வர்தா புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீர் செய்யவும், மீட்பு-நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் உடனடியாக ரூ.1000 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில்,

வர்தா புயலானது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களிலும் சேதங்களை உருவாக்கியுள்ளது.

புயல் குறித்த தகவல் கடந்த 10-ஆம் தேதியன்று இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இருந்து கிடைக்கப் பெற்றவுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் மாவட்டங்களில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

அவர்களுடன் தமிழக அரசுத் துறைகளும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், விமானப் படை, ராணுவம், கப்பற்படையினரும், கடலோர காவல் படையினரும் மீட்பு-நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். மத்திய பாதுகாப்புப் படையினரை உரிய நேரத்தில் அனுப்பி உதவியதற்காக தங்களுக்கு நன்றி.

வர்தா புயல் காரணமாக, குடிசைகள், குடிநீர்-கழிவுநீர் கட்டமைப்புகள் மிகவும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், மீட்பு-நிவாரணத்துக்குத் தேவையான நிதிகள் குறித்தும் விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிக்கை அடுத்த சில நாள்களில் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்.

புயலால் மூன்று மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும். இந்நிலையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் இருந்து உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என முதல்வர் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.