தயாளன்

நிறைய பேர் மழை பொழிவது நல்லதுதான் என்ற விதத்தில் பதிவிடுகிறார்கள். ஒருவகையில் மழை வருவது நல்லதுதான். ஆனால், வரப்போவது சென்ற ஆண்டு மழையைப் போல நின்று அசராமல் பெய்யக்கூடிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் வரக்கூடிய மழை இல்லை. மணிக்கு 100 கிமீட்டர் வேகத்தில் வரவிருக்கும் காற்றும் நீர் நிரம்பிய புயல் மேகங்களும். “தானே” புயலின் போது கடலூரில் வலுவான பலா மரங்களே தூக்கி வீசப்பட்டன. இவ்வளவுக்கும் அவை சமவெளிகளில் இருப்பவை. சென்னை முழுவதும் நடப்பட்டிருக்கும் தூங்கு மூஞ்சி மரங்கள் வேர்ப்பிடிப்பு அற்றவை. நிறைய மரங்கள் பெரிதாக வளர்ந்திருக்கின்றன. 15 கிமீட்டர் வேகத்துக்குக் கூட அவை தாங்காது. 100 கிமீட்டர் வேகத்தில் காற்றடிக்கும் போது சென்னையின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படக் கூடும்.

இன்னும் மழைக்கும், புயலுக்கும் என்ன விதமான முன்னெச்சரிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற புரிதலுடன் அரசும் நிர்வாகமும் இயங்குவதாக சொல்ல முடியாது. விழுந்த மரங்களை அப்புறப்படுத்துவதே மிகப் பெரும் சவாலாக இருக்கக்கூடும். சென்ற ஆண்டு மழையின் போது மரங்கள் பெரும்பாலும் விழவில்லை. 1994 புயலின் போது வண்டலூர் zooஇல் இருந்த மரங்கள் அனைத்தும் விழுந்ததை பதிவு செய்திருக்கிறார் வெதர்மேன். 1994ல் காற்றின் வேகம் 134 கிமீ. வர்தா 100கிமீ என்று சொல்கிறார். 100 கிமீ வேகத்தில் காற்று அடிப்பது கடலூருக்கும் நாகப்பட்டிணத்திற்கும் பழக்கமானதாக இருக்கலாம். ஆனால், சென்னை போன்ற காங்கிரீட் காடுகளில் இது மிகவும் தீவிரமானது. மேலும் நடா புயலைப் போல வர்தா வறண்ட புயல் இல்லை. வர்தாவின் காற்றின் மேலடுக்கில் -90 செல்சியஸ் வரை ஈரப்பத இருப்பதாகவும் சொல்கிறார். நீர் நிரம்பிய மழை மேகங்களும் 100 கிமீட்டருக்கும் மேலான வேகத்தில் வீசும் காற்றும் ஏற்படுத்தும் சேதமும் அதன் இலக்கும் வேறாக இருக்கும். இயற்கை இடர் தராதுதான். ஆனால், அதை எதிர்கொள்ளும் நமது அலட்சியமும், நிர்வாகமும்தான் உண்மையான பேரிடர். இயற்கையிடமிருந்து, மேலும் ஒரு பாடத்தைக் கற்கவிருக்கிறோம். எண்ணூரில் புயல் எச்சரிக்கைக் கூண்டு எண் 10. அதிகபட்ச எச்சரிக்கை எண்ணே 11தான்.

சென்னையைப் பொறுத்தவரை ஒரே ஒரு ஆறுதல் மின்சார இணைப்புகள் அனைத்தும் பூமிக்கு அடியில் இருக்கின்றன. எனவே மின்சாரத் துண்டிப்பு அதிக நேரம் இருக்காது.

சென்ற ஆண்டு நீர். இந்த ஆண்டு காற்று.

தயாளன், ஊடகவியலாளர்.