மோடியின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டம் தேவையாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து தனது முகநூல் பதிவில் மாநில செயலாளர் இரா. முத்தரசன் எழுதியுள்ள பதிவில்,

“நாட்டின் நிதிப்புழக்கச் சுற்றில் 86 சதவிதம் பங்களிப்பு செலுத்திய ரூ 1000, ரூ 500 மதிப்பு நாணயத்தாள்கள் 31.12.2016 க்கு பிறகு செல்லாது என பிரதமர் மோடி 08.11.2016 இரவில் திடீரென அறிவித்தார். புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் தாள்களை டிசம்பர் 31 க்குள் வங்கிகளில் செலுத்தி விட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500,1000 ரூபாய் தாள்களுக்கு பதிலாக மக்களின் தேவைக்கு ஏற்ப புதிய ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் வழங்கப்படாததால் வங்கிகள் மற்றும் ஏடிஎம் எந்திரங்கள் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக்கிடக்கிறார்கள். ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் தாள்கள் முழுமையாக வங்கிக் கணக்குக்குகளில் திரும்பி உள்ளது. இப்போது கறுப்புப் பணம் எங்கே என்ற கேள்வி எல்லா முனைகளிலும் எதிரொலித்து, விசுபரூபம் எடுத்துள்ளது.

தற்போதைய நிலையில் 2017 ஏப்ரல் முதல் பழைய ருபாய் தாள்கள் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த மத்திய அரசு, மார்ச் 31 க்கு பிறகு பழைய, செல்லாத 500,1000 ருபாய் தாள்கள் வைத்திருந்தால் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தை அறிவித்திருப்பது அறிவுபூர்வமான செயலாகாது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடங்கிய மோடி அரசு தற்போது பணமில்லா பரிவர்த்தனைக்கு தயாராகுமாறு அடுத்த நிலைக்கு மாறியிருப்பது பெரும்பாலான கிராமங்களுக்கு, மலைப்பகுதி குடியிருப்புகளுக்கும் மின் இணைப்பு இல்லாதநிலையில் 98 சதவீத மக்கள் பணப் பரிவர்த்தனை முறையில் வாழ்க்கை நடத்துவதையும் கருத்தில் கொள்ளாமல் பணமில்லா பரிவர்த்தனை என அறிவிப்பது பெருந்தொழில் குழும நிறுவனங்களுக்கும், பதுக்கல்காரர்களுக்கும், இயற்கைவளக் கொள்கையர்களுக்கும் ஆதரவான உள்நோக்கம் கொண்டதாகும். மோடி அரசின் மக்கள் விரோத செயல்களை தடுத்து நிறுத்த அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.