மணல் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் முகிலம் மீது கரூர் மாவட்டத்தில் நடந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்து செயல்பாட்டாளர் முகிலன் தனது முகநூலில் இட்டுள்ள பதிவில்,

“கரூர் மாவட்டம் வாங்கலில் புதிய மணல்குவாரி அமைப்பற்கான அனுமதியை அரசு கொடுத்துள்ளது. அது சம்மந்தமாக வாங்கல் பொது மக்கள், விவசாய சங்கங்கள், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் இனணந்து வாங்கல் புதுவாங்காலம்மன் திருமண மண்டபத்தில் மணல்குவாரி பற்றி கலந்தாலோசனை கூட்டம் நடந்த ஏற்பாடு செய்து செவ்வாய்கிழமை மாலை சுமார் 05.00 மணிக்கு தொடங்கியது. ..

கூட்டத்தை நடத்த விடாமல் தகராறு செய்து தடுக்க வேண்டும் என மண்டபத்திற்குள் வந்த மணல் மாஃபியா கொள்ளையர்களின் அடியாட்கள் சுமார் 20 பேர் (ஏற்கனவே கடம்பன்குறிச்சியில் மக்களை கல்வீசி தாக்கிய அதே கும்பல்) பல்வேறு வகையில் ரகளையில் ஈடுபட்டனர். ரவுடிகள் 20 பேராக இருந்தாலும் கூட்டத்திற்கு வந்த 250 பேர் தேவையில்லாத பிரச்சினை வேண்டாம் என அமைதியாக இருக்க, காவல்துறை ஆய்வாளர் ஞானசேகர் அங்கு வந்து அரங்க கூட்டமாக இருந்தாலும் முறையாக அனுமதி வாங்கி கூட்டம் நடத்துங்கள் என்று கூறவே காவல்துறையின் அனுமதி பெற்று வந்து கூட்டத்தை நடத்தி முடித்தோம்…

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் புதிய மணல் குவாரி அமைக்க முயற்சிப்பதை கண்டித்து பொதுமக்களை திரட்டி இன்று மாலை வாங்கலில் புதிய மணல்குவாரி அமைக்காதே! – என இன்று 13-12-2016 செவ்வாய் கலந்தாய்வுக் கூட்டம் இரவு சுமார் 07.15 மணியளவில் முடித்து, TN66B 1139 எண் கொண்ட FORD காரில் வாங்கலில் இருந்து கிளம்பினோம். காரை 69 வயதான அய்யா.கே ஆர் எஸ் மணி மணி அவர்கள் ஓட்டி வந்தார்.

நிகழ்ச்சி நடந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 100 மீட்டர் தூரத்தில் மாரியம்மன் கோவில் வீதி வழியாக கரூர் நோக்கி வந்த எங்களை (முகிலன், தமிழ்க்கவி,முருகேசன், K.R.S.மணி, சிறு குழந்தைகள் கிஷோர், தனுசு, ஹரிதாஸ்ரீ ஆகியோரை) கும்மிருட்டில் ஆள் அரவம் இல்லாத பகுதியில் மணல் லாரியை காருக்கு முன்னாள மெதுவாக போக வைத்து, காரை வேகமாக செலுத்த முடியாமல் செய்தனர். மெதுவாக சென்ற காரின் முன்பாக மணல்கொள்ளையர்களின் அடியாட்கள் பைக்குகளை காரின் குறுக்கே போட்டு வழிமறித்து, காரை நிறுத்தினர்.

நாங்கள் வந்த காரை வழிமறித்து, காரின் கதவை திறக்க முயற்சித்து முடியாததால் அனைத்து ரவ்டிகளும் காரை தங்கள் பலம் கொண்ட மட்டும் கைகளால் ஓங்கி குத்தினர். அய்யா மணி அவர்கள் காரை விட்டு இறங்கியவுடன் அவரது கையை பிடித்து திருப்பி முறுக்கவே , அவர் விட்டுவிடு இல்லைஎன்றால் நடப்பதே வேறு எனக் கூறவும் அவரது கையை விட்டு விட்டனர். காரின் பின்பக்கம் அமர்ந்து இருந்த என்னை பித்து இழுக்க காரை ஓங்கி ஓங்கி கைகளால் அடித்தனர். காரின் கதவை வேகமாக குத்தி இழுக்கவே கார் கதவு திறந்து கொண்டது.

காரில் இருந்த என்னை வெளியே இழுத்து தாக்க முயற்சித்தும் நான் வெளியே வராததால் எனது சட்டை பனியனை பிடித்து வெறியோடு இழுத்து அதை கிழித்து எறிந்தனர். பின்பு எனது கழுத்தை நெறித்தும், வெளியில் இருந்து காலால் எட்டி காருக்குள் எட்டி உதைத்தும், கைகளால் எனது மார்பை குத்தியும் கொலைவெறியோடு உன்னை கொல்லாமல் விடமாட்டோம் எனக் கூறி தாக்குதல் செய்தனர்” என தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்களை அடையாளம் தெரியவில்லை என்றும் அவர்கள் ஆறு பைக்குகளில் வந்தனர் என்றும் தெரிவித்துள்ளார் முகிலன்.

“அடியாட்களின் குண்டர்கள் எங்கள் காரை சுற்றி சுற்றி வந்து தாக்குதல் நடத்தி போது காரில் இருந்த மூன்று குழந்தைகளின் அழுகுரல்களும், தோழர். தமிழ்க்கவி போன்றவர்கள் போட்ட அபாய கூக்குரலைக் கேட்டு, பொதுமக்கள் ஓடிவருவதைப் பார்த்த மணல்கொள்ளையர்களின் அடியாட்களை தப்பி ஓடினர்..

பின்பு நாங்கள் வந்த காரை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி திருப்பினோம். நாங்கள் 20 பேர் கரூர் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு சென்று ஆட்சியரை பார்க்க வேண்டும் சொன்னதற்க்கு, ஆட்சியர் இங்கு இல்லை என்றும், கரூர் மாவட்ட ஆட்சியர் வாங்கல் சென்று அங்கு உங்களுக்காக காவல்துறை ஆய்வாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் காத்துக் கொண்டு உள்ளனர் . அவர்களிடம் புகார் கொடுங்கள் என்று கூறியுள்ளார் எனக் கூறவே, நான் (தோழர் முகிலன்) வாங்கலில் காவல்துறையினர் அருகாமையிலேதான் எங்களை கொலைவெறியோடு தாக்கினர் . எனவே வாங்கல் செல்ல மாட்டோம், எந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் வருகிறாரோ அப்போது வரை இங்கு கரூர் மாவட்ட ஆட்சியர் வீட்டில் காத்துள்ளோம் என்று சொன்னோம்.

சுமார் 20 நிமிடத்தில் கரூர் கோட்டாட்சியர், மணமங்கலம் வட்டாட்சியர், கரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அனைவரும் மாவட்ட ஆட்சியர் வீட்டில் உள்ள அலுவலகம் சென்றனர்.

சில நிமடங்களில் இங்கு(மாவட்ட ஆட்சியர் வீட்டில்) இல்லை வெளியே உள்ளார் என சொல்லப்பட்ட கரூர் மாவட்ட ஆட்சியர் அவரது வீட்டில் இருந்து கோட்டாட்சியர், மணமங்கலம் வட்டாட்சியர் ஆகியோருடன் வீட்டில் இருந்து வெளியே வந்து எங்களைப் பார்த்து வந்தார்.அப்போது நேரம் சுமார் 08.00 மணி இருக்கும். அவர் எங்களிடம் என்ன நடந்தது எனக் கேட்டார்.

அவரிடம் இரவு வாங்கலில் நடந்தவற்றை தெரிவித்து, காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் மணல்கொள்ளையர்களின் அடியாட்களுக்கு ஏவல்துறையாக இருப்பதை எல்லாம் சுட்டிக்காட்டி,..

  1. அய்யா நல்லக்கண்ணு 10-07-2016 அன்று கடமன்குறிச்சி மணல்குவாரியை பார்வையிட்ட போது அவரை குவாரிக்குள் போகக் கூடாது எனக் கூறி தகராறு செய்தவர்கள் …

  2. 26.10.2016 அன்று கடம்பன்குறிச்சி- தோட்டக்குறிச்சி வரை மணல்குவாரியை பார்வையிட்ட அய்யா.நெடுமாறன் -தோழர் .மகேந்திரன் உடன் வந்தவர்களை தாக்கியவர்கள்

  3. புகலூரில் அய்யா.விசுவநாதன் அவர்கள் வீட்டிற்கு சென்று மணல்குவாரியை எதிர்த்து போராடாதே என கொலைமிரட்டல் விடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் மைத்துனர் என்று சொல்லிக் கொள்ளும் பாசுகர், புதுக்கோட்டை சித்திரவேல்,கடம்பன்குறிச்சி மனோ ஆகியோர் மீது

நடவடிக்கை என்பது இதுவரை காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தால் எதுவும் எடுக்கப்படவில்லை . கரூர்மாவட்டம் முழுவதும் மணல்கொள்ளையர்களின் ரவடி ராஜ்ஜியமாக உள்ளது. காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் மணல்கொள்ளையர்களின் அடியாட்களுக்கு கைகட்டி சேவகம் செய்து வருகிறது என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் எனக் குறிப்பிட, கரூர்மாவட்ட ஆட்சியர் “கட்டாயம் நீங்கள் இப்போது புகார் கொடுங்கள் உடனே நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார். அவரிடம் “இதுவரை உங்களிடம் கொடுத்த எந்த புகாரின் மீது நடவடிக்கை இல்லாததால்தான் மணல்கொள்ளையர்களின் ரவடி ராஜ்ஜியமாக கரூர் மாவட்டம் உள்ளது என்றேன். அதற்க்கு அவர் கடந்த 3 மாதங்களாக எவ்வளவு மனஉளைச்சலில் நான் உள்ளேன் தெரியுமா? எனக் கூறிக் கொண்டு புகாரை கொடுங்கள் என்றார். மாவட்ட செயல்துறை நடுவர் என்ற முறையில் உங்களிடம்தான் புகார் தருகிறேன்.அதன் மீது நீங்கள் நடவடிக்கை எடுங்கள் என்றோம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேப்பர் வாங்கி மாவட்ட செயல்துறை நடுவராகவும், மாவட்ட ஆட்சியராகவும் இருக்கும் திரு.கோவிந்தராசு அவர்களிடம் புகார் மனுவை எழுதி கொடுத்து வந்தோம்” என தெரிவித்துள்ளார்.