தமிழக மீனவர்களின் படகுகளை சொந்தமாக்கிக் கொள்ளும் முடிவை மாற்றிக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை சொந்தமாக்கிக் கொள்வோம்” என்று ஈவு இரக்கமற்ற முறையில் இலங்கை அரசு முடிவு எடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண 27.1.2014-ல் தொடங்கி இதுவரை நான்கு முறை இந்திய மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இறுதியாக 2.11.2016 அன்று இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா ஆகியோர் தலைமையில் 5.11.2016 அன்று “அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டமும்” நடைபெற்று இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை நடைபெற்ற நான்கு கட்ட பேச்சுவார்த்தைகளிலும் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை. குறிப்பாக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணை பகுதியில், செயற்கையாக வரையறுக்கப்பட்ட எல்லையில் பாரபட்சமின்றி இருதரப்பும் பரஸ்பர நல்லிணக்கத்துடன் கூடிய மீன்பிடி உரிமை வேண்டும் என தமிழக மீனவர்களின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அக்கோரிக்கையை பிடிவாதமாக இலங்கை அரசு ஏற்க மறுக்கிறது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் கொடுந்தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு கண்டு கொள்ளவே இல்லை.

இன்னும் சொல்லப்போனால் பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பது, மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வது போன்ற மனித உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை கைவிட வே்ண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரினாலும், அதுவும் நிராகரிக்கப்பட்டு, தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் சரமாரியாக கைது செய்யும் அநியாயமான நடவடிக்கையை அரக்கத்தனமாக இலங்கை அரசு செய்து வருகிறது. “பாக் நீரிணை பகுதியில் தமிழக மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிக்க மாட்டோம்” என்ற வாதத்தில் அழுத்தம் திருத்தமாக இலங்கை அரசு இருந்தும், இதுவரை மத்திய அரசு தட்டிக் கேட்டு தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட முன்வரவும் இல்லை. இதுகுறித்து போதிய அழுத்தத்தை தமிழக அரசும் மத்திய அரசுக்கு கொடுக்க முன் வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இப்பிரச்சினை குறித்து கூடிப் பேசுவது என்று முடிவு செய்யப்பட்டு, அந்த கூட்டுக் குழுவிற்கான ஒரு “நிபந்தனைக் குறிப்பும்” தயாரிக்கப்பட்டது. அந்த நிபந்தனைக் குறிப்பில் இடம்பெற்றுள்ள மூன்று நிபந்தனைகளில் “இலங்கை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை” விடுவிப்பது குறித்து பேசி முடிவு எடுப்பது என்பது ஒரு நிபந்தனையாகும். ஆனால் இப்போது இலங்கை “தமிழர்களின் படகுகளை சொந்தமாக்கிக் கொள்வோம்” என்று திடீரென்று அறிவித்திருப்பது இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு முற்றிலும் விரோதமானது மட்டுமின்றி, இரு நாட்டு உறவுகளுக்கு உரிய முக்கியத்துவத்தை இலங்கை அரசு கொடுக்க மறுக்கிறது என்பதும் தெளிவாகிறது. ஆகவே வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாறாக செயல்படுவதை இலங்கை அரசு முதலில் கைவிட வேண்டும்.

இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையை டெல்லியில் முன்னின்று நடத்திய இந்திய அரசும் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, தமிழக மீனவர்களின் படகுகளை சொந்தமாக்கிக் கொள்ளும் முடிவை மாற்றிக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்தி, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஆணை பிறப்பிக்கவும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு உரிய அழுத்தத்தை தூதரக ரீதியாகவோ, இந்திய பிரதமரே நேரில் தலையிட்டோ முடிவு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரை 119 படகுகளை இலங்கை அரசு பிடித்து வைத்துள்ளதாகவும், 51 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு கடந்த 21.12.2016 அன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்கும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.