விநாயக முருகன்

விநாயக முருகன்
விநாயக முருகன்

பெண்களின் ஆதர்சம் என்று ஒரு தோழி சொன்னார். மரணம் சிலரை மிக எளிதாக புனிதர்களாக்கிவிடும். ஆனால் காலம் அப்படி செய்யாது. ஹிட்லர் இறந்தபோது ஜெர்மனி நாட்டு மக்கள் எல்லாரும் அழுதார்கள். ஹிட்லர் புனிதபிம்பமாக மாறினார். இன்னமும் ஜெர்மனியில் ஹிட்லருக்கு தீவிர ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். ஹிட்லர் ஜெர்மனியர்களுக்கு அவ்வளவு ஆதர்சம். ஆனால் யூதர்களுக்கு? வரலாறு இன்னமும் ஹிட்லரை நினைவில் வைத்துள்ளது. ஆனால் என்னவிதமாக என்பதுதான் கேள்வி.

ஒருவரின் மரணத்தின்போது அவரின் செயல்பாடுகளை விமர்சிப்பது அநாகரிகம்தான். ஆனால் மறுநாளில் விமர்சிக்கலாம் அல்லவா? சரி. மறு ஆண்டில்? பத்து வருடங்கள் கழித்து விமர்சிக்கலாமா? அல்லது விமர்சிக்கவே கூடாதா? மனிதர்களுக்குதான் இந்த நியதிகள். ஆனால் காலத்துக்கு இந்த கருணை எல்லாம் இல்லை. அது எப்போதும் கறாராக வரலாற்றில் தன்னை பதிவுசெய்தபடியே ஓடிக்கொண்டிருக்கும். ஒருவர் இயற்கை எய்திவிட்டார். அவரை விமர்சிக்கவே கூடாது என்றால் உலகில் எந்தத் தலைவரையும் நாம் விமர்சனம் செய்யவே முடியாது. தவிர ஒருவருக்கு நாம் கொடுக்கும் அதே நியாய தர்மங்களை இன்னொருவருக்கும் கொடுக்கவேண்டும். மரணத்தின்போது கூடும் கூட்டம் அந்த மனிதரின் செயல்பாடை கணிக்க உதவும் ஓர் அளவுகோல் அல்ல.

உண்மையில் பெண்களின் ஆதர்ச காலகட்டத்தில்தான் அதிகளவு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தன. அதிகாரவர்க்கம் சொன்ன பைலில் கையெழுத்து போடாமல் மறுத்ததோடு முதல்வர் என்ன பெரியகொம்பா? தோற்றஅடிப்படைதான் முதல்வராக தகுதியென்றால் நானும் முதல்வராகியிருப்பேன் என்று துணிச்சலாக பதில் சொன்ன அந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியை நினைவில் கொண்டு வரவேண்டும். தனது முகத்தில் ஆசிட்வீச்சு வாங்கி தன் வாழ்நாள்முழுக்க நடைபிணமாக வாழும் சந்திரலேகா மீது ஏன் பெண்கள் அனுதாபம் கொள்ளவில்லை? ஆசிட் அடித்த மும்பை கூலிப்படையை சேர்ந்த சுர்லாவை காப்பற்ற போராடியவர் யார்? வச்சாத்தி, கோவை சின்னாம்பதி, சிதம்பரம் பத்மினி, வீரப்பன் வேட்டையில் சூறையாடப்பட்ட கிராமங்களில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவர்கள் எல்லாருமே பெண்கள்தானே? ஷெரினா (கஞ்சா வழக்கு), பத்மினி (காவல்துறையினர் செய்த பாலியல்) இருவரும் பெண்கள். தருமபுரியில் பேருந்தில் எரித்துக்கொல்லப்பட்ட கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி மூவரும் பெண்கள். எத்தனை ஆடிட்டர்கள் இங்கு செருப்படி வாங்கினார்கள்? உண்மையை எழுதிய எத்தனை பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டார்கள்? எத்தனை போலி என்கவுண்டர்கள்? எத்தனை பேர் அவமானமும், வேதனையும் அடைந்திருப்பார்கள்? நள்ளிரவு கைதுகள், கஞ்சா வழக்குகள், தொழிலதிபர்களின் தற்கொலைகள்.

ஒருவர் இறக்கும்போது அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் எப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்பதை வைத்து அவரின் செயல்பாடுகளை நாம் கணிக்கலாம். வாழ்நாள் முழுக்க கும்பிடு போட்டவர்கள் இன்று அழவில்லை என்பதை நாமே நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதிகாரமையங்களுக்கு, அவர்களுக்கு ஒத்து ஊதும் ஊடகங்களுக்கு தேவை இன்னொரு இரும்புமனிதர். அவர்களுக்கு நிமிர்ந்து எழுபவர்களை பார்த்தால் பிடிக்காது. அவர்களுக்கு தேவை காலமெல்லாம் தங்கள் காலடியில் குனிந்து கிடப்பவர்கள். அதனால் இப்போது அவசர அவசரமாக இன்னொரு அதிகார மையத்தை தேடிபிடிக்க அலைகிறார்கள். முந்தைய இரும்புமனிதர்களின் வரலாற்றில் கறை படிந்துவிடக்கூடாது என்று தவிக்கிறார்கள். நாமும் இன்னொரு பிம்பம் தேடி அழைக்கிறோம். ஒருவர் மரணத்தின்போது ஊதப்படும் அதிகப்படியான புகழுரைகள் ஒன்றிரண்டு நாட்கள் தாங்கும். மீடியாக்களின் மாஸ்ஹிஸ்டிரியா மக்களை சில மணித்துளிகளுக்கோ, சில நாட்களுக்கோ உணர்ச்சிவசப்பட வைக்கும். உண்மையை தற்காலிகமாக மறைத்து புனிதர்களாக தோற்றப்படுத்திவிடலாம். ஆனால் காலம் எப்போதும் அந்தந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளோடுதான் மனிதர்களை நினைவுகூறும். நீங்களோ நானோ வரலாற்றின் பக்கங்களை ஒருபோதும் திருத்தி எழுதிவிட முடியாது. போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள். இது எந்தளவு உண்மையோ அந்தளவு இன்னொரு உண்மை. மனிதன் பிறந்தால் சாகத்தான் வேண்டும் என்பதும். ஒருவேளை இதெல்லாம் அவருக்கு தெரியாமல் நடந்தது சுற்றி இருப்பவர்கள் செய்தது என்றால் அது அவரது நிர்வாக திறமையின்மையைத்தான் காட்டும்.

விநாயக முருகன், எழுத்தாளர். சென்னைக்கு மிக அருகில்ராஜீவ்காந்தி சாலைவலம் ஆகிய நாவல்களின் ஆசிரியர்.  அண்மையில் வெளியாகியிருக்கிறது ‘நீர்’ நாவல்.