அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்

தோழர் ஆழி செந்தில் நாதனின் “மாநிலங்களின் உரிமைக் குரல்!” என்ற தலைப்பிலான தமிழ் இந்து கட்டுரை மீதான விமர்சனக் குறிப்புகள்:

http://tamil.thehindu.com/…/%E0%AE%AE%E…/article9417205.ece…

கட்டுரையின் சாரம்சத்தை தொகுத்தோம் என்றால் மத்திய அரசின் மாநில உரிமைப் பறிப்பிற்கு எதிராக மறைந்த தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் பணியாமல் எதிர்த்து பேசிவந்தார். மத்திய அரசின் கொள்கை அமுலாக்கத்திற்கு எதிரான மறைந்த முதல்வரின் குறிப்பான எதிர்ப்புகளையும் ஜெயா அம்மையாரின் சொந்த வாக்கியங்களையும் இதற்கு ஆதரவாகத் தருகிறார்.

அவரது கட்டுரையில் இருந்து சில மேற்கோள் காட்டுவதென்றால்
//”மாநில உரிமைகள் தொடர்பான ஜெயலலிதாவின் ஈடுபாடு ஆத்மார்த்தமானதோ இல்லையோ, தொடர்ச்சியானது என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். எல்லா முதல்வரையும்போல அவரும் டெல்லிக்குக் கட்டுப்பட்டவர்தான். ஆனால், அவரை எல்லாச் சமயங்களிலும் டெல்லியைக் கண்டு பயந்து நடுங்கியவர் என்று சொல்ல முடியாது. எந்தப் பிரதமரையும் ஆளுநரையும் அவர் தள்ளித்தான் வைத்திருந்தார். அவரது எதிர்ப்பைவிட அவரது ஆதரவைக் கண்டுதான் டெல்லிக்காரர்கள் அதிகம் பயந்தார்கள்! அவருக்கு டெல்லியின் அரசியலும் உள்நோக்கமும் நன்றாகத் தெரிந்திருந்தது”//

அதேநேரத்தில் மத்திய அரசின் அதிகாரக் குவிப்பிற்கு எதிரான ஜெயா அம்மையாரின் சமரை முன்மாதிரியாகக் கொள்ளவும் முடியாது, அதில் சில குறைகளும் உள்ளன, ஆனாலும் அவரது சமரை தவிர்க்க முடியாது எனக் கூறி கட்டுரையை முடிக்கிறார். அவரது சொற்களில் சொல்வதென்றால்

//“நாம் மேற்கொள்ள விரும்புகிற மாநில உரிமைகளுக்கான போராட்டத்தின் முன்மாதிரியாக ஜெயலலிதா திகழ்கிறார் என்று ஒருபோதும் கூற முடியாது. இத்தகைய ஆட்சிகளோ கட்சிகளோ டெல்லி ஏகாதிபத்தியத்துக்கு உண்மையான சவால் என்றும் கூற முடியாது. ஆனால், டெல்லியை நோக்கிச் சவாலான ஒரு பார்வையை வீசியதிலும் “நீ மகாராஜா என்றால், நான் மகாராணி” என்று அட்டகாசமாகச் சிரிப்பதிலும் பல மாநில முதல்வர்களிடையே மற்ற பல தமிழக முதல்வர்கள் உட்பட – அவர் வித்தியாசப்பட்டுதான் இருந்தார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அதனால், மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில் நிச்சயம் அவருக்கு ஒரு இடம் இருக்கவே செய்யும்”//

ஆக, மாநில அரசுகளின் அரசியல்-பொருளியில் அதிகார நலனைப் பறிக்கிற மத்திய அரசின் அதிகாரக் குவிப்பிற்கு எதிராக (ஆனாலும் சில குறைகள் இருப்பினும்!) போராடிய ஜெயா அம்மையாரின் போராட்டத்தை தொடர்வதே அவருக்கான அஞ்சலியாக இருக்க முடியும் என்கிற தோழரின் ஆதங்கம் நியாமானதே.

ஆனாலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக ஆளும் வர்க்கத்தின் மைய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகார குவிப்பிற்கும் அதிகார பரவலுக்குமான முரண்பாட்டிற்கான அரசியல் பொருளியில் காரணிகளை கூற மறந்துவிடுகிறார். ஆளும்வர்க்கத்தின் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பினில், மத்திய மாநில அரசுகளின் “சேம நல அரசு” முறையானது பாட்டாளி வர்க்க, உழைக்கும் வர்க்க நலனுக்கு சேவை செய்யாத சூழலில் இந்த அம்மைப்பின் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே எழுகிற முரண்பாடுகளை வர்க்க நலன் கொண்டே விளக்கே வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில், அவரது விளக்கம் நேரடியாக ஆளுவர்க்கத்தின் முதலாளித்துவ ஜனநாயக முறைக்கே சேவை செய்யும். இந்த அம்மைப்பின் சீர்திருத்தமே தீர்வு என்று பேசும். கட்டுரையின் போதாமை இரண்டு அம்சங்களில் வெளிப்படுகிறது. ஒன்று மத்திய அரசு ஏன் இதற்கு முன் இல்லாத வகையில் அதிகாரக் குவிப்பை தீவிரமாக மேற்கொள்கிறது? இரண்டாவது தமிழ்நாட்டின் அதிமுக அரசு (சில இடங்களில்) ஏன மத்திய அரசுடன் முரண்பட்டன?

1
மத்திய அரசு கடந்து அறுபது ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏன் மாநில அரசுகளின் உரிமையை பறிப்பதில் தீவிரம் காட்டுகிறது? கடந்த 30 ஆண்டுகளில் எந்தக் கட்சிக்கும் இல்லாத வகையில் முழு பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும் இன்று பிரதம மந்திரியின் அலுவலகத்தில் குவிமையப்படுத்துப்பட்டுள்ளது. முன்னதாக செல்லாக் காசு அறிவிப்பின் ஊடாக, நாட்டின் பொருளியில் அலகுகளை வங்கிகளில் மையப்படுத்த முனைவது, சிறு குறு வணிகத்தை ஏகபோக நிறுவனங்கள் விழுங்கச் செய்வது, வரி வசூலிப்பை மையப்படுத்துவது என ஏகாதிபத்திய சகாப்தத்தின் “தாராளமய இந்துத்துவ சர்வாதிகார அரசு” என்ற தனது முழு வடிவத்தை பாஜக வெளிப்படுத்துகிற பண்பு மாற்றப் போக்கின் குறிப்பான வெளிப்பாடாகும்.

அதாவது மத்திய அரசின் வேகமான இப்பண்பு மாற்றப் போக்கானது ஏகாதிபத்திய கட்டத்தைய பெருமுதலாளிய வளர்ச்சிப் போக்கின் தவிர்க்கவே இயலாத தன்மைகளின் குறிப்பான வெளிப்பாடாகும். ஆளும்வர்க்கத்தின் மைய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகார குவிப்பிற்கும் அதிகார பரவலுக்குமான இந்த முரண்பாடானது, இதற்குமுன் இல்லாத வகையில் இந்திய முதலாளித்துவ அமைப்பின் பசகாவால் தீவிரப்படுத்துவருகிறது. ஒரே நாடு ஒரே சந்தை, பொது அரசியல் பொருளியில் கொள்கை என்ற முழக்கத்தின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிற பொது சேவை வரி மசோதாவானது, மாநில அரசுகளின் உரிமையை பறிக்கிற முக்கிய பொருளாதார நடவடிக்கையின் வெளிப்பாடாகும். மாநிலங்களின் குரலை பிரதிபலிக்கிற மேலவை அமைப்பையும் தற்போது நீர்த்துப்போக செய்கிற நடவடிக்கைகளை பசக மேற்கொண்டுவருகிறது. இதன் தொடர்ச்சியானது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது அல்லது முழுவதும் தனியார்மயப்படுத்துவது,குறிப்பாக வங்கிகள், ரெயில்போக்குவரத்து, நீர் விநியோகம் என அரசின் வசமுள்ள அனைத்து நிறுவன அலகுகளும் முதலாளிய வர்க்கத்தின் கைகளில் வழங்கப்படும். சுகாதாரம், கல்வி போன்ற மக்கள் தேவைகளுக்கான அரசின் செலவுகள் கட்டுப்படுத்தப்படும். நிலவுகிற பெயரளவிலான பாராளுமன்ற ஜனநாயகமும் பறிக்கப்படும். போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படும். ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கன்ட் போன்ற மாநிலங்களின் கனிமவளங்களை சூறையாடத் தடையாக நிற்கிற மாவோயிச அரசியல் சக்திகளை வேகமான வகையில் போலி மோதலில் அழித்தொழிக்கிற பணிகள் துரிதப்படுத்தப்படும். காடுகளில் இருந்து பலவந்தமாக பழங்குடிகள் வெளியேற்றப்படுவார்கள். எதிர்ப்புகளை கட்டுப்படுத்த இராணுவம்,போலீஸ் துறைகள் நவீனமயப்படுத்தப்படும். இவையெல்லாம் சமூகப் பொருளியில் அரசியல் அரங்குகளில் ஏற்படுவுள்ள அரசின் பண்பு மாற்றப் போக்குகள்

2
மைய அரசின் இந்த அதிகார-பொருளியில் ஒன்றுகுவிப்பிற்கு எதிரான மாநில அரசுகளின் எதிர்ப்பரசியலில் திருணாமுல் காங்கிரசும், அதிமுகவும் முக்கிய தடை சக்தியாக நின்றுவருகிறது. குறிப்பாக மைய அரசின், தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய மைய உருவாக்கம், உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் திட்டம், சேவை வரி மசோதா போன்ற முடிவுகளுக்கு அதிமுக தீவிரமான எதிர்ப்பைக் காட்டிவந்தது. பெரும் மக்கள் திரளை வோட்டு வங்கி அரசியலுக்கு திரட்டுவது, அதிகாரத்தை தக்க வைப்பதற்க்கான செயலுக்திகளை வகுப்பது,  நடைமுறைப்படுத்துவது, நிலவுகிற அமைப்பின் சட்ட வரம்பிற்குட்பட்ட சீர்திருத்தல் அரசியலை சமூக முரண்பாடுகளுக்கு இறுதியான தீர்வாகப் பேசுவது, பெரு முதலாளிகளுக்கு சேவை செய்வது என்கிற நிலவுகிற முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு நலனுக்கு சேவை செய்கிற அரசியல் கட்சிகளின் பண்புகளில் அதிமுகவும் திருணாமுல் காங்கிரசும் விதி விலக்கல்ல. மாறாக மாநிலங்கள் மீதான மத்திய அரசின் நிதி மூலதன பறிப்பின் பாற்பட்ட அர்த்தத்திலும் வோட்டு வங்கி அரசியல் நலனுக்குமே எதிர்த்து வந்தன.

……..
ஆக,முதலாளித்துவ அமைப்பிற்கு சேவை செய்வது என்ற உள்ளடக்கம் மாறாமல் மத்திய அரசும் மாநில அரசும் மேற்கொள்கிற சண்டையில் உழைக்கும் வர்க்கத்திற்கு அணு அளவிலும் லாபம் இல்லை. மாறாக துன்பத்தை யார் வழங்குவதே யார் பொறுப்பேற்பது மட்டுமே கேள்வி. உழைக்கும் வர்க்கத்தை சுரண்டுகிற கும்பலில் யார் ராஜாவாக இருந்தாலும் யார் ராணியாக இருந்தாலும் பாட்டாளி வர்க்க சுரண்டலை, இயற்கை வள சுரண்டலை மேற்கொள்கிற கும்பல்கள் வீழ்த்தப்பட வேண்டியவர்களே.

மாறாக ஆளும்வர்கதிற்கு இடையிலான முரண்பாட்டில் ஒரு பக்கத்திற்கு நின்று முட்டுகொடுப்பது உழைக்கும் வர்க்க அரசியலுக்கு செய்கிற பச்சைத் துரோகம். இந்தப் பிரச்சனையை அதாவது முதலாளித்துவ ஜனநாயக அரசியல் எல்லைக்கு உட்பட்ட மாநில அரசின் சுயாதின செயல்பாட்டை முடக்குகிற இந்து தேசியவாதத்தை அதன் அதிகார சுற்றுவளைப்பை,நலன்களை இழக்குற பெரும்பாலான உழைக்கும் மக்கள் திரள் அரசியல் ஊடாகவே முறியடிக்க இயலும். இப்போராட்டமானது அரசியல் சட்டகத்திற்கு உட்பட்டும் வெளியேவும் நடைபெற்றேத் தீரவேண்டும்.பிற தேசி இனங்களை ஒடுக்குவது போல, தமிழ்ச்சமூகத்தை ஒடுக்குகிற மைய இந்து தேச அரசின் பிரதிநிதியான பசகவின் ஒடுக்குமுறையையும் அதன் அங்கங்களாக திகழ்கிற சந்தர்ப்பவாத சக்திகளையும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான உறுதியான சோசலிச, ஜனநாயக போரட்டத்தாலேயே தீர்க்கமுடியும்.

 அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.