செய்திகள்

முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!

முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,

“தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்ற குற்றச்சாற்றுகளுக்கு முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருதுகிறது என்பதற்கான அடையாளமாகவே நீதிபதிகளின் இந்த உத்தரவை பார்க்க வேண்டியிருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி வைத்தியநாதன் எழுப்பியுள்ள வினாக்கள் முக்கியமானவை. ‘‘முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார்; உணவு சாப்பிடுகிறார்; நடைபயிற்சி மேற்கொள்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தது எப்படி? அவரை பார்க்க அவரது உறவினர்களை ஏன் அனுமதிக்க வில்லை. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகாவது அதில் உள்ள மர்மங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்’’ என்று நீதிபதி வைத்தியநாதன் கூறியிருக்கிறார். தமிழக மக்களின் மனதில் என்னென்ன வினாக்கள் எழுந்துள்ளனவோ, அந்த வினாக்களையெல்லாம் உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி இரவில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் திசம்பர் 5-ஆம் தேதி நள்ளிரவில் அவர் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டது வரை ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வெளிப்படையானதாக இல்லை. அதனால் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கடந்த 15 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதன்பிறகும் தமிழக அரசோ, மத்திய அரசோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மாறாக, அதற்குப் பிறகு தான் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரு கால்களும் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், பற்கள் பிடுங்கி எடுக்கப்பட்டதாவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிருக்கின்றன.

சாதாரண குடிமகனுக்குக் கூட உயிருக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்றால் ரத்த உறவுகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு இரு கால்களும், பற்களும் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றால் அதற்கான அனுமதியை மருத்துவமனை நிர்வாகம் யாரிடம் பெற்றது. ஜெயலலிதாவின் ரத்த உறவுகளிடம் பெற்றதா? அல்லது தமிழக அரசிடம் பெற்றதா? என்பது குறித்து இன்று வரை விளக்கம் அளிக்கப்படவில்லை. கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் பிரதாப் ரெட்டி நவம்பர் மாதம் அறிவித்தார். அடுத்த சில நாட்களில் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் விரும்பும் போது வீடு திரும்பலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

அப்படியானால், ஜெயலலிதா குணடைந்திருந்த காலத்தில் மருத்துவர்களுடனோ, மற்றவர்களுடனோ உரையாடும் காட்சிகளையோ, மருத்துவமனையில் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் காட்சிகளையோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கலாம். ஆனால், அப்பல்லோ நிர்வாகம் அதை செய்யாதது ஏன்? அதுமட்டுமின்றி, சில வாரங்கள் மருத்துவமனையில் இருந்தாலே நோயாளியின் உடல் மெலிந்து எடை பெருமளவில் குறைந்து விடும். ஆனால், ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போதிலும் அவரது உடல் மெலியவோ, எடை குறையவோ இல்லை என்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அவர் இறக்கும் வரை அவரதும் உடல் நிலை குறித்து அரசுத் தரப்பிலிருந்து ஒரே ஒரு அறிக்கைக் கூட வெளியிடப்படவில்லை. மாறாக, அப்பல்லோ நிர்வாகம் தான், சிலரது விருப்பப்படி அவர்கள் சொல்ல விரும்பிய கருத்துக்களை மருத்துவ அறிக்கையாக வெளியிட்டு வந்தது. வழக்கமாக இத்தகைய சூழலில் சுகாதாரத்துறை செயலர் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு, முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அக்குழு கண்காணித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையை சுகாதாரத்துறை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டும். கடந்த காலங்களில் அத்தகைய நடைமுறை தான் கடைபிடிக்கப் பட்டு வந்தது. ஆனால், ஜெயலலிதா விஷயத்தில் இந்த நடைமுறை ஒருபோதும் கடைபிடிக்கப்படவில்லை.

ஜெயலலிதா தனி மனிதராக இருந்தாலோ, அதிமுகவின் பொதுச்செயலாளராக மட்டும் இருந்திருந்தாலோ அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்து மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நான் கேள்வி கேட்க வேண்டிய தேவையில்லை. ஆனால், ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மர்மமான சூழலில் மரணமடைந்திருக்கிறார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறியும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு. இந்த உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுமென்று தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் துடிக்கின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி அக்கட்சியினர் வழக்கு தொடர்ந்திருப்பதே இதற்கு சாட்சியாகும்.

தமிழக முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடை காணப்பட வேண்டும். இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள வினாக்களுக்கு விடையளிப்பதுடன், மக்களுக்கும் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவை ஒருபுறமிருக்க, ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.