கிற குறிப்பான அரசியல் கட்சித் தலைமையின் மரணம், எந்தவகையிலும் பாட்டாளி வர்க்க அரசியலில் வெற்றிடத்தை உருவாக்கவில்லை எனப் பார்த்தோம். அதேநேரத்தில், அதிமுக கட்சித் தலைமையின் மரணத்திற்கு முன்பாக,மருத்துவமனையில் கவலைக்கிடமாக ஜெயா அம்மையார் அனுமதிக்கப்பட்டபோதே, பாசகா எனும் இந்துத்துவ தேசியவாத கட்சியின் பிடியில் அதிமுக முகாம் உள்வாங்கப்படுகிற நிகழ்வுப்போக்கானது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது.

ஜெயா அம்மையாரின் மரணத்தை ஒட்டிய சந்தர்ப்பத்தில், அதிமுக கட்சியின் மீதான பசகாவின் தலையீட்டை மாநில கட்சிகளின் அதிகாரத்தின் மீதான மத்திய கட்சியின் அரசியல்-பொருளியில் செல்வாக்கை, மைய அரசின் அதிகார மைய ஒன்றுகுவிப்பிற்கு பயன்படுத்துவது என்ற பிரச்சனையே தமிழக அரசியலின் தற்போதைய பிரதான முரண்பாடாக வெளிப்படுகிறது.

மத்திய அரசின் இந்த அதிகார ஒன்றுகுவிப்பு,மாநில அதிகாரத்தை நீர்த்துப் போகச் செய்கிற அரசியல் நகர்வுகளை,மாநில கட்சிகளை உள்வாங்குவதை தமிழ் தேசிய முதலாளிகளாலோ, இந்து தேசிய அதிகாரமைய நீரோட்டத்தில் கரைந்து போன சந்தர்ப்பவாத திமுக மதிமுக அரசியலாலோ முறியடிக்க இயலாது. உதாரணமாக இன மானம் பேசிய வைகோ நேரடியாக பசகாவை ஆதரித்து பேசிவருவதை இந்த சந்தர்ப்பவாத அரசியலில் இருந்தே புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தப் பிரச்சனையை அதாவது முதலாளித்துவ ஜனநாயக அரசியல் எல்லைக்கு உட்பட்ட மாநில அரசின் சுயாதின செயல்பாட்டை முடக்குகிற இந்து தேசியவாதத்தை அதன் அதிகார சுற்றுவளைப்பை, நலன்களை இழக்குற பெரும்பாலான உழைக்கும் மக்கள் திரள் அரசியல் ஊடாகவே முறியடிக்க இயலும். இப்போராட்டமானது அரசியல் சட்டகத்திற்கு உட்பட்டும் வெளியேவும் நடைபெற்றேத் தீரவேண்டும். மாறாக இந்து தேசியவாத அரசியல் ஆதிக்கத்திற்கு எதிராக பழைய மரபுப் பெருமை மட்டுமே பேசுகிற, அண்டை தேசிய மக்களிடம் பகைமை பாராட்டுகிற தமிழ் முதலாளிய தேசியவாதத்தால் மக்களை ஒன்றுதிரட்டி போராட இயலாது. இந்த பிற்போக்கான தமிழ் முதலாளிய தேசியவாத கோரிக்கையானது, தமிழ் முதலாளிகளின் ஜனநாயகத்தை பிரதிபலிக்கிறதே அன்றி மைய அதிகார குவிப்பால் சூறையாடப்படுகிற ஒட்டுமொத்த பெரும்பான்மை பாட்டாளிகள், விவசாயிகளின் ஜனநாயகத்தை பிரதிபலிக்கிற அரசியல் கோரிக்கையை பிரதிபலிக்கவில்லை.

கடந்த 30 ஆண்டுகளில் எந்தக் கட்சிக்கும் இல்லாத வகையில் முழு பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும் இன்று பிரதம மந்திரியின் அலுவலகத்தில் குவிமையப்படுத்துப்பட்டுள்ளது.ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் மக்கள் கண்காணிப்பு அறவே அகற்றப்பட்டுவிட்டது. சுரண்டலுக்கு எதிராக போராடுகிற சக்திகளை கட்டுப்படுத்தவும், இந்திய தேச ஐக்கிய உணர்வை தொடர்ந்து மேலாண்மை செய்திடவும் பிற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கைகளை ஒடுக்கிடவும் தேச விரோத, இந்திய இறையாண்மைக்கு எதிரான,பாகிஸ்தான் விரோத கருத்துருக்கள் ஆளும்வர்க்கத்தின் கருத்தியலாக உருவாக்கப்பட்டு சமூக ஏற்பையும் பெற்று வருகிறது. ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வால் வெகுமக்களிடத்தில் திரட்டப்பட்டிருந்த இந்திய தேசிய ஐக்கிய உணர்வு, இந்துத்துவ தேசியவாத உணர்வுநிலை மட்டத்தில் மறுவார்ப்பு செய்யப்பட்டுவருகிறது. இந்துத்துவ பாசிசத்தை எதிர்ப்பது, இந்திய தேசிய ஐக்கியத்தை எதிர்ப்பது என்பது தேச எதிர்ப்போடு இணைக்கப்படுகிறது.

முன்னதாக செல்லாக் காசு அறிவிப்பின் ஊடாக,நாட்டின் பொருளியில் அலகுகளை வங்கிகளில் மையப்படுத்த முனைவது,சிறு குறு வணிகத்தை ஏகபோக நிறுவனங்கள் விழுங்கச் செய்வது,வரி வசூலிப்பை மையப்படுத்துவது என ஏகாதிபத்திய சகாப்தத்தின் “தாராளமய இந்துத்துவ சர்வாதிகார அரசு” என்ற தனது முழு வடிவத்தை பாஜக வெளிப்படுத்துகிற பண்பு மாற்றப் போக்கின் குறிப்பான வெளிப்பாடாகும்.

அதாவது மத்திய அரசின் வேகமான இப்பண்பு மாற்றப் போக்கானது ஏகாதிபத்திய கட்டத்தைய பெருமுதலாளிய வளர்ச்சிப் போக்கின் தவிர்க்கவே இயலாத தன்மைகளின் குறிப்பான வெளிப்பாடாகும்.
மைய அரசின் அதிகாரக் குவிப்பரசியலின் நீட்சியாகவே மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பது, அதிகாரத்தைப் பறிப்பது,மாநில எதிர்க்கட்சிகளை சுற்றிவளைப்பது என்ற வகையில் தற்போது அதிமுக கட்சியை, தமிழக ஆட்சியை பசக சுற்றிவளைத்துள்ளது. முன்னதாக, மாநிலங்களின் அதிகாரப் பறிப்பிற்கும்,மத்திய அரசின் கொள்கை அமுலாக்கத்திற்கு தாமதமும் தடையும் ஏற்படுத்துகிற மாநில அரசுகளின் அரசியல் சாசன உரிமைகளையும் முடக்குகிற போக்கில் பசக தீவிரம் காட்டிவருகிறது.

ஆளும்வர்க்கத்தின் மைய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகார குவிப்பிற்கும் அதிகார பரவலுக்குமான இந்த முரண்பாடானது, இதற்குமுன் இல்லாத வகையில் இந்திய முதலாளித்துவ அமைப்பின் பசகாவால் தீவிரப்படுத்துவருகிறது.ஒரே நாடு ஒரே சந்தை, பொது அரசியல் பொருளியில் கொள்கை என்ற முழக்கத்தின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிற பொது சேவை வரி மசோதாவானது, மாநில அரசுகளின் உரிமையை பறிக்கிற முக்கிய பொருளாதார நடவடிக்கையின் வெளிப்பாடாகும். மாநிலங்களின் குரலை பிரதிபலிக்கிற மேலவை அமைப்பையும் தற்போது நீர்த்துப்போக செய்கிற நடவடிக்கைகளை பசக மேற்கொண்டுவருகிறது.

மைய அரசின் இந்த அதிகார-பொருளியில் ஒன்றுகுவிப்பிற்கு எதிரான மாநில அரசுகளின் எதிர்ப்பரசியலில் திருணாமுல் காங்கிரசும்,அதிமுகவும் முக்கிய தடை சக்தியாக நின்றுவருகிறது.குறிப்பாக மைய அரசின், தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய மைய உருவாக்கம்,உணவுப் பாதுகாப்பு மசோதா,உதய் திட்டம்,சேவை வரி மசோதா போன்ற முடிவுகளுக்கு அதிமுக தீவிரமான எதிர்ப்பைக் காட்டிவந்தது. ஒரு கட்டத்தில், உணவு பாதுகாப்பு மசோதாவை அமுலாக்கம் செய்யவில்லை என்றால்,தமிழ்நாட்டிற்கு வழங்குகிற அரிசி மானியத்தை நிறுத்தப் போவதாக பசக மிரட்டியதை அடுத்து,ஜெயா அம்மையார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூழலில், தமிழக அரசானது, உணவுப் பாதுகாப்பு மசோதாவை அமுலாக்கியது நினைவிருக்கலாம்.அதைத் தொடர்ந்து உதய் திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.தற்போது மீதமுள்ள முக்கிய கொள்கை மாற்ற அறிவிப்பான சேவை வரி மசோதாவையும் ஏற்றுக் கொண்டேத் தீரவேண்டும் என அதிமுகவை சுற்றிவளைத்துள்ளது பசக.

அதிமுக தலைமையின் மரணத்திற்கு பிந்தைய சூழலில்,தமிழக ஆளும்கட்சியுடன் மறைமுக கூட்டணியை உருவாக்குவதில் பசக வெற்றிபெற்றுள்ளது.அது எதிர்காலத்தில் தேர்தல் கூட்டணியாக வெளிப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.

பிற தேசி இனங்களை ஒடுக்குவது போல, தமிழ்ச்சமூகத்தை ஒடுக்குகிற மைய இந்து தேச அரசின் பிரதிநிதியான பசகவின் ஒடுக்குமுறையையும் அதன் அங்கங்களாக திகழ்கிற சந்தர்ப்பவாத சக்திகளையும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான உறுதியான சோசலிச,ஜனநாயக போரட்டத்தாலேயே தீர்க்கமுடியும். இரண்டாம் உலகப் போரில் நாசிக்களை வீழ்த்தி உலகைக் காத்த கம்யூனிஸ்டுகளாலேயே காவி பயங்கரவாத இந்துத்துவ சக்திகளை வீழ்த்த முடியும்!

இன்று நம்முன் இரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. ஒன்று இந்த காட்டுமிராண்டித்தன அரசை ஏற்பது,இல்லையென்றால் இந்த அரசைத் தூக்கி எறிந்து சோசலிசத்தை நிறுவுவது. காட்டுமிராண்டித்தனமா? சோசலிசமா?

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.