அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்

செல்லாக் காசு அறிவிப்பு,தமிழகத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அதிமுக கட்சியின் உள்முரண்பாடு, அதிமுகவிற்கும் Vs பாஜகவிற்குமான வெளி முரண்பாடு,தற்போது மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகல் என நடைபெறுகிற அனைத்து அரசியல் திசை மாற்றப் போக்குகள் மீதான விமர்சனங்களை, ஆய்வுகளை நிலவுகிற சட்டவாத முதலாளித்துவ
ஜனநாயக சட்டகத்திற்குள்ளாக வைத்து விமர்சிக்க இயலுமா? நிலவுகிற அமைப்பை செப்பனிட்டால் இப்பிரச்சனைகளை தீர்க்க இயலுமா? நிலவுகிற அமைப்பிற்குள்ளாக மாற்று சாத்தியமா?

முதலாளித்துவத்திற்கான ஜனநாயகம், அதை பிரதிபலிக்கிற முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ தேசிய, பிராந்தியக் கட்சிகள், இவர்களுக்கு இடையிலான கொள்ளையடிப்பதற்கான அரசியல் அதிகாரப் போட்டிகள்,
தேர்தல் கூட்டணிகள், முறிவுகள் என இவை அனைத்தும் யாரின் நலனுக்கு இறுதியாக சேவை செய்யப் போகிறது என்ற அர்த்தத்தில் இருந்து மேற்கூறிய கேள்விகளுக்கான விடை காண வேண்டும்.

தேர்தலில் ஓட்டுப்போடுவதோடு, நிலவுகிற அமைப்பினில் இருந்து அந்நியப்படுத்தப்படுகிற மக்கள் திரளினர்,அதிகாரத்திற்கு வந்த பிறகு கூட்டுக் கொள்ளையில் ஈடுபடுகிற, உழைக்கும் மக்களின் உழைப்பையும், இயற்கை வளத்தையும் கொள்ளையடிக்கிற கும்பலை, அரசியல் அதிகார சக்திகளை, அதிகாரத்தில் இருந்து நீக்குவதற்கு இந்த முதலாளித்துவ சட்டவாத அமைப்பு
ஆதரவு தருகிறதா?

சுரண்டல்வாத முதலாளித்துவ ஜனநாயக பொறியமைவை தகர்த்து, மக்களால் கட்டப்பட்ட பாரீஸ் கம்யூனில், சோவியத்தில் இந்த முறை இருந்தனவே, மக்கள் மன்றங்களின் பிரதிநிதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு,தேவைப் பட்டால் மக்களால் திருப்பியழைக்கப்படுகிற, அதிகாரிகள் தொழிலாளிகளின் ஊதியத்தைப் பெறுகிற பொறியமைவு மக்களின் கம்யூனால் நடைமுறைப்பட்டதே? இதுதானே மாற்று..பெரும்பான்மையோருக்கான ஜனநாயகம்,மாற்று அரசியல் பொறியமைவு…

மாறாக, இந்த சுரண்டல்வாத முதலாளித்துவ ஜனநாயக பொறியமைற்கு மாற்று என்பதே, இந்த அமைப்பினில் சட்டவாத நாடுளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதில்லை, சுமூகமாக அரசியல் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்வதில்லை, தேர்தல் கூட்டணி மாற்று இல்லை, மாற்று அரசியல் என்பது பெருந்திரளனிருக்கான ஜனநாயகம், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் என்பதே.

நமது அரசியல் விமர்சகர்கள் இந்த மெய்யான மாற்று குறித்து பேசுவார்களா?அல்லது தமிழ் இந்து பத்திரிக்கையின் நடுப்பக்க கட்டுரையில் இந்த மெய்யான மாற்று குறித்துத்தான் எழுத இயலுமா?

மக்கள் நலக் கூட்டணி உடைதல், ராம் மோகன் ராவ் பேட்டி, செல்லாக் காசு அறிவிப்பால் ஏற்பட்ட மக்கள் திரளினருக்கு ஏற்பட்ட இன்னல் என அனைத்து அரசியல் நிகழ்வுகளும் அதனால் ஏற்படுகிற வெகு மக்கள் அதிருப்தியும் மாற்று அரசியல் கட்சிகள் அறுவடை செய்வதா? அல்லது பெருந்திரளனிருக்கான ஜனநாயகம், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் என்ற அடிப்படையிலான மாற்று அரசியலை முன்வைக்கப் போராடுவதா?

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.