அதிமுக பொதுச்செயலாளரும் முதலமைச்சராக இருந்தவருமான ஜெயலலிதா இறந்ததை அடுத்து தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றம் ஏற்படும் என ஊடகங்களும் சமூக ஊடகங்களும் பேசிக்கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தை கடந்த அக்டோபர் மாதமே மோப்பம் பிடித்திருக்கிறார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி நாகர்கோவிலில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் அவர், ‘தமிழகத்தில் மிகப் பெரும் அரசியல் மாற்றம் இன்னும் சில மாதங்களில் சந்திக்க இருக்கிறது. அதை பாஜக பயன்படுத்திக் கொள்ளும் என பேசியிருக்கிறார். அடுத்த நாள் தினகரன் நாளிதழில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

தினகரன் நாளிதழில் வந்துள்ள செய்தி..

நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி நதி நீர் பிரச்னையில் இனி வரும் தீர்வு, இரு மாநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் நன்மை அளிக்கும் வகையில், நிரந்தர தீர்வாக அமைய வேண்டும் என பா.ஜ. விரும்புகிறது. தமிழகத்திற்கு எந்த வகையிலும் துரோகம் விளைவிக்கும் வகையில் பா.ஜ. நடந்து கொள்ளாது.  கர்நாடகாவில் 40 லட்சம் தமிழர்கள் உள்ளனர். அவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த விவகாரத்தில் கவனமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி நதி நீர் பிரச்னையில்  நடந்துள்ள துரோகங்களை, தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை கைது செய்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 2 தேர்தல்களிலாவது அவர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இதற்கு வழி செய்யும் வகையில், தேவையான சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டும்.

தேர்தலில் பணம் கொடுப்பவர்கள் மட்டுமின்றி அதை வாங்குபவர்களுக்கும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் பா.ஜ. போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

மிகப்பெரிய அரசியல் மாற்றம்: முன்னதாக குமரி மாவட்ட பா.ஜ.வின் செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. இதில் பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது, “1949ல் இருந்து பல அரசியல் மாற்றங்களை தமிழகம் சந்தித்து இருக்கிறது. இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய மாற்றம், தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நிகழ உள்ளது. அந்த நிகழ்வு ஏற்படும்போது அதை பயன்படுத்தி ஆளும் திறன் உள்ள கட்சியாக பா.ஜ. மாற வேண்டும். அதற்கேற்ப இந்த மாற்றத்தை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’’ என்று கூறினார்.

தொலைக்காட்சி விவாதங்களிலோ தனிப்பட்ட ஊடக நேர்காணல்களிலோ ஆளும் அதிமுக அரசை குலைக்கும் வகையில் பாஜக எதுவும் செய்யாது என தெரிவிக்கின்றனர் பாஜக பிரதிநிதிகள். ஆனால் பாஜக மத்திய அமைச்சரோ, முன்னதாகவே ‘நிகழ்வுகளைப் பயன்படுத்தி ஆளும் திறன் உள்ள கட்சியாக பாஜக மாற வேண்டும்’ என அறிவுறுத்தியிருக்கிறார்.