மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் Anil Galgali என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் பல கேள்விகளை கேட்டிருந்தார். அதில், 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட நவம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று ரிசர்வ் வங்கியிடம் இருப்பில் இருந்த புதிய இரண்டாயிரம் நோட்டுக்கள் குறித்து அவர் வினவி இருந்தார்.

அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி “பணமதிப்பு நீக்கம் செய்யப்பட நாளில், தங்களிடம் 4.94 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களே இருந்ததாக” குறிப்பிட்டுள்ளது.

இருப்பில் இருந்த இந்த புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் என்பது, பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட இருபது லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுக்களின், நாளில் ஒரு பங்கு மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.

அதாவது, மதிப்பு நீக்கம் செய்யப்படும்  பணத்திற்கு இணையான பணம் புழக்கத்தில் இல்லை என்று தெரிந்தபின்பும் மத்திய அரசு மேற்கொண்ட சூதாட்டத்திற்கு ரிசர்வ் வங்கி துணை போயிருக்கிறது என்று சமூக ஆர்வலர் Anil Galgali கடுமையாக குற்றம்சாட்டுகிறார்.

இதனிடையே, பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நவம்பர் எட்டாம் தேதி இரவிற்கு பின், நவம்பர் 9-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை, ரிசர்வ் வங்கியில் இருந்து பிற வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் பற்றி Anil Galgali எழுப்பிய கேள்விக்கு, பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.

கோடிகணக்கான இந்திய மக்களின் வாழ்க்கையை பணயம் வைத்து ஆடப்பட இருந்த (ஆடப்பட்டு கொண்டிருக்கிற) பணமதிப்பு நீக்கம் என்கிற சூதாட்டம் பற்றி ரிசர்வ் வங்கிக்கு தெரிந்திருந்தது என்றும் இது அபாயகரமான சூழல் என்றும் Anil Galgali குற்றம்சாட்டியுள்ளார்.
.