கதிர் வேல்

கதிர்வேல்
கதிர்வேல்

ஒரு டூரின்போது வண்ணாரப்பேட்டை பிடபிள்யுடி கெஸ்ட் அவுசில் தங்கினார் எம்ஜிஆர். கட்சிக்காரர்கள் சந்தித்து பேசினார்கள். கட்சியில் இல்லாதவர்களும் போயிருந்தோம். கெடுபிடி ஏதும் இல்லை.

லோக்கல் நிர்வாகிகள் சிலர் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். அதில் சர்ச்சை ஓடிக் கொண்டிருந்தது. ஜி ஆர் எட்மண்ட், நம்பிராஜன், கருப்பசாமி பாண்டியன் முதலான பிரமுகர்கள் ஒரு கூட்டத்திடம் சமரசம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

சத்தம் கேட்டு எல்லாரையும் உள்ளே அழைத்து விவரம் கேட்டார் எம்ஜிஆர். பலரும் ஒரே நேரத்தில் பேச தொடங்கினார்கள். ஒருத்தர் பேசுங்கள் என்ற எம்ஜிஆர், என்ன நினைத்தாரோ, ஒரு இளைஞனை பார்த்து “நீங்க சொல்லுங்க” என்றார்.

அவர் ஒரு சைனா காரர். அப்பா ஊரில் கொஞ்சம் பிரபலமான பல் டாக்டர். அதிமுகவில் தொடக்க நாள் முதல் உறுப்பினர். “தலைவர் நீங்க செஞ்சது பெரிய தப்பு!” என்றார் அந்த இளைஞர் மழலை போன்ற அந்நிய தொனியில்.

திடீர் நிசப்தம். எல்லோரும் எம்ஜிஆரை பார்த்தனர் அவர் ரியாக் ஷனுக்காக. சீனரை உற்றுப் பார்த்த எம்ஜிஆர் குபீரென்று சிரித்தார். “என்ன தப்புனு சொல்ல மாட்டீங்களா?” என்றார்.

திருநெல்வேலி நகர அதிமுக நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் நடத்தை சரியில்லாதவர் என்றும், அவரால் கட்சியின் பெயர் களங்கப்படும், குறிப்பாக பெண்கள் முகம் சுழிப்பார்கள் என்றும் சீன இளைஞர் விளக்கினார்.

முழுவதும் கேட்ட எம்ஜிஆர், “உங்க குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வச்சுருக்கீங்களா?” என்று கேட்டார்.

இளைஞர் நொடியும் தாமதிக்காமல், “ஊர்ல எல்லாருக்கும் தெரியும். எவிடென்ஸ் கொடுன்னா நான் எங்க போவேன்? நீங்கதான் போலீஸ் அல்லது இன்டலிஜென்ஸ் மூலமா விசாரிச்சு தெரிஞ்சுக்கணும். நான் பொய் சொல்லல” என்றார் அவரது இனிமையான தமிழில்.

விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துவிட்டு அந்த இளைஞருடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார் எம்ஜிஆர்.

இளைஞனை எம்ஜிஆர் அருகில் சென்று விடாமல் தடுப்பதற்காக பலத்த முன்னேற்பாடுகளுடன் வந்திருந்த கும்பலில் யார் முகத்திலும் ஈயாடவில்லை. அடுத்த நாளே சம்பந்தப்பட்ட நிர்வாகி மாற்றப்பட்டார்.

இந்த நேரத்தில் இது நினைவுக்கு வர காரணம், பொன்னையனின் பேட்டி. “அதிமுக என்பது சாதாரண கட்சி அல்ல, தொண்டர்களின் மாபெரும் இயக்கம்” என்று சொன்னார். உண்மைதான். ஆனால், இப்போது அல்ல. தலைமைக்கும் தொண்டர்களுக்கும் நடுவே பெரிய சுவர் எழுப்பப்பட்ட பிறகு நிலைமை அடியோடு மாறிவிட்டது. அது ஜெயலலிதா காலத்தில்தான் நிகழ்ந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.

சாதாரண தொண்டன் என்றில்லை. பதவி வகித்தவர்களும் அதை பற்றி கவலைப்படாமல் எம்ஜிஆருடன் நேருக்கு நேர் நின்று எதிர் கருத்தை முன்வைக்க முடிந்தது. அவர் உடல் நலம் குன்றும் வரையில்.

அமைச்சரவையில் சுதந்திரமாக கருத்து பரிமாற்றம் நடந்தது. இறுதி முடிவு எம்ஜிஆருடையது; அந்த முடிவை ஏற்கனவே அவர் எடுத்திருப்பார் என்று தெரிந்தும் அமைச்சர்கள் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்க வாய்ப்பிருந்தது.

அமைச்சரவையில் இல்லாத பி.எச்.பாண்டியன் போன்றவர்களும் எம்ஜிஆருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று தனக்கு தெரிந்த சட்டம் அல்லது தர்மம் அடிப்படையில் வாதம் செய்பவர்களை எம்ஜிஆர் அடக்கி வைத்ததில்லை.

அன்று அப்படி கர்ஜனை புரிந்த பாண்டியன் போன்றவர்களே ஜெயலலிதா தலைமையை ஏற்றுக் கொண்டபின் மனைவிக்கு அரசுப் பதவி, மகனுக்கு கட்சிப் பதவி என்ற பரிசுகள் கிடைத்த பிறகு வாயடங்கிப் போனார்கள் என்றால் மற்றவர்களை சொல்லவா வேண்டும்.

டெல்லியிலும் மற்ற மாநிலங்களிலும் உள்ளவர்களுக்கு, குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு, அதிமுகவை பார்த்து ஆச்சரியம் பொங்கும். எப்படி இவ்வளவு பெரிய கட்சி பிரச்னை இல்லாமல் ஓடுகிறது, தலைமை என்ன சொன்னாலும் தொண்டர்கள் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்களே என்ற ஆச்சரியம். அமைச்சர்களை நினைத்தால் தூக்குகிறார், நினைத்தால் நியமிக்கிறார், என்னய்யா நடக்கிறது என்று கருணாநிதியையே ஏங்க வைத்தவர்தானே ஜெயலலிதா.

தொண்டர்களை பொருத்தவரை அதிமுகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் ரொம்ப வேறுபாடு உண்டு. அந்த கட்சிகளின் தொண்டர்கள் கொள்கையால், கோஷத்தால், கட்டமைப்பால், அணுகுமுறையால் கவரப்பட்டு கட்சியில் சேர்ந்தவர்கள். அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் தலைமைக்காக மட்டுமே கட்சியில் சேர்ந்தவர்கள். அவர்கள் தலைமை மீது வைத்திருக்கும் நம்பிக்கை கடவுள் நம்பிக்கைக்கு சமமானது. அதைவிட அதிகம் என்று சொல்லலாம். “நாளை உன் கடவுளை மாற்று” என்று தலைமை சொன்னால் ஏன் என்றுகூட கேட்காமல் மாற்றிக் கொள்வான். அப்படி ஒரு அவசியம்கூட தலைமைக்கு நேரவேண்டாம் என்றுதான் தலைவர் அல்லது தலைவியையே கடவுளாக வரித்துக் கொண்டார்கள். அவர்கள் அப்பாவிகள். பொறுப்பில் இருப்பவர்கள் கொள்ளை அடித்தாலும் அதிமுக தொண்டன் அநியாயத்துக்கு பயந்தவனாகவே இருக்கிறான். அந்தக் கட்சி நடத்தும் பேரணியில் வேர்க்கடலை விற்பவரே இதற்கு சாட்சியம் சொல்வார்.

அப்படிப்பட்ட ஒரு கட்சி அழிய வேண்டும், ஒழிய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்கூட விரும்பவில்லை. ஆனால், ஏனைய கட்சிகளைபோல, முடிந்தால் இன்னும் ஒருபடி மேலாக ஒரு கட்டமைப்பின் மீது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வெளிப்படையான செயல்பாடுகளை கொண்ட கட்சியாக அதிமுக மாற வேண்டும்; அதனால் வளர வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தொண்டனின் ஏக்கமுமாக இருக்க முடியும்.

அது நடக்குமா? அக்கறையுள்ள சீனியர்கள் அதற்கு முயற்சி எடுப்பார்களா? சுயநலம் மிகுந்த சக்திகள் அதை அனுமதிக்குமா? என்பதெல்லாம் உடனே விடை சொல்ல முடியாத கேள்விகள்.

தொண்ணூறு சதவீதம் பேர் தப்பான வாழ்க்கை வாழ்ந்தாலும் சட்டம் நியாயம் தர்மம் எல்லாம் அழிந்து விட்டதாக அர்த்தமாகாது. எம்ஜிஆரே பலமுறை சொன்னது போல தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்.

கதிர் வேல், மூத்த பத்திரிகையாளர்.