திமுக பொதுக்குழு கூட்டம் காலை 9 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், திமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். முதன் முறையாக திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்காமல் அக்கட்சியின் பொதுக்குழு நடக்கிறது.

இந்த கூட்டத்தில் திமுகவின் செயல்தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், செயல் தலைவருக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் அன்பழகன் முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிந்தார். இதற்கேற்ப திமுக சட்டவிதி 18ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கு வழங்கப்படும் என்றும் அதேசமயம் பொருளாளர் பதவியையும் ஸ்டாலின் வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பொறுப்பை ஏற்று பேசிய ஸ்டாலின், “சூழல்தான் என்னை செயல் தலைவராக ஆக்கியது. செயல் தலைவர் என்பதை பதவியாகக் கருதவில்லை. பொறுப்பாக கருதுகிறேன். ஓய்வுக்கே ஓய்வு கொடுக்கும் தலைவர் கலைஞருக்கு தற்போது ஓய்வு தேவைப்படுகிறது” என பேசினார்.