தயாளன்

2016 மட்டுமல்ல சுதந்திர இந்தியாவிலேயே மிகவும் கடுமையாக மக்களைப் பாதித்ததும், மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகளிலேயே மிகவும் தீவிரமானதும் என்று எனக்கு தோன்றுவது, நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையே. வர்தா போன்ற இயற்கைப் பேரிடர்கள் எல்லாம் சாதாரணமானதாகத் தோன்றுகிறது.

மிசா காலம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நிச்சயமாக சாதரண பொதுமக்கள் மீது நிச்சயமாக இந்த அளவு தாக்குதல் இருந்திருக்காது என்றே நம்புகிறேன். யாதும் ஊரே படப்பிடிப்புக்காக கள்ளக்குறிச்சி அருகே கச்சிராபாளையம் சென்றிருந்தோம். காலை ஆறு மணிக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அதிகாலை 1 மணியிலிருந்து வரிசையாக நிற்க ஆரம்பித்து விடுவார்களாம். பெண்கள், கைக் குழந்தைகளோடு மார்கழி பனியில் நிற்கிறார்கள். உடல் உபாதைகளைத் தணிப்பதற்கு வழியில்லை. ஆசுவாசப்படுத்திக் கொள்ளவோ டீ அருந்தவோ அங்கே வாய்ப்பில்லை. வரிசையில் துவக்கத்தில் நிற்கும் பெண்கள், சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக துண்டு, செங்கல், சக்கைகள் இப்படி நிறைய பொருட்களை அடையாளத்திற்காக வைத்து விடுகிறார்கள். பெண்கள் ஆவேசமாக பேட்டி அளிக்கிறார்கள். அரசாங்கம் சொன்ன விளக்கங்களை அவர்களிடம் கேட்டேன். என்னை கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார் ஒரு பெண் “கேள்வியா இது? முட்டாத்தனமா இல்லை… இதக் கேட்கிறதுக்கு மைக்கோட வந்துட்டே…. அறிவில்லை? என்றார். இவ்வளவுக்கும் “நாட்டுக்காக தியாகம் பண்ணக்கூடாதா? அப்படின்னுதான் கேட்டேன். ஒரு பெண் கைக்குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே வரிசையில் நிற்கிறார். மறைவுக்குக் கூட வழியில்லை. குடும்பத்தில் பிரச்சினை வருகிறது என்கிறார் ஒரு பெண்மனி. “பேங்குக்கு போறியா வேற எவன் கூடயேயும் போயிட்டு வர்றியான்னு புருஷன் கேட்கிறான் என்கிறார் அவர்.

இன்னொருவர், 300 ரூபாக்கு பொருள் வாங்கனும்னா 1000 ரூபாய்க்கு வாங்கினாத்தான் சில்லறை கிடைக்குது. வேற வழியே இல்லை என்று புலம்புகிறார். இது ஒரு நாள் காட்சியல்ல. நவம்பர் 8ம்தேதியிலிருந்து இதுதான் நிலைமை. விவசாயக் கூலிகள் நிலைமை கொடூரக் கனவு. மீண்டும் சொல்கிறேன். அவர்கள் யாரும் ஏடிஎம் வாசலில் நிற்கவில்லை. வங்கியின் முன்பு காத்துக் கிடக்கிறார்கள். வங்கி 10 மணிக்குத்தான் திறக்கப்படும். ஆனால் காலையில் 1 மணிக்கு வந்து மதியம் 2.00 மணி வரை நின்றால் எப்படி வேலைக்குப் போக முடியும்.

மல, ஜலம் எப்படிக் கழிப்பது, சரி… அப்படியே நின்றாலும் பணம் நிச்சயமாக கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. முதியோர் பென்ஷன் பணத்தை வாங்குவதற்கு வயதானவர்கள் படும்பாடு இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் சோகம். இவர்களாவது எப்படியோ காலையிலேயே வரிசைக்கு நிற்கிறார்கள். ஆனால், நகராட்சியில் குப்பை பொறுக்கும் கூலித் தொழிலாளிகளின் நிலைமை படு மோசம். அவர்கள் காலையில் பணி முடித்து விட்டு வங்கிக்குப் போகவே, 12 மணி ஆகுமாம். அதற்குள் பணம் தீர்ந்துவிடும் என்கிறார்.

சாப்பாட்டின் அளவும், தரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அரிசியை வேகவைத்து அதன் கஞ்சியை குடிக்கிறார்கள். உப்பு மட்டும் போதும் என்கிறார்கள். பால், டீ, காபி இவை குடிப்பது பெருமளவு குறைந்து விட்டது. வெறும் கஞ்சியில் உப்புப் போட்டு சாப்பிடுகிறார்கள். கற்பனை செய்து பாருங்கள் காலையில் 1 மணிக்கு வந்து வரிசையில் நின்று வெறும் 2000 பணம் அதுவும் எங்கள் பணம் எடுப்பதற்குள் அதைச் செலவு செய்ய சில்லறையும் இல்லாமல் திண்டாடும் மக்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று?

கச்சிராபளையத்தின் கதை இப்படி என்றால், கல்ராயன் மலையின் உச்சியில் இருக்கும் வெள்ளிமலையின் கதை இன்னும் தீவிரமானது. சுற்றிலும் இருக்கிற 30 கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு வெள்ளிமலையில் இருக்கும் அந்த இந்தியன் வங்கி மட்டுமே ஒரே வாய்ப்பு. நாங்கள் அங்கு செல்லும் போது 7.30 மணி இருக்கும். வங்கிக்குள் செல்வதற்கு அடிதடி நடக்கிறது. புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது கூட்டத்தின் ஒரு பகுதியைத்தான். வயதான் பெண்கள், கண் தெரியாதவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் அனைவரும் இந்தக்கூட்ட நெரிசலுக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். புதுசா வெளியாகும் ரஜினி படத்தின் டிக்கெட் கவுண்டர் போன்று, அங்கு நடக்கும் நெரிசலும் அடிதடியும் பதைபதைக்கச் செய்கிறது. ஒருவர், பொங்கல் பண்டிகை வருகிறது எப்படி சமாளிப்பது என்று புலம்புகிறார். இன்னொருவர், டூவீலரில் கியாஸ் அடுப்பு சர்வீஸ் செய்கிறவர். இரண்டு குழந்தைகளுடன், மனைவியையும் வைத்துக் கொண்டு மலைகளில் சென்று பிழைப்பு நடத்துகிறார். சராசரியாக, 500 முதல் 600 வரை சம்பாதிக்கும் அவர் தற்போது 50 ரூபாய்தான் கிடைக்கிறது என்கிறார். எப்படி பெட்ரோல் போடுவது? எப்படி சாப்பிடுவது? என்கிறார். இன்னும் ஒரு மாதத்திற்குக்கூட தாக்குப் பிடிக்காது என்கிறார். சாவதைத் தவிர வேறு வழியில்லை, அப்படிச் செத்தாலும் கூட இறப்புச் செலவுக்கு என்ன செய்வது என்று தெரியலை என்கிறார். மக்கள், “நாங்கள் மடிஞ்சு போறோம் கறுப்புப் பணத்தை நீங்கள் கண்டுபிடியுங்கள்” என்கிறார்கள்.

மோடி அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்: “என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் என்று மக்களிடம் தப்பித் தவறிக் கூட கேட்டு விடாதீர்கள்”. அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு தற்கொலை மட்டுமே.

தயாளன், ஊடகவியலாளர். நியூஸ்18 தமிழில் பணிபுரிகிறார்.