நாடு முழுவதும் ரொக்கமில்லா மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 340 கோடி மதிப்பிலான பரிசுத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்தியக் கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக தினமணி வெளியிட்டுள்ள செய்தியில்:

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை திரும்பப் பெற்ற பின்னர், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு, மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை சுமார் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

மின்னணு பணப் பரிவர்த்தனை மூலமாக ஊழலையும், கருப்புப் பணத்தையும் முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக குலுக்கல் முறையிலான ரொக்கப் பரிசுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.340 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்னணு பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் அனைத்து மக்களும், வியாபாரிகளும் இந்தத் திட்டத்தில் அடங்குவர். ஏழை, நடுத்தர மக்களுக்காக ரூ.50 முதல் ரூ.3,000 வரையில் மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளனர்.
அதன்படி, கிறிஸ்துமஸ் தினமான வரும் 25-ஆம் தேதியன்று முதல் குலுக்கலும், அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதியன்று மெகா குலுக்கலும் நடைபெறுகின்றன என்றார் அமிதாப் காந்த்.

யாருக்கெல்லாம் பரிசு? 
1. அதிர்ஷ்ட வாடிக்கையாளர் திட்டம் (லக்கி கிருஹக் யோஜனா): குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 15 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு 100 நாள்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும். வாரப் பரிசாக மூன்று வாடிக்கையாளர்களுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

  1. மின்னணு வழி வர்த்தகர் திட்டம் (டிஜி-தன் வியாபார் யோஜனா): மின்னணு முறையிலான பணப் பரிவர்த்தனையை ஏற்கும் வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் தினந்தோறும் பரிசுகள் வழங்கப்படும். வாரப் பரிசாக மூன்று வியாபாரிகளுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.2,500 வழங்கப்படும்.

  2. மெகா குலுக்கல் பரிசுகள்: மெகா குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று வாடிக்கையாளர்களுக்கு முறையே ரூ.1 கோடி, ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம் என்ற வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும். இதேபோல், வியாபாரிகளுக்கு முறையே ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.5 லட்சம் அளிக்கப்படும்.