உடல்நலக் குறைவால் கடந்த 1-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, சிகிச்சைக்குப் பின் 7-ம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு சுமார் 11 மணிக்கு கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை திமுக பொருளாளர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, அவ‌ரது மகள் செல்வி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அழைத்து சென்றனர்.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் அரவிந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள நோய்தொற்றை நீக்குவதற்கான சிகிச்சை தொடங்கிவிட்டதாகவும், ஒரு மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.