பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் ‘விலைபோகும் விசுவாச ஊடகங்கள்’ என்ற தலைப்பில் முகநூல் பதிவொன்றை எழுதியிருக்கிறார். இந்தப் பதிவில், ” “விசுவாச தொண்டனின் மனசாட்சி” என்கிற விநோதமான பெயரில் ஒரு அனாமதேய விளம்பரம் தமிழ் நாளிதழ்களில் தொடர்ந்து வெளிவருகிறது. இதில் “சின்ன அம்மா” (கவனிக்கவும் “சின்னம்மா” அல்ல!) ஜெயலலிதாவின் “அருகில், அவரின் மிக அருகில்” இருந்ததாகவும், “தனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்து” வாழ்ந்ததாகவும் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் கீழ் விளம்பரதாரர் பெயரோ, முகவரியோ, தொலைபேசி எண்ணோ எதுவுமே கிடையாது. நீங்களோ, நானோ இப்படி ஒரு மொட்டை விளம்பரத்தைக் கொடுத்தால், இந்த நாளிதழ்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இப்படிப்பட்ட மொட்டை விளம்பரம் கொடுப்பதற்கு அரசு அனுமதிக்கிறதா என்ன? நாளை ஒரு தீவிரவாதக் கும்பலும் இப்படி ஒரு மொட்டை விளம்பரத்தை வெளியிடலாமே?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஊடக அதிபர்கள் நடவடிக்கைகளை கடுமையாக சாடியுள்ளார் அவர்.

“தமிழக ஊடக நிறுவனங்களின் முதலாளிகள் போட்டி போட்டு திருமதி. சசிகலாவை சந்திக்கிறார்கள். நேற்று ‘தி இந்து’ குழுமத் தலைவர் திரு. என். ராம் சந்தித்தாராம், “அண்மை நிகழ்வுகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் உரையாடினர்” என்று வண்ணப் படத்துடன் அவர்கள் பத்திரிகையிலேயே செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். செல்வி ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது, திரு. என். ராம் போயஸ் கார்டன் சின்ன அம்மாவிடமோ, அப்பல்லோ ஆஸ்பத்திரி பெரிய அப்பாவிடமோ நேரடியாகப் பேசி ஒரு பெட்டிச் செய்திகூட வெளியிட முன்வராதது ஏன்? ஊடக தர்மம் பற்றி உலகுக்கே வகுப்பு எடுக்கிறவர் ஆயிற்றே? சில ஊடக வியாபாரிகள் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் உதவாக்கரை அதிகாரிகளைவிட சற்றும் சளைத்தவர்கள் அல்ல” என விமர்சித்துள்ளார்.