Dear Ram Mohan Rao, Namaskaram 🙏

சரியாக 10.50 மணிக்கு “மதிய வணக்கம்” சொல்லி பத்திரிக்கையாளர் சந்திப்பை தொடங்கியபோதே உங்கள் பதற்றம் ஆரம்பமானது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தமிழக முதல்வர் என்று சொல்லி பிறகு திருத்திய போது பதற்றம் உறுதியானது. அடுத்தது, மக்கள் நலனில் “அக்கறை” கொண்ட பிரதமர் மோடி அவர்கள் நடத்துகிற ஒரு ரெய்டிற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யம் (அந்த அரசியல் வியூகம் வேறு). அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய மாநிலத்தில் சுங்கச் சாவடிகளில் இராணுவத்தை மாநில அரசின் அனுமதி இல்லாமல் குவிக்கப்பட்டது தொடர்பாக ஒரு மாத காலமாக மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் ஒரு மாநிலத்தின் கருவறையாக திகழக்கூடிய தலைமைச் செயலகத்தில் சி.ஆர்.பி.எப் உதவியுடன் நிகழ்த்திய சோதனைக்கு அவர் தெரிவித்த கண்டனத்தை தனக்கு சாதகமாய் நீங்கள் பயன்படுத்திய விதம் இருக்கிறதே… தட் போலி அரசியல்வாதிக்கான 10 பொருத்தங்களும் இருக்கு மொமண்ட்.

தமிழகத்தில் இருக்கின்ற இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், துறை செயலாளர்கள் என மிகமுக்கிய பொறுப்புகளை எல்லாம் நிர்வகிக்கின்ற தலைமை செயலாளர் எனும் கம்பீரமிக்க பொறுப்பை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வரை தன்வசம் வைத்து இருந்தீர்கள். அப்படி ஒரு மாநிலத்தின் தலைமை செயலாளர் ஒரு வருமான வரி சோதனைக்கு உள்ளாகுவதே மிகப்பெரிய அவலம். அதிலும் அந்த அவலம் நிறைந்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விதமும், நீங்கள் பேசிய விஷயமும் தான் தற்போதைய தமிழக அரசியலில் ஒரு டைட்டில் கார்ட்.

முன்னாள் இணை அமைச்சரும், அதிமுக எம்பியுமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனுக்கும்,  அதிமுக செய்தித் தொடர்பாளர் தீரனுக்கும் நன்றி சொல்கிற நீங்கள், அவர்கள் சார்ந்திருக்கின்ற அதிமுக வின் முதலமைச்சர் ஓ.பி.எஸ் அவர்களை டார்கெட் செய்து அவர் தலைமையிலான ஆட்சி என்னை காக்க தவறிவிட்டது, இதுவே “அம்மா” இருந்திருந்தால் நடந்திருக்குமா என நீங்கள் கேட்ட விதம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரங்களுக்கான நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ரேஞ்சிற்கு இருந்தது பெர்பாமன்ஸ்.

அதைவிட புதிய தலைமை செயலாளர் அறிவிக்கப்பட்டு அவர் தலைமையில் அரசுசார் கூட்டங்கள் நடந்தேறிய பிறகும் நீங்கள் தான் தலைமை செயலாளர் என சொல்லிக் கொள்வது ஜோக்கர் படத்தில் ஜனாதிபதி கேரக்டரோடு பொருந்திப் போகின்றது. படத்தில் எங்கள் ஜனாதிபதி நல்லவன். ஆனால் நீங்கள் யாரென்று நீங்கள் பெரிதும் நம்பி வந்த மக்கள் மன்றத்தில் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

நான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டேன் என தொடர்ந்து அழுத்தம் திருத்தமாக நீங்கள் பேசியதும் அதற்குப் பிறகு அம்மா ஜெயலலிதா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா எனக் கேட்டது முரணான ஒரு விஷயம்தான். ஏனெனில் அவரே இரண்டு மாதம் அப்பல்லோவில் “உறவினர்களால்” சிறை வைக்கப்பட்டு தானே இருந்தார் பிறகு இறந்தார். அவரின் மரணத்திற்கே இன்னும் நீதி கிடைத்தபாடில்லை.

தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடந்த தாக்குதல் என்று கூறியது தமிழக அரசியல்வாதிகளிடையே மிக உன்னிப்பாய் கவனிக்கப்பட்டு இருந்திருக்கும். உண்மைதான். மறுக்கவே இயலாது. உங்களைப் போன்றவர்கள் தலைமைச் செயலாளர் பொறுப்பில் வருகிற பட்சத்தில் வேறென்ன நாங்கள் எதிர்ப்பார்த்துவிட முடியும்..

எது எப்படியோ, வருகிற 29 ஆம் தேதி பொதுக்குழு கூட இருக்கின்றது. போய் சேருங்கள்..

நன்றி

– நாகா அதியன்