நீட் தேர்வு எந்த நிலையிலும், எந்த மொழியிலும் ஏற்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில்,

“தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு கிடையாது. +2 தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த கல்வியாண்டில் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதனை தமிழக அரசு, அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் ஆகியவற்றின் எதிர்பால் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு கடந்த ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நீட் தேர்வை மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், தற்போது நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது வியப்பளிக்கிறது. தற்போது தமிழில் எழுதலாம் என வஞ்சகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வு எந்த நிலையிலும், எந்த மொழியிலும் ஏற்க முடியாது என்கிற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இதன் மூலம் நீண்ட காலம் போராடி பெற்ற சமூக நீதியை பாதுகாக்கும் விதமாக தமிழக அரசின் நிலைபாடு இருக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.” என தெரிவித்துள்ளார்.