மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள சூழலில், மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சென்னை மேடவாக்கம் பகுதியில் பணம் வராத ஏடிஎம் மையத்தின் முன்பாக மலர் வளையம் வைக்கும் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவலர்கள் சிலர் பாலியல் ரீதியான தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கின்றனர். அதை எதிர்த்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதனை படம் பிடிக்க சென்ற தீக்கதிர் நிருபர் காவஸ்கர் மீதும் தாக்குதல் நடத்தி அவருடைய கேமராவையும் பறித்து காவல்துறையினர் அரஜாக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஊடகத்துறையினரின் செயல்பாட்டை தடுக்கும் காவல்துறையினரின் ஜனநாயக போக்கை பலரும் கண்டித்து வருகின்றனர். சென்னையில் இயங்கும் ஊடக சங்கங்கள் மவுனம் காத்துவரும் நிலையில், கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பில் சென்னை பள்ளிக்கரனை காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் தலைவர் ஸ்ரீதர் செயலாளர் சாதிக் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மேடவாக்கத்தில் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்க பள்ளிக்கரனை காவல்துறையினர் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். இதனை செய்தி சேகரிக்கச் சென்ற தென்சென்னை தீக்கதிர் நிருபர் செ. கவாஸ்கர் மீது பள்ளிக்கரணை போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவரது கேமிரவையும் பறித்துச் சென்றுள்ளனர். பள்ளிக்கரனை காவல்துறையினரின் இந்த செயலை கோயமுத்தூர் பிரஸ் கிளப் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. செய்தியாளர்கள் தங்களுடைய கடமையை செய்யவிடாமல் காவல்துறையினர் தங்கள் மீதான தவறை ஊடகத்தின் பார்வையில் இருந்து மறைப்பதற்கு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், சமீப காலமாக ஊடகத்துறையினர் மீது இதுபோன்ற தாக்குதல் நடப்பதும், ஊடகவியலாளரின் உடமைகளை பறிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெறுவது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. தமிழக அரசும், காவல்துறையின் தலைவரும் உடனடியாக தலையீட்டு சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோயமுத்தூர் பிரஸ்கிளப் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தீக்கதிர் செய்தி உதவியுடன்