அரசியல் செயல்பாட்டாளர் ஜோதிமணி மீது பாஜக ட்ரோல்கள் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜோதிமணிக்கு ஆதரவாகவும் சமூக ஊடகங்களில் எழுதப்பட்ட பதிவுகளின் தொகுப்பு இங்கே…

சிவசங்கர் எஸ்.எஸ்

சகோதரி ஜோதிமணி (Jothimani Sennimalai) ஒரு எளிய அரசியல்வாதி. பொது நலத் தொண்டர். தன் கருத்துகளை முகநூலில் தொடர்ந்து எழுதுபவர். மோடியின் ‘செல்லாக்காசு’ திட்டத்தை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து எழுதி வருபவர். இதை எதிர்க்கிறோம் என்று ஒரு கும்பல் வெறித் தாக்குதல் நடத்துகிறது.

அவர் தன் கட்சி சார்ந்த சில செயல்பாடுகளில் இணக்கம் இல்லையென்றாலே, மாற்றுக் கருத்து வெளியிடுபவர்.

ஜோதிமணி கருத்துக்கு எதிர்வினையாக தங்கள் கருத்தை பதிவு செய்யும் பா.ஜ.கவினர் இருக்கிறார்கள். அவர்களை மதிக்கிறோம்.

ஆனால் சகோதரி ஜோதிமணி அலைபேசிக்கு நாகரீகமற்ற முறையில் பேசுவது மனிதத் தன்மையற்றது. வெளிநாட்டிலிருந்தும் இணையத்தின் மூலமும் தொடர்ந்து அழைத்து அவருக்கு மனரீதியான சித்திரவதை கொடுக்கிறது ஒரு கூட்டம்.

மோடி இன்றைக்கு பிரதமர், நாளை என்னவோ?

நாம் மனிதர்கள் என்பதை மறந்து மிருகத்தனமான இந்த செயல் செய்யும், பா.ஜ.கவில் இருக்கும் அந்த பாசிச கூட்டத்தை கண்டிக்கிறேன்.

இங்கு கட்சி ரீதியாக வாதம் செய்து கொண்டு இருக்க வேண்டாம். ஜோதிமணியை என் சகோதரியாக எண்ணி இதை சொல்கிறேன்.

# நாகரீகமற்ற மிருகங்களை கண்டிப்போம் !

ஜோதிமணி மீதான ஆபாச தாக்குதல் பற்றி அம்பலப்படுத்திய செய்த அவரின் பதிவுகளை பேஸ்புக் நீக்கியுள்ளது.

ஆபாசம் எழுதியோர், மொபைல் எண்களை பகிர்ந்து, தாக்குதலுக்கு தூண்டியோர் பத்திரமாக இருக்கிறார்கள். இன்னமும் அவருக்கு அழைப்புகள் வந்துகொண்டுள்ளன.

அரசியல் வேறுபாடுகளை கடந்து சிந்திக்க வேண்டிய நேரமிது. ஆபாசக் குப்பைகளைக் கொண்டு வாயடைக்கும் முயற்சிகளுக்கு எதிராக தொடர்ந்து எழுதுவோம்.

சங்கி முகாம்களிலும் இதற்கு எதிரான ஒரே ஒரு குரலாவது இருக்கிறதானால், அவர்களையும் கண்டனம் பதிய வையுங்கள். #தனிமைப்படுத்துவோம்

#standwithjothimani

 

 

எழுத்தாளர், களச் செயற்பாட்டாளர், இளம் அரசியல் தலைவர் என பன்முக ஆளுமையாக விளங்கும் அன்புச் சகோதரி ஜோதிமணி மீது, சங்பரிவார வன்முறைக் கும்பல், ஆபாசத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தம்மோடு முரண்படும் பெண்கள் மீது அமிலம் வீசும் மிருகங்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடில்லை.

ஏற்கெனவே, இதுபோன்ற ஆபாசத் தாக்குதலுக்கு பத்திரிக்கையாளர்கள் கவின்மலர், கவிதா முரளிதரன் போன்ற பலரும் இலக்காகியுள்ளனர். அதை காவல்துறையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றும் பயனில்லை. இப்போது ஜோதிமணி தாக்கப்பட்டுள்ளார். இத்தகைய வன்முறைகளை அனைவரும் கண்டிப்பதோடு, பாசிச கும்பலுக்கு எதிராக ஒருங்கிணைவோம்.

தமிழ் நாஜிக்களை எதிர்த்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தபோது என்னை மிகவும் ஆபாசமாக திட்டி நிறைய பதிவுகளை எழுதுவார்கள் தமிழ்நாஜிக்கள். அதில் ஒரு ஆச்சரியமானவிஷயம் என்னவென்றால் எல்லாமே என் குடும்பப் பெண்களை நோக்கியதாக இருக்கும். உச்சகட்டமாக எனது குடும்பப் படத்தை பகிர்ந்து ஆபாசமாக பின்னூட்டமிடும் வேலையையும் ஒருநாள் செய்தார்கள். நேற்று ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் இளைஞர் ஒருவர் அவரது மனைவியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தமிழ்நாஜிக்கள் ஆபாசமாக பின்னூட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். இதோ நேற்று காங்கிரஸ் ஜோதிமணியின் மீது சொல்லொன்னா ஆபாச அர்ச்சனைகளை தொடுத்திருக்கிறார்கள் பாஜக கட்சியினர்.

ஆக, ஒரு ஆணை தாக்க வேண்டுமென்றால் அவனது குடும்பப் பெண்களின் மீதும், ஒரு பெண்ணைத் தாக்க வேண்டுமென்றால் நேரடியாக அவளது உடலின் மீதும் தான் குரூரமும், வக்கிரமும் வீசப்படுகிறது. இந்துத்துவாவும், தமிழ்நாஜியிசமும் சேரும் இடமும் இதுதான். அவன், பெண் என்றால் வீட்டில் இருந்து சமைக்கவேண்டும் என்பான். இவன், பெண் என்றால் பொட்டு வைத்து, பூ வைத்து தமிழ் கலாச்சாரத்தோடு இருக்க வேண்டும் என்பான். அவன் பெண்கள் வேலைக்கு போதல் பாவம் என்பான். இவன் வேலைக்குப் போகாத பெண்களே குடும்பப் பெண் என்பான். இப்படி மதத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்குமான ஒற்றுமைகள் நிறைய இருக்கிறது. அந்த ஒற்றுமையின் ஒரு முக்கிய அம்சம்தான் ஆணின் மானத்தை அவன் சார்ந்த பெண்களின் உடலிலும், பெண்ணின் மானத்தை அவளது உடலிலும் வைப்பது.

ஒரு ஆங்கில நாளிதழ் பாஜகவின் சமூகவலைதள செயற்பாட்டு முறைகளில் ‘ஒருவரை கருத்தினால் வெல்ல முடியாவிட்டால் அவரை மன ரீதியாக தாக்குங்கள். பெண்கள் என்றால் கும்பலாக சேர்ந்துகொண்டு வார்த்தைகளால் பாலியல் தாக்குதலை தொடுங்கள்.,” என உத்தரவிடபட்டுள்ளதாக எழுதிருக்கிறது. ஏனெனில் பெண்களை வக்கிரமாக திட்டினால் பயந்து ஓடிவிடுவார்கள் என்ற கணக்கு. அப்படித்தான் இன்று ஜோதிமணியை தாக்கியிருக்கிறார்கள். பாஜவினர் இதைச் செய்வது முதல் முறை அல்ல. கனிமொழி, குஷ்பூ, விஜயதாரணி உள்ளிட்ட பெண் அரசியல்வாதிகள் தமிழ்நாஜிக்களாலும், பாஜகவினராலும் இதுபோன்ற தாக்குதல்களைச் சந்தித்திருந்தாலும் ஜோதிமணி விஷயத்தில் பன்மடங்கு எல்லைமீறிச் சென்றிருக்கிறார்கள் பாஜகவினர். இப்படியான ஆட்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள் என நினைக்கும் போதே கூசச் செய்கிறது.

ஆனால் ஒன்றே ஒன்று தெளிவு. ஜோதிமணியால் இந்த மிருகங்கள் மிகவும் கோபமடைந்திருக்கின்றன. அதனால்தான் ராபீஸ் நாய்களைப் போல வெறிகொண்டு பற்களைக் காட்டிக்கொண்டு நிற்கின்றன. ஜோதிமணி மட்டுமல்ல, பொதுக்கருத்துக்கள் சொல்லும் எந்தப் பெண் ஆனாலும் சரி, இதுபோன்ற தாக்குதல்கள் தொடுக்கப்படும்போது அசராமல் திரும்பி நின்று கல்லை எடுத்தால் போதும் நாய்கள் இருக்கும் இடம் தெரியாமல் சிதறி ஓடிவிடும். தன் மீதான தாக்குதலை #ஜோதிமணி எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.

தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே தற்போதைய அதிமுக்கிய தேவை மதவாதம், கலாச்சாரவாதம் பேசும் பிற்போக்குவாத பைத்தியங்களை துணிந்து, எதிர்த்து கேள்விக்குள்ளாக்கி, அடித்து ஓடவிடும் பெண்கள் தான். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண்ணாவது இதைச் செய்யத் துவங்கும்போதுதான் பெண் வெறும் உடலாகப் பார்க்கப்படும் இந்தியக் கலாச்சாரம் மரணிக்கும். ஆண்கள் உறுதுணையாக இருக்கலாமே தவிர பெண்கள்தான் இதை நேரடியாக கையில் எடுக்க வேண்டும். ஏன் பெண்கள் தான் செய்யவேண்டும் எனச் சொல்கிறேன் என்றால் பெரியார் சொன்னதைப் போல, எலிகளின் விடுதலையை எந்நாளும் பூனைகள் பெற்றுத்தராது. அது எலிகள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே முடியும்.

-டான் அசோக்

 https://www.facebook.com/donashok/posts/1200255156749114