மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீரமைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

டிசம்பர் 12 அன்று தலைநகரம் சென்னையிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களையும் தாக்கிய வர்தா புயல் கடுமையான பாதிப்புகளையும், சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் சாய்க்கப்பட்டதின் காரணமாக வீடுகள், குடிசைகள், கார்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கடைகள், சில தொழில் நிறுவனங்கள் மிக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இதன் காரணமாகவும் புயலின் காரணமாகவும் மின்சார கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முப்பதாயிரத்திற்கும் அதிகமான மின் கம்பங்களும் 250-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகளும் முழுமையாக சேதமடைந்துள்ளன.

மணலி, தண்டையார்ப்பேட்டை துணைமின்நிலையங்கள் செயலற்று கிடக்கின்றன.

30-க்கும் மேற்பட்ட மின்தொடரமைப்பு கோபுரங்கள் மண்ணில் சாய்ந்து கிடக்கின்றன. இந்தக்கோபுரம் ஒன்றை சீரமைக்கவே குறைந்தபட்சம் 20 பணியாளர்கள் 5 நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்தால்தான் சீரமைக்க முடியும்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் குடிநீர் மற்றும் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மின்சார துண்டிப்பின் காரணமாக கிட்டத்தட்ட சிறு-குறு தொழில்கள் முழுவதுமாக முடங்கிப்போயுள்ளன.

ஏற்கனவே, செல்லாக்காசு பிரச்சனையால் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் வங்கி சேவை முடங்கிப் போயுள்ளதால் மக்களால் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பின் காரணமாகவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சிக்னல்களுக்கு மின்சாரம் இல்லாததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டு பொதுமக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் மின்சாரக் கட்டமைப்பை முழுமையாக சீரமைப்பதில் மாநில அரசு உரிய கவனம் செலுத்தவில்லை.

கூடுதலாக 15,000-லிருந்து 20,000 பேர் தொடர்ச்சியாக பணிசெய்தால் மட்டுமே ஒரு வார காலத்திற்குள்ளாவது இயல்பு வாழ்க்கையை மீட்டமைக்க முடியும்.

ஆனால், மாநில அரசு கூடுதலாக 3000 பேரை மட்டுமே வரவழைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. வந்தவர்களும் கூட பல இடங்களில் பழுது நீக்கும் கருவிகள், உபகரணங்கள், புதிய மின்கம்பங்கள், கம்பிகள் தட்டுப்பட்டால் முழுவீச்சில் செயல்பட

முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசு இப்பிரச்சனையில் மந்தமாக செயல்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. மக்களைத் துயரத்திலிருந்து மீட்க உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டுமென மாநில அரசை வலியுறுத்துகிறது.

புயலின் காரணமாக உயிரிழந்தோர், உடமைகள் இழந்தோர், தொழில்கள் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

நிவாரணங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக ரூபாய் 1000 கோடி மத்திய அரசு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த புயல் சேதத்தை கணக்கில் கொண்டு மத்திய அரசு உடனடியாக மாநில அரசு கோரும் உதவிகளை செய்ய வேண்டுமென மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

ஏற்கனவே மீட்பு நடவடிக்கைகளில் சில பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கட்சியின் ஊழியர்களும், பொதுமக்களும் முழுமையாக மீட்பு நடவடிக்கையில் இறங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

Photo: Twitter/@RajDhonipk