செய்திகள்

“புத்தாண்டு பிறந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு இன்னும் விடிவுகாலம் ஏற்படவில்லை”

“புத்தாண்டு பிறந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு இன்னும் விடிவுகாலம் ஏற்படவில்லை” என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கருகிய பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட மரணங்களும், தரிசாகிப் போன நிலங்களைப் பார்த்து நிகழும் தற்கொலைகளும் இன்னும் தொடர்கிறது. இதுவரை உயிரிழந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி விட்டது. வேதனை தீயில் விவசாயிகளை தள்ளி விட்ட சாதனையைத்தான் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக செய்து காட்டியிருக்கிறது என்று விவசாயப் பெருமக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேற்று நேரில் சந்தித்து விவசாயிகளின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் நலன் காக்கும் விவாதங்கள் நடத்தி, “தமிழகத்தை வறட்சி மாநிலமாக” அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்ற, தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைத்த கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை முதலமைச்சர் உணர்ந்திருந்தாலும், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத, ஏதோ ஒரு நெருக்கடியில் அவர் இருக்கிறார் என்பதை அந்த சந்திப்பில் என்னால் உணர முடிந்தது.

அதிகாரத்தை திரைமறைவில் இருந்து வழிநடத்துபவர்களின் அலட்சியத்தால், நாட்டின் அச்சாணியாகத் திகழும் விவசாயிகளின் வாழ்வு பாலைவனமாகி விடக்கூடாது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற முடியாததாலும், பருவமழை பொய்த்ததாலும், அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காததாலும், அனைத்துத் தரப்பு விவசாயிகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனத் தி.மு.கழகம் உள்பட எதிர் கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதிமுக அரசு மீளா தூக்கத்தில் இருக்கிறது

திமுக சார்பில் நான் முதல்வரிடம் விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க நேரம் கேட்டவுடன், அவசர அவசரமாக மாநில அரசின் சார்பில் வறட்சி நிலவரத்தைப் பார்வையிட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் தாமதமான இந்த நடவடிக்கை இன்னும் எத்தனை விவசாயிகள் உயிரை பலி வாங்க போகிறதோ தெரியவில்லை.

அதே நேரத்தில், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கடுமையான வறட்சியின் பிடியில் விவசாயிகள் தவிப்பதாகவும், அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 176 தாலுகாக்களில், 139 தாலுகாக்களில் கடும் வறட்சியின் காரணமாக ரூ.12000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், ஒரு அறிக்கையை தாக்கல் செய்து, ரூ.4702 கோடி வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம், அம்மாநில முதல்வர் சித்தராமையா கோரிக்கையே வைத்து விட்டார். மத்திய அரசின் ஆய்வுக்குழு நேரில் பார்வையிட்டு அறிக்கை அளித்த நிலையில், கடந்த வாரம் டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்த கர்நாடக முதல்வர், வறட்சி நிவாரண நிதி வழங்கக்கோரி வலியுறுத்தினார். முதலில் 1000 கோடி ரூபாய் அளவில் நிவாரணம் தருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களுடனான பேச்சுவார்த்தையில் தெவிக்கப்பட்டாலும், கூடுதல் நிவாரணம் தேவை என்பதை, கர்நாடக அரசுத்தரப்பில் கடுமையாக வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில், இன்று மத்திய அரசு கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1788.44 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுபோலவே, பருவமழை பொய்த்ததால் பாதிப்புக்குள்ளான கேரளாவும் வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி, ஆய்வுகளை மேற்கொண்டு, மத்திய அரசிடம் நிதியினைக் கேட்டுள்ளது. அண்டை மாநிலங்கள் எல்லாம் அசுர வேகத்தில் தங்களின் மாநில விவசாயிகளுக்காக பாடுபட்டு மத்திய அரசிடம் உதவிகளை கோரிப்பெறுகின்ற நிலையில், அதிமுக அரசு மட்டும் ஆமை வேகத்தில் செயல்பட்டு, விவசாயிகள் நலன் பற்றி அக்கறை காட்டாமல் இருக்கிறது. அண்டை மாநிலங்களை விட மிகவும் அதிகமான, கடுமையான வறட்சியை தமிழகம் சந்தித்து வருகிறது. பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் பிரச்சினை மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. சென்னை மாநகரத்தில் ஒரு மாதத்திற்கு கூட குடிநீர் இருப்பு இல்லை என்று அதிர்ச்சி செய்திகள் வெளி வருகின்றன. ஆனால், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள மறுக்கிறது.

தமிழக அரசு இப்போது தாமதமாக அமைத்துள்ள ஆய்வுக்குழுவின் அறிக்கைக்குப் பிறகு, மத்திய குழு வருகை தரவேண்டும். அதன்பிறகு, மத்திய அரசிடமிருந்து உரிய வறட்சி நிவாரணம் பெற வேண்டும். இதற்குள் இன்னும் எத்தனை விவசாயிகளின் உயிர்களை பலி கொடுக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஆனால் அதிமுகவிலோ இருக்கின்ற முதல்வரை மாற்ற, அவருக்கு நெருக்கடி கொடுக்க எப்படி பேட்டி கொடுக்கலாம் ? என்ன மாதிரி அறிக்கை கொடுக்கலாம் ? என்பதில் அதீத அக்கறை காட்டி விவசாயிகள் நலனைப் புறக்கணித்து விட்டார்கள். நான் தயவுகூர்ந்து அதிமுக அரசை கேட்டு கொள்வது எல்லாம், தமிழகத்தில் இனி ஒரு விவசாயி கூட வறட்சியின் காரணமாக உயிரிழக்கக் கூடாது என்பது தான். ஆகவே, ஆளும் அ.தி.மு.க அரசு விரைந்து செயல்பட்டு, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, உரிய வறட்சி நிதியை உடனடியாக பெற வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையும், கருகும் பயிரால் வாடி வேதனையில் தவிக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.