சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன்

புயலின் போதும் புயலுக்குப் பின்னும் மழைப் பயணம் போனேன். எனக்கு ஒரு சாலை மார்க்கம் மிகவும் பிடிக்கும். வால்பாறையிலிருந்து அதிராம்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலக்குடி பாதை அடர்த்தியான காடுகளின் வழியாகப் போகும். இரண்டு பக்கமும் மரங்கள் மூடியிருக்கும். ஆங்காங்கே மட்டும்தான் வெயிலைப் பார்க்கவே முடியும். உண்மையில் மரங்களடர்ந்த புதர்களுக்கு மத்தியிலான சாலை அது. மிக முக்கியமான யானை வழித்தடமும்கூட அது. யானைகள் ஒடித்துப் போட்ட மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து கிடக்கும். கிட்டத்தட்ட கடந்த இரண்டு நாட்களாக சென்னையும் அப்படித்தான் இருக்கிறது. பிரதான சாலைகளை விட்டு ஒதுங்கி இணைப்புச் சாலைகளில் சென்றால் இதைப் போலவான காட்சிகளைத்தான் பார்க்க முடிகிறது.
அரசுக் கணக்கீட்டின் படி சுமார் நாலாயிரம் மரங்கள் விழுந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

ஆனால் உண்மையில் அதைவிட அதிகமாக இருக்கும் என்பதைப் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும். இவை பெரும்பாலும் பிரிட்டீஷ் அரசால் வைக்கப்பட்ட தூங்குமூஞ்சி மரங்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சென்னையில் உள்ள தொண்ணூறு சதவித மரங்கள் இப்படிப்பட்ட குல்மொஹர் உள்ளிட்ட இறக்குமதி மரங்கள் என்கின்றனர். வேம்பு உள்ளிட்ட நாட்டு மரங்கள் மிகக் குறைவாகவே இருப்பதாகவும் சொல்கிறார்கள். பெரும்பாலும் நாட்டுமரங்கள் எதுவும் இந்த அளவிற்குப் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என்றும் சொல்கிறார்கள். அதையும் மீறி அடித்த புயலில் வேரோடு சாய்ந்தவைகளும் இருக்கின்றன.

சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பேரிழவிற்கு நிகரான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக அங்குள்ள பேராசிரியர்கள் சிலர் சொல்கிறார்கள். யாரையும் கல்லூரி நிர்வாகம் உள்ளே விடவில்லை என்பதால், உண்மையான பாதிப்புகளின் விபரம் எதுவும் தெரியவில்லை. சென்னைக்குள் இருக்கிற முக்கியமான காடு அது.

போன வருடம்தான் கல்லூரியின் 175வது ஆண்டு விழாவைக் கொண்டாடினோம். இந்தக் கல்லூரியைத் துவக்கும் போது அந்தப் பகுதி பொட்டல் வெளியாக இருந்தது. அத்தனை மரங்களையும் நட்டு அதை ஒரு காடாகத் திட்டமிட்டு வளர்த்தார்கள். ஆங்கிலேயக் கனவான் ஒருத்தரின் கனவு அது. படிக்கிற இடம் பசுஞ்சோலையாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டார் அவர். அந்தக் கணக்குப்படி வைத்துக் கொண்டாலும் கிட்டத்தட்ட அங்குள்ள மரங்களுக்கு நூறு வயதாவது இருக்கும். அவற்றில் பல மரங்கள் வேரோடு பிய்த்துக் கொண்டு போய் விட்டதாக நண்பர்கள் சொன்ன போது வருத்தமாக இருந்தது,

ஏனெனில் சென்னைக் கிறித்துவக் கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரை அந்த மரங்கள் எல்லாம் ஏதோவொரு ஞாபகங்களோடு சம்பந்தப்பட்டவை. உடன் படிக்கும் தோழியரை அழைத்துக் கொண்டு காட்டிற்குள் உலா போவதை வழக்கமாகவே வைத்திருந்தனர். நானும்கூட என்னுடைய தோழியரை அழைத்துக் கொண்டு போய் நாவல் பழங்களைப் பறித்துத் தந்து பொறுப்பாக அழைத்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு மழைக் காலத்தின் துவக்கத்தின் போதும் மழைப் பயணங்களை நிகழ்த்துவோம். மரங்களுக்கூடாக நடக்கும் போது பெருமழை பெய்தால்கூட சிறு துளிகள்தான் தரையில் விழும்படியாக அடர்த்தியாக இருக்கும். ஏற்கனவே மெல்ல மெல்ல அந்த மரங்களை கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் காவு கொடுத்தபடி இருந்தனர். அதைக் கண்டித்து பழைய மாணவர்கள் களத்தில் இறங்கியதும் நடந்தது. இப்போது புயல் வடிவில் ஒரு கோரத்தாண்டவம் நிகழ்ந்திருக்கிறது. இத்தனை மரங்களையும் திருப்பி நட்டு மறுபடியும் அந்தக் காட்டிற்குள் அடர்த்தியைக் கொண்டு வர இப்போது ஆங்கிலேயக் கனவான்கள் யாரும் இல்லை.

சென்னைக் கிறித்துவக் கல்லூரி மட்டுமல்ல, சென்னை முழுவதுமே மீண்டும் மரங்களை வைக்க யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள்? தப்போ சரியோ இறக்குமதி மரங்களையாவது நட்டார்கள். இனி ஒரு குரோட்டன்ஸ் செடியைக்கூட நட்டு வைத்து வளர்க்க ஆட்கள் இல்லை என்பதுதான் உண்மை. கட்டிடத்தை மறைத்துக் கொண்டு நின்ற மரத்தை, புயலின் பேரைச் சொல்லி இரவோடு இரவாக சட்டவிரோதமாக வெட்டி எறிந்தவர்கள் இருக்கிற நகரத்தில் இனி நடுவார்கள் என்பதை எப்படி எதிர்பார்க்க? சென்னை அதன் பசுமையைத் தொலைத்திருக்கிறது. அடுத்த வெயில் காலத்தில் வெயில் நம்மை ‘வைத்துச் செய்யும் போது’ அதன் விபரம் புரியவரும். நம் வாழும் காலத்திலேயே பூகம்பத்தைப் பார்த்தாயிற்று. வெள்ளத்தைப் பார்த்தாயிற்று. புயலையும் பார்த்தாயிற்று. அத்தனை பேரழிவுகளும் செல்பி படங்களாய் கேமராவிற்குள் சேகரமாகி விட்டன. மூளையில் சேகரமாகியிருக்க வேண்டிய ஒன்று மட்டும் ஆகவேயில்லை. ஆகவும் ஆகாது. ஏனென்றால் நம்முடைய ‘டிசைன்’ அப்படி!

சரவணன் சந்திரன் எழுத்தாளர். ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை இவருடைய சமீபத்தில் வெளியான நாவல்கள். அடுத்து ‘அஜ்வா’ என்ற நாவல் வரவிருக்கிறது.