தென் மேற்கு வங்க கடலில் உருவாகிய வர்தா புயல் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது.சென்னைக்கு கிழக்கே 61 கிமீ தொலைவில் உள்ள புயல் சில மணி நேரத்தில் பழவேற்காடு அருகே கரையைக் கடக்க தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், வர்தா புயல் அபாயம் நீங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை , மக்கள் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. புயல் மற்றும் கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில், சென்னை எழிலகத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், வர்தா புயலால் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளதாகக் தெரிவித்தார்.

தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் , பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், புயல் கரையைக் கடந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.