அ. குமரேசன்

அ. குமரேசன்
அ. குமரேசன்

போராடிப் போராடிக் கிடைத்தது கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம். அதை எப்படியாவது நீர்த்துப்போகச் செய்தென தவமிருக்கிறது மத்திய பாஜக அரசு. நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் இனி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி முறை செயல்படுத்தப்படும், 8ம் வகுப்பு வரையில் தேர்ச்சி என்பது விலக்கப்படும் என்ற மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவித்திருப்பதற்கு வேறு என்ன காரணம்? 5ம் வகுப்புக்கு மேல் ஆண்டுத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த வகுப்புகளுக்குக் குழந்தைகள் செல்ல முடியும். இல்லையேல் அதே வகுப்பில் நிறுத்திவைக்கப்படுவார்கள் – ‘ஃபெயில்’ ஆக்கப்படுவார்கள்.

கட்டாயத் தேர்ச்சி முறையை எதிர்க்கிறவர்கள், “இதனால் குழந்தைகளுக்குப் படிப்பு பற்றிய பயமே போய்விட்டது,” என்று கூறுவதுண்டு. இதைத்தான் அமைச்சகத்தின் முடிவு எதிரொலிக்கிறது. குழந்தைகள் மனதில் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும், தேடலையும் விதைப்பதற்கு மாறாக பயத்தை ஏற்படுத்துவது எப்படி ஆரோக்கியமான கல்வியாக இருக்க முடியும்? கல்வி குறித்த கண்ணோட்டப் பற்றாக்குறையைத்தான் இப்படிப்பட்ட எண்ணங்கள் வெளிப்படுத்துகின்றன,

கல்வி உரிமைச் சட்டத்தின் 16வது பிரிவின்படி 1ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரையில் எந்த வகுப்பிலும் குழந்தைகளை நிறுத்திவைக்கக் கூடாது. இதன் பொருள் அவர்களுக்குத் தேர்வு நடத்தக்கூடாது, அவர்களுடைய கற்றல் திறனை வளர்க்கக்கூடாது என்பதல்ல. பல குழந்தைகளின் கற்றல் திறன் மாறுபடுவதன் பின்னணியில் வகுப்பறை, குடும்பம், சமூகம், பொருளாதாரம் போன்ற பல சூழல்கள் இருக்கின்றன. அன்றாடப் பிழைப்பிற்கே அல்லாடுகிறவர்கள், தங்களுக்கே சரியான கல்வி கிடைக்காதவர்கள் தங்களது வீடுகளில் குழந்தைகளுக்குக் கற்றுத் தர இயலும், படிப்பில் உதவ முடியும் என்பதையெல்லாம் எதிர்பார்ப்பதற்கில்லை. போதுமான ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள், தேவையான கட்டமைப்புகள் இல்லாத பள்ளிகள் நிறைய உள்ளன. இந்நிலையில், கற்றல் திறன் குறைந்ததற்குக் குழந்தைகளைப் பொறுப்பாக்குவதும், அதற்குத் தண்டனையாக ‘ஃபெயில்’ ஆக்குவதும் பொறுப்பற்ற செயல், கொடூரமான தாக்குதல்.

அடுத்த வகுப்பிற்கு வருகிற குழந்தையிடம் போதுமான கற்றல் திறன் இல்லை என்றால், அந்தக் குழந்தைக்கென கூடுதல் நேரம் ஒதுக்கி, சிறப்பு கவனம் மேற்கொண்டு விடுபட்ட அந்தத் திறனை வளர்க்க வேண்டும். அதுதான் பள்ளிகளின் கடமை. அப்படித்தான் சட்டம் சொல்கிறது. மத்திய அமைச்சகம் இதனை உறுதிப்படுத்துவதற்கு பதிலாகத் தடையற்ற தேர்ச்சியையை கைவிடுவது, அப்படிப்பட்ட குழந்தைகளது வளர்ச்சிக்கு மோடி அரசு போடுகிற தடைக்கல்தான்.

‘கற்றல் திறன் குறைவு’ என்ற சொல்லாடல் புழக்கத்திற்கு வருவதற்கே நீண்ட போராட்டம் தேவைப்பட்டது. அது வரையில் ‘மக்கு’ என்றுதான் முத்திரை குத்தப்பட்டது. அரசு இப்போது அந்த முத்திரையை மீண்டும் தேடி எடுத்திருக்கிறது போலும்.

‘ஃபெயில்’ ஆக்கப்படும் குழந்தைகள் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகிறார்கள். பல குடும்பங்களில் அந்தக் குழந்தைகளைக் குற்றவாளிகள் போல நடத்துகிற போக்கைக் காண முடியும். இது அவர்களது ஆக்கப்பூர்வமான எதிர்கால வளர்ச்சிக்கும் சமூகப் பங்களிப்புக்கும் முட்டுககட்டையாகிவிடும். அமைச்சக முடிவால் இக்குழந்தைகள் பலர், குறிப்பாகப் பெண் குழந்தைகள், படிப்பைத் தொடராமல் ஒதுங்குவார்கள், இடைநிற்றல் பிரச்சனை தீவிரமாகும். சமூக ஏற்றத்தாழ்வுகள் மேலும் கெட்டிப்படும். கட்டாயத் தேர்ச்சியால் கல்வித் தரம் குறைந்துவிட்டது என்று அமைச்சகத்திடம் ‘பற்ற வைத்தவர்கள்’ இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை, அமைச்சகமும் ஆராயவில்லை.

கடந்த ஆண்டு மத்திய கல்வி ஆலோசனைக் குழுமத்தின் (சிஏபிஇ) 64வது கூட்டத்தில் இது முன்வைக்கப்பட்டது. அதில் தமிழக அரசின் சார்பில், 5ம் வகுப்போடு கட்டாயத் தேர்ச்சி நிறுத்திக்கொள்ளப்படும் என்ற முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது (கல்வி உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பே தமிழகத்தில் 8ம் வகுப்பு வரையில் கட்டாயத் தேர்ச்சி கொண்டுவரப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது). சிஏபிஇ கூட்டத்தில் 13 மாநில அரசுகள் மட்டுமே இந்த ஆலோசனைக்கு ஆதரவு தெரிவித்தன. ஆகவே, அன்றைய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், இது பற்றி அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்க விட்டுவிடலாம் என்று அறிவித்தார்.

இப்போது திடீரென அதே அமைச்சகம் இந்த முடிவை அறிவிக்கிறது. அப்படியானால், அனைத்து மாநிலங்களின் பள்ளிக் கல்வி அமைச்சர்கள் பங்கேற்ற சிஏபிஇ கூட்டத்தில் அன்றைய மத்திய அமைச்சர் அறிவித்த முடிவு என்னாயிற்று? மறுபடி எங்கே, எப்போது ஆலோசிக்கப்பட்டது? எப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது?

இந்த முடிவுக்கு எதிர்ப்புக் கிளம்பியதும், இது மத்திய பள்ளிக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளுக்கு மட்டும்தான் என்று விளக்கம் தரப்படுகிறது. அப்படியானால், தமிழ்நாடு உள்பட இதை ஏற்காத மாநிலங்களில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளின் நிலை என்ன? இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தாதா?

இதில் மற்றொரு முக்கியமான பிரச்சனையும் இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை என இன்னும் வரையறுக்கப்படவில்லை. அதற்குள் மத்திய அமைச்சகம் பொறுமை இழந்தது ஏன்?

மேலும், நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச்சட்டத்தில் மாற்றம் செய்கிற உரிமை நாடாளுமன்றத்திற்குத்தான் உண்டு. அமைச்சகம் நினைத்தவுடன் மாற்றிவிட முடியாது. ஆனால், இப்படியொரு மாறுதலுக்கான சட்டத்திருத்த முன்வரைவு எதுவும் தயாரிக்கப்பட்டதாகவோ, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவோ எந்தத் தகவலும் இல்லை. ஆக, நாடாளுமன்றமும் கேலி செய்யப்படுகிறது.

குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் போராடுவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் அமைச்சக முடிவு பற்றி வெளிப்படுத்துகிற இச்சிந்தனைகள் அடிப்படை உரிமை அரிக்கப்படுவது பற்றிய கவலையை ஏற்படுத்துகின்றன, ஆவேசத்தை ஊட்டுகின்றன.

நன்றி: ‘தீக்கதிர்’