தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டிலும் அவர் தொடர்புடையவர்கள் வீட்டிலும் வருமானவரித்துறையினர் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தலைமை செயலாளரின் வீடு, வருமான வரித்துறை அலுவலகம் உள்ள ஆயகர் பவன், தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாநில காவல்துறை அதிகாரிகளை அப்புறப்படுத்திவிட்டு துணை ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களிலும் துணை ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் எழுந்துள்ளது.

அரசியல் செயல்பாட்டாளர் ஜோதிமணி:

“தவறான வழியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அறிந்தால் வருமானவரித்துறை ரெய்டு செய்வது இயல்புதான். நடக்கட்டும்

ஆனால் இதே ரெய்டுகள் ஏன் பிஜேபி ஆட்சிசெய்யும் மாநிலங்களில் குறிப்பாக வியாபம் ஊழல் புகழ் மத்திய பிரதேசத்தில் நடக்கவில்லை?

கடந்த ஆறு மாதங்களில் 700 இடங்களில் நிலம் வாங்கி குவித்துள்ள பிஜேபி அலுவலகத்தில் நடக்கவில்லை? மேலும் மத்திய அரசின் துணை இராணுவம் தமிழகத்திற்கு எதற்கு இன்று அழையாத விருந்தாளியாக வந்திருக்கிறது?

தமிழக அரசு என்பது 8கோடி தமிழக மக்களுக்குச் சொந்தம். எங்கள் உரிமைகளை குறுக்குவழியில் கைக்கொள்ள மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது ?”

“ஆளும் அதிமுக அரசே..தூக்கம் போதும்..

துக்கம் இருப்பதாக நடிக்கவும் வேண்டாம்.

என் மாநிலத்தில் மத்திய படை எப்படி நுழைந்தது என்பதை தெளிவாக்கு!

திராணியோடு செயல்பட்டு, மாநில அரசின் அனுமதி இல்லாமல் உள் நுழைந்துள்ள மத்திய அரசின் படையை வெளியேற்று!

அரசியலைப்பு சட்டப்படி ஆட்சி செய்யத்தான் உங்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. எங்களை அடிமையாக்கிட அல்ல!

#கண்டனம்