சந்திரமோகன்

சந்திர மோகன்
சந்திர மோகன்

1)பாரதீய சனதா’விற்கு ஆதாயம் :-

ஜெயா மறைவுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் உள்ள அ.இ.அ.தி.மு.க அரசாங்கத்தையும், அதிமுக கட்சியையும் கட்டுப்படுத்துவதில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது. கடந்த இருமாத காலமாக,தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு முக்கியமான பங்கு வகுத்தனர்.அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களைக் கையாளுவது உட்பட பல்வேறுபட்ட விவகாரங்களைக் கையாள்வதில், பிற பிஜேபி உயர் தலைவர்களும் பிடியை இறுக்கமாக வைத்துள்ளனர்.

ஜெயா & சசிகலா மீதான வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து குவித்த வழக்கும், கட்சி & அதிமுக அமைச்சர்கள் கரன்சிகளாக குவித்து வைத்திருக்கும் கருப்பு பணம் போன்ற பிரச்சினைகளும் அவர்களை பாரதீய சனதாவிடம் சரணடைவதை தவிர வேறு வழியில்லை என நெருக்கியுள்ளன.

த.நா.ல் சமீபத்தில், கடந்த இரு நாட்களில் நடைபெற்ற இரண்டு முக்கியமான ரெய்டுகள், 100 கோடி முதல் 200 கோடி வரை பணம், நகைகள் கைப்பற்றப்பட்ட விவகாரங்களில் தொடர்பு உள்ளவர்கள் புதிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் ஆவர்.

பிஜேபி’யானது சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று இடைத் தேர்தல்களில், தனித்து போட்டியிட்டு, அதிமுக, திமுகவுக்கு அடுத்ததாக, அனைத்து எதிர்கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தை பெற்றது.

பிஜேபி, இந்து முன்னணி தமது அடித்தளத்தை விரிவுபடுத்தியுள்ளன. கூடுதலாக வன்முறைகளையும் கட்டமைக்கின்றன. (கோவை கலவரம் நல்ல எடுத்துக்காட்டு) ஆர்.எஸ்.எஸ் கூட இந்து சமய பாதுகாப்பு அமைப்புகள் என்ற பெயரில் மக்களை அணிதிரட்டுகிறது.

வருங்காலத்தில், அதிமுக ஆதரவுடன் பிஜேபி- ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகள் வேகம் பிடிக்கும். (தேவைப்பட்டால், அதிமுகவில் பிளவுகளையும் கூட அரங்கேற்றும்.)

2) நெருக்கடியில் அ.இ.அ.தி.மு.க !

அ.இ.அ.தி.மு.க என்பது, அடிப்படையில்
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மீதான கவர்ச்சி மற்றும் சில பிராந்திய நலன்களுடன் கூடிய முதலாளித்துவ கட்சியாகும்.

முதல்வர் ஓபிஎஸ் மற்றுமுள்ள முன்னணித் தலைவர்கள், சுதந்திரமான அரசியல் நிலைப்பாடுகளுடன், அரசியல், கருத்தியல் தெளிவுடன் கட்சியை, ஆட்சியை நடத்துவதில், ஜெ’ வுடன் ஒப்பிட்டால் திறமை மிகவும் குறைந்தவர்கள் ஆவார்கள். ஜெயாவின் சொத்துக்களை தனது பிடிக்குள் வைத்துக் கொள்ள விரும்பும் சசிகலா அவர்களும் அரசியல்வாதி அல்ல! ”

“கட்சியை மொத்தமாக கட்டுப்படுத்த சசிகலா மூலமாக தேவர் லாபி முயற்சிக்கிறது ; கட்சிக்குள் உள்ள கொங்கு மண்டல கவுண்டர் லாபி கடுமையாக எதிர்க்கிறது” என்ற செய்திகளில் உண்மை இருக்கவே செய்கிறது. தற்காலிகமாக சமரசம் எட்டப்பட்டாலும் கூட, அதிமுகவுக்குள் குழுக்கள், பிளவுகளுக்கான வாய்ப்புகளை எதிர்காலத்தில் ஒதுக்கித் தள்ள முடியாது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பிஜெபி, திமுக இரண்டுமே முயற்சிக்கும்.

அதிமுகவின் நான்கரை ஆண்டு கால ஆட்சி, 50 எம்.பி’ க்கள் மத்தியில் இருப்பது என்பது அனைத்து அரசியல் நகர்வுகளையும் தீர்மானிக்கிறது.

3) ம.ந.கூ கரைகிறது!

மாறி வருகிற அரசியல் சூழலில், மக்கள் நலக் கூட்டணியானது படிப்படியாக சுருங்கி வருகிறது. வைகோ பாரதீய சனதா நோக்கி நகர்ந்து விட்டார். தமிழக அரசியலில் ஒரு மாற்றாக கருதப்பட்ட விஜயகாந்த்தின் தேமுதிக தனது அரசியல் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. திருமாவளவன் – விசிக’ வும் கூட இடதுசாரிகள் மற்றும் திமுக விற்கு இடையே அலைபாய்கிறது; எதிர்காலத்தில், தேவையான தருணத்தில், தனது கட்சிக்கு எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களின் தேவைக்காக எத்தகைய முடிவையும் அது மேற்கொள்ளும்.

4) இடதுசாரிகள் முன்னுள்ள சவால்கள் :-

அ) தற்போதைய தமிழக அரசியல் சூழலில், இந்துத்துவா சக்திகளின் எழுச்சியை, சதிகளை முறியடிக்க, இடதுசாரிக் கட்சிகள் தங்களுடைய “சுதந்திரமான” அரசியல், கருத்தியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தங்களது அமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும்.

ஆ) கார்ப்பரேட் ஆதரவு, இந்துத்துவா ஆதரவு ஓபிஎஸ் & மோடி ஆட்சிகளுக்கு எதிராக, இடதுசாரி கட்சிகள், வர்க்க, வெகுசன அமைப்புகளின் விழிப்புணர்வை உயர்த்துவதுடன், மக்களின் போராட்ட இயக்கங்களையும் கட்ட வேண்டும்.

இ) மக்கள் விரோத முதலாளித்துவ கட்சியான “அதிமுகவை பாரதீய சனதாவிடமிருந்து பாதுகாக்க வேண்டும்” என்ற குரல் ஓரஞ்சாரமாக இடது முகாமில் ஒலிப்பது அரசியல் ரீதியில் அபாயகரமானதாகும். பாஜக’வை முறியடிக்க எந்தவொரு முதலாளித்துவ கட்சியையும் பாதுகாப்பது கம்யூனிஸ்ட்களின் வேலை இல்லை!

தற்போதைய தேவை இடதுசாரிக் கட்சிகளின் வலுவானக் கூட்டணி மற்றும் மக்கள் இயக்கங்கள் தான்! ம.ந.கூ போன்ற எந்த முயற்சியும் கூட தற்போது பயனளிக்காது என்றே அனுபவம் தெரிவிக்கிறது.

தேவையான தருணங்களில், ஒத்த கருத்துள்ள முற்போக்கு, சனநாயக சக்திகளுடன் கூட்டு நடவடிக்கைகளை கட்டமைக்கலாம்.

ஈ)பெரு முதலாளித்துவ ஆதரவு, இந்துத்துவா ஆதரவு மத்திய, மாநில ஆட்சிகளுக்கு எதிராக, தமிழகத்தில் வலுவான போராட்டங்களைத் தொடுக்க, இடதுசாரிக் கட்சிகளின் அணிகளை, ஊழியர்களை கருத்தியல் – அரசியல் ரீதியாகப் பலப்படுத்துவதும், கட்சிகளின் அடித்தளங்களை வலுப்படுத்துவதும் கூட அவசர அவசியமாகும்.

தமிழகத்தில் பாஜகவின் எழுச்சியின் முன்னால், இடதுசாரிகள் தங்கள் வரலாற்று கடமையை நிறைவேற்ற ஒன்றுபட வேண்டும்!

ஒற்றுமையுடன், உறுதியுடன் முன்னேற வேண்டும்!

சந்திரமோகன்,  சமூக- அரசியல் செயல்பாட்டாளர்.