ராஜராஜன்

தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரி சோதனை டிசம்பர் 21ம் தேதி நடந்தது. இதனை அடுத்து சேகர் ரெட்டி என்பவர் அதே நாளில் கைது செய்யப்பட்டார். இப்போது, இந்த வருமான வரி சோதனைகளை பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது.

தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கரில் உள்ள பொருட்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் பின்னரே உண்மையான சொத்து மதிப்பு விவரங்கள் தெரியவரும்’ என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, வருமான வரி சோதனையில் ரூபாய் 75,000 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கிடைத்ததாக செய்திகள் கசிந்து இருக்கிறது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் நிறைய பதிவுகள் வர ஆரம்பித்து இருக்கிறது.

தலைமைச்செயலரின் சொத்துக்கணக்கே 75 ஆயிரம் கோடிகள் என்றால், அதிமுக மந்திரிகள், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களும் இந்த விவகாரத்தில் அடிபடுமா என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ராமமோகன் ராவ் தலைமை செயலராக நியமிக்கப்பட்ட 6 மாதங்களில் இவ்வளவு ஊழலா என்ற அதிரிச்சியான கேள்வியை பலர் எழுப்புகிறார்கள்.

ஜெயலலிதாவிற்கு நம்பிக்கைக்குரிய ஒரு மனிதராக ராமமோகன் ராவ் இருந்து இருக்கிறார். அதனடிப்படையில் தான் சீனியாரிட்டி படி இல்லாமல் பல பேரை தாண்டி அவருக்கு “தலைமை செயலாளர்” பதவி கிடைத்து இருக்கிறது. ஆனால், நாளடைவில், ராவ் தனது பதவியை வைத்து பல்வேறு விஷயங்களை சாதித்து இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு அவரை பற்றிய புகார்களும் சென்று இருக்கிறது. ஆனால், அவரை சசி குரூப் காப்பாற்றி இருக்கிறது. இப்போது, இந்த விவகாரத்தில் கைதாகி இருக்கிற சேகர் ரெட்டி, தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானவர். அவரிடம் விசாரித்ததில் பல்வேறு அதிமுக அமைச்சர்களும் மாட்டுவார்கள் என்று சொல்கிறார்கள்.

இந்த விஷயத்தில் தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் எப்படி இருக்க போகிறது என்ற கேள்வியும் இருக்கிறது.

2ஜி வழக்கில் தங்களது புலனாய்வை, நேர்மையை காட்டிய ஊடகங்கள் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது சந்தேகத்தை கிளப்புகிறது. தி ஹிந்து இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது “25 மணி நேரம் நடந்த வருமான வரி சோதனை: ராமமோகன ராவுக்கு கடும் நெருக்கடி – பல ஆயிரம் கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியதாக பரபரப்பு”. அந்த பல ஆயிரம் கோடிகளின் உண்மை மதிப்பு என்ன, யார் யார் எல்லாம் அதில் பங்குதாரர்கள் என்பது தான் இப்போதைய முக்கிய கேள்வி! ராவ், ரெட்டி என்ற இரண்டு தெலுங்கு பேர்களின் பின்னணியில் இருக்கும் தமிழக கூட்டம் எது என்பது சீக்கிரமே வெளிச்சத்திற்கு வர வேண்டும்!

ராஜராஜன், அரசியல்- சமூக விமர்சகர்.