கே.ஏ.பத்மஜா

padmaja
கே.ஏ.பத்மஜா

அது ஒரு சிறு நகரம். பொது நிகழ்ச்சி ஒன்றுக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெண் போலீஸாரும் அடங்குவர். காலை உணவுக்காக ஓட்டல் ஒன்றில் நான்கு பெண் போலீஸார் நுழைந்தனர். அங்கு டேபிள்களில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆண்களின் பார்வை அவர்கள் மீது பட்டது. பட்ட அடுத்த நொடியே சட்டென இயல்பாக இருப்பது போல் பாவனைக் காட்டினர். ஆனால், அந்த பெண் போலீஸ் நால்வரும் சாப்பிட்டுவிட்டு கை அலம்பச் சென்றபோது, அங்கிருந்த அனைத்து ஆண்களின் கண்களும் அவர்களின் பின்பக்கத்தை மொய்த்தன. போலீஸ் என்பதால் முன்னே பார்க்க தைரியமின்றி பின்னே நோட்டமிட்ட ஒட்டுமொத்த ஆண்களின் பார்வையும் பல எண்ணங்களைக் கிளப்பின.

ஆதி மனிதன் தானாய் செய்தவற்றில் ஒன்று, உடலை இலை தழைகளைக் கொண்டு மறைத்தது. இன்று வரை மனிதன் மட்டும்தான் இந்த பூமியில் உடலை மறைக்க தனியாய் ஆடை என்று ஒன்றை அணிகிறான். பிறக்கும் குழந்தை நிர்வாணமாய்தான் பிறக்கிறது. எனவே, ஆடை என்பது கை, கால் போல் நமக்கு அத்தியாவசியமான ஒன்று என்றால், பரிணாம வளர்ச்சியில் மனிதன் ஆடையுடன் பிறக்கத் தொடங்கியிருக்க வேண்டும்.

இன்று ஆடை என்பது அவயங்களை மறைப்பது மட்டும் அல்லாமல் ஆண், பெண் என்ற வேற்றுமைக்கும் பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு சமூகமும் தன் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு குறிப்பிட்ட ஆடை என ஆண் – பெண் இருவருக்குமே வகுத்துள்ளது. இயற்கையின் காலமாற்றத்திற்கு ஏற்றாற்போல் தன் உடல் சூட்டை ஒரே சீராய் வைத்துக்கொள்ள சருமம் உதவுகிறது. செயற்கை வாழ்க்கைக்கு அதிகம் பழகிய மனிதன் ஆடை உருவாக்குகிறான். ஆடையும் ஆளுமையும் ஒருவரின் ஆடைதான் இன்று அவரின் முதல் அடையாளம் என்று நம் மூளை மடிப்பில் பதிந்துவைத்துவிட்டோம். நிறத்துக்கு சம்பந்தம் இல்லாத ஆடை அணிந்தால் காமன்சென்ஸ் இல்லாதவர். கவர்ச்சி ஆடை அணிந்தால் காமம் கூடியவர்கள். அரைகுறை ஆடை அணிந்தால் கலாச்சார கேடு… இப்படி நாம் யார் என்று முத்திரை குத்திவிடும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், பல நேரங்களில் பல இடங்களுக்கும், விசேஷங்களுக்கும் நமக்கு விருப்பம் இல்லை என்றாலும், நாம் ஒரு நிர்பந்தத்தில் ஒரு குறிப்பிட்ட ஆடையை அணிகிறோம். ஆடை விஷயத்தில் நாம் சுயமாய் சிந்திப்பது இல்லை. சந்தோசமாகவும் இல்லை. சவுகரியமாகவும் இல்லை என்பதுதான் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

இந்த ஆடை விஷயத்தை உடைத்து எரிந்து, தனக்காக மட்டும் வாழும்போதும் தன் சுயத்திறமையை மட்டும் நம்பி தன் மன விருப்பப்படி மட்டும் ஆடை அணியும் மனிதர்களை நம்மில் பெரும்பாலானோரும் எப்போதும் மதித்ததே கிடையாது. ஆடையும் பெண்களும் ஆடை விஷயத்தில் பெண்ணுக்கு ஆண் மட்டும் அல்லாமல், பெண்ணும் கட்டுப்பாடு இடுகிறாள். ஏன் என்று கேள்வி கேட்டுப் பழகாமல் வளர்க்கபட்டதன் விளைவே இது. ஒரு வீட்டிற்குள் பருவ பெண் என்ன உடை அணியவேண்டும் என்று அவள் தாய், தந்தை, அண்ணன் என அனைவரும் முடிவு செய்கின்றனர். பலாத்காரத்துக்கும் சீண்டல்களுக்கும் முக்கியமான காரணம், அரைகுறை ஆடைதான் என்று இன்னும் நாம் சப்பை கட்டுக்கட்டி கொண்டேதான் இருக்கிறோம். ஒரு பருவ வயது பெண் எப்படி உடை அணியவேண்டும் என்று கண்டிப்பாய் இருக்கும் தாய் அல்லது பெற்றோர் பருவ வயது ஆணுக்கு, பெண்ணை எப்படி பார்க்கவேண்டும் என்று கற்றுக்கொடுக்கத் தவறிவிட்டு, ஆண்களை மேலும் பலவீனமானவர்களாக வளர்ப்பதை இன்றளவும் ஒப்புக்கொண்டது இல்லை.

பல நூறு ஆண்டிற்கு முன்பு வெயில் பிரதேசத்தில் இருக்கும் ஆணுக்கு அதிகமாய் செக்ஸ் உணர்வுகள் இருப்பதால், அவர்கள் பெண்களுடன் அதிகப்படியான உடலுறவு வைத்துகொண்டனர். எந்தவித கர்ப்பத்தடை முறைகளும் இல்லாத காலக்கட்டத்தில் ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டப்படாமல் இருக்க பெண்கள் தங்களை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் ஆடைகளை அணிவிக்கப்பட்டனர். ஆனால் இன்று ஆணும் பெண்ணும் சரிசமம் என்றும் நின்று பேசக் கூட நேரம் இல்லாத அவசர உலகிலும் நாம் அந்த ஆடையைப் புகுத்தி கட்டுப்பாடாய் கடைபிடிக்கிறோம். ஷாட்ஸ் போட்ட அண்ணண், சட்டை போடாத அப்பா, முண்டா பனியன் மட்டுமே அணியும் காய்கறிகாரர் என ஆண்களை இப்படி அரைகுறை ஆடையில், பிறந்தது முதல் பார்த்துப் பழகிய பெண்கள், இதனால் தங்கள் சவுகரியத்துக்கு ஏற்ப ஆடை அணிந்த ஆண்களைப் பார்த்தவுடன் உணர்வு தூண்டப்படுவதில்லை. ஆனால், எப்பொழுது விலகும் என காத்திருந்து மெலிதாய் விலகும் மாராப்பை பார்த்தே மனதுக்குள் அந்தப் பெண்ணுடன் ஒரு சில்மிஷம் கொண்டு சொர்க்கம் காண்கின்றனர் ஆண்கள் பலர். ஆண்களுக்கு எதையும் ஒளிவு மறைவின்றி ஆடையின் அவசியமும், அதன் உளவியல் தேவையையும் உணர்த்தி, பிற்காலத்தில் பலகீனம் ஆகிடாத வகையில் ஆண்பிள்ளைகளை வளர்த்தெடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.

கே.ஏ.பத்மஜா, ஊடகவியலாளர்.