அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்

2008 ஆம் ஆண்டில் அமெரிக்க வங்கிகளின் நிதி நெருக்கடியால் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார தேக்க நிலையின் போது, இங்கிலாந்து ராணி, முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களிடம் ஒரு கேள்வி கேட்டாராம். இவ்வளவு அறிஞர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வு நிறுவனங்கள் இருந்தும் இவ்வாறு ஒரு நெருக்கடி வர உள்ளது என முன் கூட்டியே உங்களால் ஏன் சொல்ல இயலவில்லை? என்றாராம்.  முதலாளித்துவ அறிவாளிப் பிரிவினர் இந்நெருக்கடியை அவதானிக்க இயலாமைக்கு காரணம் உண்டு. அவர்களின் சொந்த அமைப்பு முறையின் பலவீனங்களை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலாது என்ற காரணம் முன் நிக்கிறது.

அவர்களின் சொந்த உற்பத்தி முறையே அவர்களுக்கான சவக் குழியை தோண்டுகிறது என்ற மார்க்சின் கூற்றை அவர்களால்
ஏற்றுக் கொள்ள இயலாதுதான். ஆனால் நமது கேள்வி என்னவென்றால், மார்க்சிய பொருளாதார அறிஞர்கள் இந்நெருக்கடிகளை எவ்வாறு விமர்சிக்கிறார்கள்? இந்நெருக்கடிகளின் தொடர்ச்சி எவ்வாறு இருக்கும் என ஆய்வதில் ஏன் சோர்ந்துபோயுள்ளனர் என்பது குறித்துத்தான். விளக்கினாலும், அதீத உற்பத்திதான் காரணம் என காலம் காலமாக சொல்கிற ஒரே கருத்தை, சமகால உற்பத்தி முறையின் மீதான எந்த ஆய்வும் இன்றி சொல்லி கடந்து விடுகிறார்கள்.

அமெரிக்காவைத் தொடர்ந்து கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி என தொடர்கிற பொருளாதார நெருக்கடிகள் உலகப் பொருளாதாரத்தை
சுற்றி வளைத்து வருகிற நிலையை மார்க்சிய பொருளாதார ஆய்வாளர்கள், நிலவுகிற முதலாளித்துவ அமைப்பின் பண்புகளை, நுணுக்கமாக பகுப்பாய்வு செய்து விமர்சிக்க வேண்டிய தேவை முன் எப்போதையும் விட தற்போது அவசியமாகிறது.

நூறாண்டுகளுக்கு முன்பாக ஏகாதிபத்தியத்தின் பண்புகள், குறிப்பாக அரசியல் பொருளாதாரத்தில் நிதி மூலதனத்தின்
எழுச்சிப் போக்கு குறித்து ஹோப்சன், ஹில்பிர்டின்க், லெனினின் ஆய்வுகளை சமகால சூழலோடு பொறுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. நிதி மூலதனத்தின் சுரண்டல், ஒட்டுண்ணித்தன பண்பு எவ்வாறு நாடுகளின் பொருளாதாரத்தை
சீரழிக்கிறது என்ற ஆய்வின் மீதான கவனத்தை மார்க்சியர்கள் மேற்கொண்டே ஆக வேண்டும்.
அவ்வாறான சமகால ஆய்வாளர்களில் இஸ்மாயில் ஹுசைன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துவருகிறார்.
லெனினுக்குப் பின், நிதி மூலதன வளர்ச்சிப் போக்குகள் மீதான ஆய்வுகளை, வரலாற்று ரீதியில் மார்க்சியர்கள் வளர்த்தெடுக்காதத்ததற்கு ஹுசைன் குறிப்பிடுகிற காரணம் கவனிக்கத்தக்கது. குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொழிற்துறை முதலீடுகள், மூலதனம் நிதி மூலதன வளர்ச்சியை மட்டுப்படுத்தியது முதற்காரணம். இரண்டாவதாக
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தீவிரமாக நடைமுறைக்கு வந்த சேம நல அரசுகளின் சமூக சீர்திருத்தல் திட்டங்கள், இந்த ஆய்வுகள் மீதான தேவையை மட்டுபடுத்திவிட்டது.

ஆனால் இந்த நிலைமைகள் இன்று முற்றாக மாறிவிட்டது. 70,80 களில் மீண்டும் நிதி மூலதனத்தின் ஆதிக்கம் நாடுகளின் அரசியல் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கிவிட்டது. 1929 வரையிலான பொருளாதார நெருக்கடிகளின் அடித்தளமாக தொழிற்துறை மூலதன நெருக்கடியும், மேலடுக்கு குமிழியாக நிதி மூலதனமும் இருந்தது.

ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளின் அடித்தளமாக நிதி மூலதன சிக்கல்களும், மேலடுக்கு குமிழியாக தொழிற்துறை உற்பத்தி மூலதன நெருக்கடி இருக்கிறது. ஊக வணிக முதலீடு, வட்டி மூலதன முதலீடு, வீட்டு மனைகள், வீடு போன்ற உற்பத்தி சாரா துறைகளில் முதலீடு செய்வதற்கான வங்கிகளின் கடன் செலாவணி அதிகரிப்பு போன்றவற்றின் ஆதிக்கப் போக்கே நிதி மூலதனத்தின் அடிப்படைப் பண்பாக உள்ளது. எந்தவொரு பொருளுற்பத்தி முறையிலும் ஈடுபடாமல்,தண்டமாக சொகுசாக அறைகளில் அமர்ந்துகொண்டு பணத்தை மேலதிக பண வேட்டைக்காக முதலீடு செய்வது நிதி மூலதன முதலீட்டின் சாரமாக உள்ளது.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக எழுச்சி பெற்று வருகிற நிதி மூலதன ஊக வணிக பொருளாதார நலனே, 90 களுக்கு பிந்தைய வங்கிகளின் திவால் நிலைமைக்கான, பொருளாதார நெருக்கடிகளுக்கான முழு முதற்காரணமாக இருக்கின்றன. அவ்வகையில், இந்திய வங்கிகளில் நாட்டின் நிதி மூலதனங்களை ஒன்று குவிப்பது, கடன் செலாவாணியை கண்மூடித்தனமாக அதிகரிப்பது, தொழில்துறை சாராத முதலீடுகளுக்கு கடன் வழங்குவது தீவிரமான நெருக்கடி நிலைக்கு இந்தியப் பொருளாதாரத்தை கொண்டு செல்லவுள்ளது. முன்னதாக அமெரிக்காவின் லேமென் வங்கி திவாலுக்கு இதுவே காரணமாக கூறப்பட்டது. இந்திய நிதிமூலதன ஏகபோக கும்பல்கள், பெரும் வரலாற்று திருப்புமுனை கட்டத்தில் கொண்டு வந்து தற்போது நிறுத்தியுள்ளனர்.

 அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது. புத்தக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.