சசிகலா தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான மு.தம்பித்துரை தெரிவித்துள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்களால் நான், மக்களுக்காக நான் என்பதே அம்மாவின் தாரக மந்திரம்.

சமூகநீதி காக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வினை உறுதி செய்யவும், சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படவும், இந்திய குடியரசில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் தன்னையே அர்ப்பணித்து எம்.ஜி.ஆர். காட்டிய புனிதப் பாதையில் வாழ்ந்த அம்மா இன்று நம்மிடையே இல்லாத சூழலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சிறப்புற வழிநடத்தும் தகுதியும், ஆற்றலும், அறிவும், அனுபவமும் ஒருங்கே அமையப்பெற்றவர் சின்னம்மா மட்டுமே.

அகில இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அறியப்பட்ட இயக்கமாக அம்மாவால் உருவாக்கப்பட்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும் வழிநடத்தி காப்பாற்ற காலம் நமக்களித்திருக்கும் கொடையாக சின்னம்மா திகழ்கிறார்.

கடந்த 35 ஆண்டுகளாக அம்மாவோடு நெருங்கிப் பழகி, அவரோடே வாழ்ந்து அவர்களுக்காக எல்லா வகையான தியாகங்களையும் செய்திருப்பவர் சின்னம்மா. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்குகளில் சிறை சென்று, கொடுமைகளுக்கு ஆளானவர். அம்மாவுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அனைத்தில் இருந்தும் அவரை காப்பாற்றியவர், கட்சி நிர்வாகத்திலும், ஆட்சி நடத்துவதிலும் அரிய ஆலோசனைகளை அம்மாவுக்கு வழங்கி உறுதுணையாய் நின்றவர் என்று சின்னம்மாவின் சிறப்பு இயல்புகளை ஏராளமாக பட்டியலிடலாம்.

அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோர்களின் வழியில் சாதி, மத வேறுபாடுகளை கடந்து தொண்டர்களை அரவணைத்து பாதுகாத்து வழிநடத்தும் ஒப்பற்ற ஆற்றல் நிறைந்தவர் சின்னம்மா ஒருவர் மட்டுமே.

அம்மா என்று அழைக்கத் தொடங்கிய நாளில் இருந்தே அவருக்கு துணையாக இருந்து செயல்பட்டவரை அனைவரும் சின்னம்மா என்று அழைக்கத் தொடங்கினோம். அப்படி அழைப்பதை புரட்சித்தலைவி அம்மா அவர்களும் ஏற்று அங்கீகரித்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சின்னம்மாவே அம்மாவின் அரசியல் வாரிசு என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும், தமிழ் மக்களும் நன்கு அறிந்த ஒன்றாகும்.

என்னைப் போன்ற கழக தொண்டர்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்று சின்னம்மா, கழகத்தின் தலைமை பொறுப்பினை ஏற்றுக் கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும், தமிழகத்தையும் காக்க வேண்டுமாய் நன்றிப் பெருக்கோடும், நல்லெண்ண வாழ்த்துக்களோடும் கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.