கல்வியாளரும், முற்போக்கு சமூக சிந்தனையாளரும், மொழி சீர்த்திருத்த ஆய்வு அறிஞரும், கவிஞருமான, முன்னாள் துணை வேந்தர் திரு.வ.செ.குழந்தைசாமி 10.12.2016 அன்று சென்னையில் காலமானார்.

கல்வியாளர் வா.செ.குழந்தைசாமியின் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்: முன்னாள் துணை வேந்தர் திரு வா.செ.குழந்தைசாமி அவர்களின் மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து வைத்து அஞ்சலி செலுத்தினேன்.

கல்வி உலகத்திற்கும், தமிழகத்திற்கும் அவரது மறைவு பேரிழப்பு ஆகும். அண்ணா பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக இருந்த அவர், கல்வி துறைக்கு மகத்தான சேவை ஆற்றினார். கழக அரசின் கல்வி கொள்கைகளுக்கும், உலக செம்மொழி மாநாட்டிற்கும் உற்ற துணையாக இருந்தவர். தமிழக மாணவர்கள் சிறந்த அறிவாளிகளாக உருவாக்க அரும்பாடு பட்டவர். துணை வேந்தர் பதவிக்கே பெருமை சேர்த்தவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கல்வியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

வைகோ: தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாளரும், ஈடற்ற தமிழ்ப் பற்றாளரும், பல்கலைக் கழகங்களின் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

அண்ணா பல்கலைக் கழகத்திற்கும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கும், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக் கழகத்திற்கும் துணைவேந்தராக நிர்வகித்து அப்பல்கலைக் கழகங்களின் தரத்தையும், பெருமையையும் உயர்த்திய இப்பெருமகனார், தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தை நிறுவி, தமிழ் மொழிக்கும், தமிழகத்துக்கும் ஈடு இணையற்ற சேவை செய்தார்.

தமிழ் இனத்தின் மீதும், குறிப்பாக மரண பூமியிலே தவிக்கும் ஈழத் தமிழர்கள் மீதும் எல்லையற்ற வாஞ்சையும், பரிவும் கொண்டிருந்தார்.

‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற குறள்மொழிக்கு ஏற்ப, ‘நிறைகுடம் ததும்பாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப தன்னடக்கத்தோடும், அனைவரிடத்திலும் அன்பு காட்டும் மனிதநேயத்தோடும் வாழ்ந்த உத்தமர்தான் முனைவர் குழந்தைசாமி அவர்கள் ஆவார்கள்.

அவர் கல்வித்துறைக்கும், தமிழகத்திற்கும் ஆற்றிய தொண்டுகள் காலத்தால் மறையாதவை ஆகும். அவரது மறைவால் கண்ணீரில் துயர்ப்படும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமதாஸ்: தமிழகத்தின் தலைசிறந்த நீரியல் வல்லுனரும், முன்னாள் துணைவேந்தருமான வா.செ. குழந்தைசாமி சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

தமிழ்நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களான அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை நிறுவி தலைமையேற்று நடத்திய பெருமையும் இவருக்கே உண்டு. மதிப்புமிக்க பொறியியல் வல்லுனராகவும், கல்வியாளராகவும் விளங்கியவர். தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர்.

தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியின் கல்விக் கொள்கையை மனம் திறந்து பாராட்டியவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கல்வி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5,6,7 தேதிகளில் சென்னையில் நடந்த ‘‘இன்றைய தேவைக்கேற்ற கல்வி முறை’’ என்ற தலைப்பிலான 3 நாள் கருத்தரங்கத்தில் பங்கேற்று யோசனைகளை தெரிவித்தார்.

பொதுவாக பொறியியல் வல்லுனர்கள் தமிழ் ஆர்வலர்களாக இருப்பது அரிது. ஆனால், கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பற்று கொண்டிருந்தார். ஈழத்தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுத்தார். அவரது மறைவு கல்வித்துறைக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.ராமகிருஷ்ணன்:  கரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த வா.செ.குழந்தைசாமி, கரக்பூர் ஐஐடியில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். ஜெர்மனி, மற்றும் அமெரிக்காவில் உயர் கல்வி முடித்து, நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புக்களிலும் சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தம் 15 ஆண்டுகள் துணைவேந்தராகவும் செயல்பட்டுள்ளார். யுனெஸ்கோ நீர்வளத் துறைத் திட்டக் குழு உறுப்பினராகச் செயல்பட்டார். நீர்வளத் துறையில் ’குழந்தைசாமி மாதிரியம்’ என்ற கண்டுபிடிப்பை மேற்கொண்டார்.

தமிழகத்தில் பிறந்து, தனது அறிவாற்றலால் சிறந்த கல்வியாளராக உயர்ந்து நம் அனைவருக்கும் சிறப்புச் சேர்த்தவர் குழந்தைசாமி. நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர். குலோத்துங்கன் என்ற பெயரில் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழில் பத்து கவிதைத் தொகுப்புகள், 12 உரைநடை நூல்கள், ஆங்கிலத்தில் ஆறு உரைநடை நூல்கள், ஒரு கவிதை நூலும் வெளிவந்துள்ளன. இவரது அனைத்துக் கவிதைகளின் தொகுப்பு ‘குலோத்துங்கன் கவிதைகள்’ என்ற தலைப்பில் 2002-ஆம் ஆண்டு வெளிவந்தது.

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கியப் பங்களிப்புக்காகச் சாகித்ய அகாதெமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காகப் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருது பெற்றவர். தமிழில் அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைப் படைத்தல், தமிழ் மொழியை நவீனப்படுத்துதல், தமிழ் கற்பதை எளிமையாக்குதல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாகவும், இவரது கட்டுரைகள். கவிதைகள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, பல்கலைக்கழக வகுப்புகளில் பாடமாகவும் இடம் பெற்றுள்ளன.

தமிழ் எழுத்துச் சீரமைப்பில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார், கடந்த 35 ஆண்டுகளாக வரிவடிவ சீரமைப்பைப் பற்றி முழு ஈடுபாட்டுடன் எழுதியும், பேசியும் வந்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக நிறுவனத் தலைவரான இவர், தற்போது தமிழ் மெய்நிகர்ப் பல்கலைக்கழகச் சமூகத்தின் தலைவராகவும், சென்னை தமிழ் அகாதெமி தலைவராகவும், உலகத் தமிழ் ஆய்வுக்கழகத் துணைத் தலைவராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத் தலைவராகவும் பல பொறுப்புகளை வகித்த முனைவர் வா.செ.குழந்தைசாமியின் மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், அவரது மறைவால் வாடும் அனைவருக்கும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இரா.முத்தரசன்: தமிழ்மொழி மேன்மைக்காகவும், தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தவும், ஓய்வறியா முயற்சிகளை மேற்கொண்ட வா.செ.கு., தனது படைப்புகள் மூலம் என்றென்றும் வாழ்வார். இவர் குலோத்துங்கன் என்ற புனை பெயரில் எழுதியுள்ள கவிதைகளும், ஏராளமான கட்டுரைகளும் மனித குலத்தின் சகல பிரச்சனைகளையும் பேசியுள்ளன. இவர் மழைநீர் சேகரிப்பு குறித்தும் நிலத்தடிநீர் ஆதாரத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆக்கபூர்வமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழி மேன்மைக்காகவும், தமிழ் எழுத்துகளை சீர்த்திருத்தவும், ஓய்வறியா முயற்சிகளை மேற்கொண்ட இவர் தனது படைப்புகளில் என்றென்றும் வாழ்ந்திருப்பார். எனினும் அன்னாரது மறைவு ஆய்வுத்துறைக்கு ஏற்பட்ட இழப்பாகும். அன்னாரது மறைவுக்கு அஞ்சலியை தெரிவிப்பதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

கி.வீரமணி: தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாள ரும், தமிழ்மொழி அறிஞரும், நீரியல் (Hydrology) துறையில் உலக நிபுணர்களில் ஒருவரும், நம் தமிழர்களின் பெருமைக் குரிய செம்மொழிச் சிந்தனையாளரும் ஆன ‘டாக்டர் வி.சி.கே.’ என்று அனைவ ராலும் அழைக்கப்படும். அருமை நண்பர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் இன்று (10.12.2016) விடியற்காலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு, நாம் கலங்கிப் போனோம் (அவருக்கு வயது 87).

ஒரு கிராமத்தில் (வாங்கலாம் பாளையம்) ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தமது உழைப்பாலும், ஆற்றல் – அறிவுத் திறனாலும் எவரும் எளிதில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்திற்கு கல்வித்துறையில் வளர்ந்த தமிழ்க்குடி பெருமையடையத் தக்க சான்றோர் பெருமகனாவார்.

அவர் அடக்கமான ஒரு பகுத்தறிவுவாதி மாணவப் பருவம் தொட்டே!

பல்துறை தொழில் கல்வித்துறையில் பல பதவிகள், பிறகு மதுரை, அண்ணா பல்கலைக் கழகம், இந்திரா காந்தி பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர் பதவிகள், பல்கலைக் கழக மான்யக் குழு இவைகளோடு, செம்மொழித் தமிழ் அமைப்பில் அது வருவதற்கும் வந்த பின்பும் பெரிதும் பெரும் பங்காற்றிய பெம்மான்.

தந்தை பெரியார் அவர்களது தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை வரவேற்று ஆதரித்ததோடு அதற்கு அடுத்தக் கட்டத்திற்கும் நாம் அதை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தவர் தமிழ்ப் புலமை, தொழிற் கல்வித் துறைப் புலமை, ஆங்கிலப் புலமை – இவைகளை இணைத்தவர் – தமிழ்கூறு நல்லுலகத்தில் டாக்டர் வி.சி.கே. என்ற வா.செ.கு. அவர்களேயாவர்!

“குலோத்துங்கன்” என்ற புனைப்பெயரில் அவர் சீரிய கவிஞராகவும் திகழ்ந்தவர்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், கல்வி வள்ளல் காமராசர் போன்ற தலைவர்களிடம் மிகுந்த அன்பு செலுத்தியவர்.
தந்தை பெரியார் அவர்கள்பற்றி அவர் எழுதிய கவிதையில் உயிரோட்டமான பகுதியின் துடிப்பை எவரும் மறக்கவே முடியாது.
நீரெல்லாம் அவன் வியர்வை; தமிழகத்தின்
நிலமெல்லாம் அவன் நடந்த தாரை; வாழும்
ஊரெல்லாம் அவன் மூச்சின் காற்று; எம்மோர்
உயர்வெல்லாம் அவன் தந்த பிச்சை அன்றோ?
என்பதுதான் அவரின் பொன்னான பொருள் பொதிந்த வரிகள்.

நம்மிடம் அன்பு பாராட்டிய குடும்ப நண்பராவார். சீரிய பண்பாளர்.

அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர் டாக்டர் திருமதி சவுந்தரவல்லி, அவரது பிள்ளைகள், உறவுகள் ஆகிய குடும்பத்தினருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எளிதில் ஆறுதல் அடைய முடியாத, ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்!

அந்த மாமேதைக்கு நமது வீர வணக்கம்.