அதிமுக  பொதுக்குழு, சென்னை, வானரகத்தில் நாளை நடக்க உள்ளது. இதில், சசிகலாவை பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சொல்லி தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர் என்ற தகவல் வெளியாகி வருகிறது. .

இதனிடையே சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்யக்கூடாது எனக்கோரி, எம்.பி., சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சூழ்நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கு, சசிகலா புஷ்பாவும் போட்டியிட உள்ளார் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்காக, விண்ணப்பம் தாக்கல் செய்ய, அவர் இன்று அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளார் என்று பேசப்பட்டதை அடுத்து, அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கட்சி தொண்டர்களும் ஏராளமான அளவில் குவிந்து இருந்தனர்.

ஆனால், எதிர்பார்த்தபடி சசிகலா புஷ்பா வரவில்லை. ஆனால், அவர் சார்பில், அவரது வழக்கறிஞர்கள் சிலர் வந்து இருந்தனர். இதனால், கட்சி அலுவலகத்தில் இருந்த கூட்டத்தினர் தாக்கியதில், சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர்கள் படு காயமடைந்தனர். ரத்தம் சொட்ட சொட்ட இருந்த, வழக்கறிஞரை போலீசார் அங்கு இருந்து அகற்றினர்.