அன்புசெல்வம்

அன்பு செல்வம்
அன்பு செல்வம்

மதம், சாதி, இனம், மொழி இவற்றின் பெய‌ரைச் சொல்லி தேர்தலில் வாக்கு சேகரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் மஹாராஷ்டிராவின் மனோகர் ஜோஷி (பாஜக) பிரச்சாரத்தை முன்வைத்து தொடர‌ப்பட்ட இவ்வழக்கின் தீர்ப்பு இது. இத்தீர்ப்பின் இருபெரும் நகலை படித்த பிறகே ஜோஷி வெற்றி பெற்றதை ரத்து செய்யாதது ஏன் என்பதை அறிய முடியும். ஆனால் அரசியல் கட்சிகளிடையே இத்தீர்ப்பு அதிமுக்கிய கவனத்தைப் பெறப்போவதில்லை.

பெரும்பாண்மையான கட்சிகள் இன்றைக்கு சாதியை, மதத்தை வெளிப்படையாகச் சொல்லி வாக்கு கேட்பதில்லை. அதற்கான வேறொரு பிரதான‌ வடிவத்தை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். குறிப்பிட்ட சிற்சில இடங்களில் புதிய சாதிய வாதத்தை, மதவாதத்தை விரும்புகிற சில கட்சிகள் இன்றும் பகிரங்கமாக‌ செய்து வருகின்றன.

அதையும் கடந்து கவனிக்க‌த்தக்கது எதுவென்றால், ஒவ்வொரு கட்சியும் அந்தந்த வேட்பாளர்களை இன்ன சாதி, இன்ன மதம் எது என்பதைத் தெரிந்து கொண்டுதான் வேட்பாளர்களையே தேர்வு செய்கிறது. எண்ணிக்கைப் பெரும்பான்மையில் அதிகம் இருக்கிற குறிப்பிட்ட சிறுபான்மை மதத்தவரையும், குறிப்பிட்ட சாதியினரையும் வேட்பாளர்களாக நிறுத்துகிற சாதிய – மதம் சார் மரபு எல்லா கட்சிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. அத‌னால் தான் அவரால் தேர்தலில் போட்டியிட முடிகிறது. இதில் தனிவாக்காளர் தொகுதி மட்டும் விதிவிலக்கு.

தேர்தல் அரசியலில் மத ரீதியான, சாதி ரீதியான துவேஷங்கள் கூடாது என உண்மையிலேயே உச்சநீதி மன்றம் விரும்புமேயானால் எண்ணிக்கைப் பெரும்பான்மை சாதிகள், மதங்கள் கொண்ட தொகுதிகளில், எண்ணிக்கைப் பெரும்பாண்மைச் சமூகத்தின் அந்தந்த பிரதிநிதிகள் போட்டியிடக் கூடாது என அறிவிக்க வேண்டும். அத்தகைய நடைமுறை தான் என் சாதியினருக்கு, என் மதத்தினருக்கு வாக்களியுங்கள் என வெளிப்படையாக அறிவிக்கும் புதிய சாதிய வாத‌ – மதவாத‌ வாக்கு வங்கி அரசியல்.

தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் வட்டார சாதிய, மத அடையாளங்களின் தொகுதி வரையறையை எல்லா அரசியல் கட்சிகளும் சாதிய நல்லிணக்கத்துடன் அமைதியாக‌ உருவாக்கிவிட்ட பிறகு இது போன்ற தீர்ப்புகள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்? எந்த கட்சி இது குறித்து வெளியரங்கமாக விவாதிக்க விரும்பும் என்பது கேள்வி தான். எனினும், கால‌ம் கடந்தும் இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கிறதே என வரவேற்கலாம்.

அன்புசெல்வம், எழுத்தாளர்; ஆய்வாளர்.

தொடர்புக்கு : anbuselvam6@gmail.com