வர்தா புயல் பாதிப்புகளை சீரமைக்க மத்திய அரசிடம் தேவையான உதவிகளைக் கேட்டுப் பெறவேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“வர்தா புயலின் கடும் சீற்றத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. உணவுக்கும், உடைமைக்கும், தங்கும் இடத்திற்கும் மக்கள் பரிதவிக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. ஏழை எளிய மக்கள் தங்களின் வீடுகளை இழந்திருக்கிறார்கள். மீனவர்கள், சிறு வியாபாரிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வருமானத்தை இழந்து அன்றாட வாழ்க்கைக்கே போராடி கொண்டிருக்கிறார்கள். சிறு குறு தொழில் செய்வோரும், படகுகளை இழந்து மீனவர்களும் மோசமாக பாதிக்கப்பட்டு தங்களது எதிர்க்கால வாழ்வாதரத்தை தொலைத்து விட்டு நிற்கிறார்கள். வரலாறு காணாத அளவிற்கு 10,000 த்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தும் மற்றும் 20,000 மேற்பட்ட மரங்கள் விழுந்தும் கிடப்பதால் கடுமையான மின் தட்டுபாடு ஏற்பட்டு அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்றி கொள்ள முடியாமல் இந்த மூன்று மாவட்ட மக்களும் தவித்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசின் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளம்பரப்படுத்தி இருந்தாலும் புயலின் பாதிப்பிற்கு பிறகு எடுக்கப்படும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க வேகம் ஏதும் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது. ஆகவே வெளிமாவட்டங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையில் மின் ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களை வரவழைத்து போர்க்கால அடிப்படையில் இந்த மூன்று மாவட்டங்களிலும் சீரமைப்பு பணிகளை விரைந்து நிறைவேற்றுவது இப்போது மிக முக்கியமானதாகும்.

இந்திய வர்த்தக சபை கூட்டமைப்பு (அசோசம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் வர்தா புயலால் வர்த்தக ரீதியாக தமிழகத்திற்கு 6,600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் மின் வாரியத்திற்கும் இந்த புயலால் பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. மீனவர்களின் படகுகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. சிறு குறு தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளை இழந்திருக்கும் சூழல் போன்றவை தமிழகத்திற்கு மத்திய அரசின் உதவி மிக மிக அவசியம் என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்த தருணத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சர் திரு பன்னீர் செல்வத்துடன் தொலைபேசியில் பேசியிருப்பதை பயன்படுத்தி கொண்டு, உடனடியாக பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து முதல் கட்டமாக 10,000 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் சேதங்களை பார்வையிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் எனவும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். கோரிக்கை விடுப்பதோடு நின்று விடாமல் முதல்வர் டெல்லி விரைந்து பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேட்டு பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.